சட்டத்துறையில் பணியாற்றும் கத்தோலிக்க அருள்சகோதரிகளின் முதல் மாநாடு கென்யாவில் | Veritas Tamil

வத்திக்கான் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, திருச்சபைச் சட்டம் மற்றும் சிவில் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற 100-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க அருள்சகோதரிகள், ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாள்களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில், சட்டத்துறையில் பணியாற்றும் கத்தோலிக்க அருள்சகோதரிகளின் முதல் ஆப்பிரிக்க மாநாட்டில் (CASILEP) பங்கேற்க உள்ளனர்.

"திருச்சபைச் சட்டம் மற்றும் சிவில் சட்டப் பணிகளில் கத்தோலிக்க அருள்சகோதரிகளின் இறைவாக்கினர் சாட்சி" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாடு, சட்டப் பணியில் ஈடுபட்டுள்ள அருள்சகோதரிகளிடையே ஒத்துழைப்பு, தொழில்முறைப் பயிற்சி மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவை வலுப்படுத்துவதோடு, நீதி, மனித மாண்பு மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கென்யா அருள்சகோதரிகள் சங்கம் (AOSK) மற்றும் Conrad N. Foundation ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த முயற்சி, 2026 ஜனவரி 10 அன்று நைரோபி பேராயர் பிலிப் அன்யோலோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆப்பிரிக்காவில் தங்களது துறவறச் சபைகள் மற்றும் பணித்தளங்களில் தனித்தனியாகப் பணியாற்றும் அருள்சகோதரிகள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பொதுவான சவால்களை அடையாளம் கண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் நடைமுறை வழிகளை உருவாக்க இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக அமையும்.

மேலும், பல்வேறு நாடுகளில் மறைப்பணிகளை நிறுவுதல், சிவில் சட்டங்களுக்கு இணங்க செயல்படுதல், நிர்வாகச் சவால்கள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் (, உரிமை மீறல்கள், துறவற சமூகங்களில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு (Safeguarding) தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.

துறவற வாழ்வில் நம்பிக்கையை மீட்டெடுத்து, உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளாக இணக்கத் தீர்வுமுறை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்படும்.

இந்த மாநாட்டின் இறுதியில், ஆப்பிரிக்கா முழுவதும் சட்டத்துறையில் பணியாற்றும் கத்தோலிக்க அருள்சகோதரிகளின் வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் பரிந்துரைகள் மற்றும் எதிர்கால சட்டப் பணிக்கான வழிகாட்டல் ஆவணம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Survey Popup Image