ஒலிப்பெருக்கியைப் பிடித்து முழங்கிப் பேசுவது பெரிதல்ல... கறிஸ்தவத்தை வாழ்ந்து பேசுவதே பெரிது. கிறிஸ்தவம் என்பது கோலாகலமாக வாழ்வதல்ல, கொள்கையோடு வாழ்வது.
கடவுளின் திருவுளத்தை ஏற்காத யூதர்கள் வெகுவாகத் துன்புற்றனர். எனவே, நம் விருப்பத்தை நாடாமல் நம்மைப் படைத்துப் பராமரிப்பவரின் விருப்பத்தையே நாடுவோம். இதுவே இயேசு ஆண்டவரின் விண்ணப்பமும் ஆகும்.
இயேசுவும் மக்களோடு மக்களாக யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்று தம் பணிவாழ்வைத் தொடங்கி பலரின் நல்வாழ்வுக்கும் இன்று நமது வாழ்வுக்கும் வழி அமைத்தார். அவரது குணமளிப்பு நமக்கு இன்றியமையாதது. நமது துன்பத் துயரங்களிலும் அவர் நம்மை சோதித்தறிய விழைகிறார். உமது திருவுளப்படி எனக்கு ஆகட்டும் என்றோமானால் நலம் பெறுவோம்.
முதல் வாசகத்தில் பாபிலோனில் கடவுளுக்கு எதிரான தங்கள் குற்றங்களை எண்ணி, புலம்பிய யூதர்களுக்கு ‘புதிய வானத்தையும் புதிய பூமியை’ அருள்வேன் என்று கூறிய கடவுள் மனந்திரும்பினால் நம்மையும் கைவிடமாட்டார்.
கடவுளின் அழைப்பில் நம்பிக்கை வைப்போர் மீட்பு பெறுவர்.
அன்புறவில் பின்னி பிணைந்து இருக்கவேண்டிய நமது இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான். கெட்ட சூழலை நல்லதாக மாற்றுவதற்கு நாம் மாறவேண்டும். இது கடவுளின் இன்றைய எதிர்ப்பார்ப்பும் தவக்காலத்தின் அழைப்புமாகும்.
நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடர்கள் என்றால், பரிசேயர்கள் போலன்றி மனிதநேய அன்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை நினைவில் கொண்டு செய்பட வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை. இதுவே, இயேசுவின் எதிர்ப்பார்ப்பும் இத்தவக்காலத்தின் நினைவூட்டலுமாகும்.
அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும் என்பதை நினைவில் கொள்வோம். அப்போது, கடவுளின் கடைக்கண் பார்வையால் 'பேறுடையவர்' என நாம் போற்றப்படுவோம்.
“என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது” என்பதை ஏற்று, மனதோடு முழங்கியவாறு, அவரை நாடி வருவோம், .நம்மை நல்வழிபடுத்துவோம்... அவரது ஆற்றலிலும் குணப்படுத்துதலிலும் நம்பிக்கை கொள்வோம்.
நம்முடைய அன்பான தந்தையாம் கடவுள் நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது இத்தவக்காலத்தில் நமக்கு விடுக்கப்படும் செய்தியாகும். இரு கரங்களையும் விரித்தவராக அவர் காத்திருக்கிறார்.
நம் துன்பக் காலங்களில் நம்மை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பவர் அல்ல நம் கடவுள். உடுக்கை இழந்தவன் கைபோல (உடுத்தியுள்ள வேட்டி அவிழ்ந்து விழும்போது) உதவிக்கு வருபவர் போல நம் கடவுள் இருப்பார் என்பதை ஏற்று அவரோடு ஒப்புரவாகி ஒன்றிப்போம். ஏனெனில் அவரே நமது அடைக்கலப் பாறை.
நல்ல கிறிஸ்தவ இம்மை வாழ்வுக்கு நம்மை பயிற்றுவிக்கும் காலம். இன்பகரமான மறுமை வாழ்வுக்கு அடித்தளமிடும் உன்னத காலம். இன்று மனமாற்றத்திற்கு அழைக்கிறது இக்காலம்..
இத்தவக்காலப் பயணத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நாம், இறைப்பணியில் துன்பத் துயரங்களைச் சந்திக்கும் துணிவு மிக்கவர்களாக விளங்க அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளை அண்டி வர ஆன்மீகப் பயிற்சி தேவை. இப்பயிற்சிக்குரிய காலம் இத்தவக்காலம். முயற்சி செய்வோம். முயல்வோரை கடவுள் கைவிடுவதில்லை.