ஆங்கிலம் இன்னும் 'தாய்மொழி அல்லாத மொழியா?': உச்ச நீதிமன்றக் கேள்வியால் தீவிரமடைந்த விவாதம் | Vertias Tamil
இந்தியாவின் பன்மொழிச் சமூகத்தில் ஆங்கில மொழியின் இடம் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஆங்கிலம் இன்னும் "தாய்மொழி அல்லாத மொழி" (non-native language) என்று கருதப்பட வேண்டுமா என்ற கேள்வியை இந்திய உச்ச நீதிமன்றம் எழுப்பியதைத் தொடர்ந்து இந்த விவாதம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவகாரம், 2020ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அமல்படுத்தி வரும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான ஜூலை 16ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற விசாரணையின்போது எழுந்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆங்கிலத்தை "தாய்மொழி அல்லாத மொழி" என்று வகைப்படுத்தியுள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்தியது. இந்திய அரசியலமைப்பில் "தாய்மொழி", "மாநில மொழி", "இந்திய மொழி" என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன; ஆனால் "தாயக மொழி" (native language) என்ற சொல்லுக்கு தெளிவான வரையறை இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதுகுறித்து மத்திய அரசும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ரைக்கியாவில் இருக்கும் 'அவர் லேடி ஆஃப் சேரிட்டி' (Our Lady of Charity) ஆலயத்தின் ஆங்கிலவழிப் பிரிவின் தலைவரான அருள்பணி சரஜ் குமார் நாயக் அவர்கள், இந்த விவாதம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், மொழி என்பது பிரிவினையை ஏற்படுத்துவதை விட ஒற்றுமையை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்."
மேலும், "ஆங்கிலம் வரலாற்றின் வழியாக இந்தியாவுக்கு வந்திருந்தாலும், பல தலைமுறைகளாக கோடிக்கணக்கான இந்தியர்கள் ஜெபிக்கவும், கற்கவும், கற்பிக்கவும், பணியாற்றவும், சமூகத்திற்கு சேவை செய்யவும் பயன்படுத்தும் மொழியாக மாறியுள்ளது. அது இந்தியர்களின் வாழ்வியலின் ஒரு பகுதியாகிவிட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
திருஅவை எப்போதும் மக்கள் தங்கள் தாய்மொழியில் இறைவழிபாடு செய்யவும், கல்வி கற்கவும் ஊக்குவித்ததோடு, உரையாடலையும் பரஸ்பர புரிதலையும் வளர்க்கும் மொழிகளையும் வரவேற்று வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
"ஒரு மொழி மற்றொரு மொழியை வெல்ல வேண்டும் என்பதே கேள்வி அல்ல; மாறாக, ஒவ்வொரு இந்தியக் குழந்தையும் தனது பண்பாட்டு வேர்களில் உறுதியாக நிலைத்து, உலகளாவிய சூழலில் தன்னம்பிக்கையுடன் பங்காற்றும் வகையில் வளர்க்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானது" என்று அவர் வலியுறுத்தினார்.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் பணியாற்றும் புனித அன்னாள் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி ஜோதி குமாரி நாயக் அவர்களும் இதே கருத்தை ஆதரித்தார்.
"ஒவ்வொரு மொழியும் அதை பேசும் மக்களின் மாண்பை பிரதிபலிப்பதால், ஒவ்வொரு மொழியும் மதிக்கப்பட வேண்டியது அவசியம்" என்று அவர் கூறினார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் மதிப்புமிக்க கருவியாக ஆங்கிலத்தை அவர் வர்ணித்தாலும், குழந்தைகள் தங்கள் தாய்மொழி மற்றும் பண்பாட்டு மரபுகளில் ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையை மதித்து, அதே நேரத்தில் மாணவர்கள் நாட்டிற்கும் உலகச் சமூகத்திற்கும் பங்களிக்கத் தயாராகும் வகையில், சமநிலையும் அனைவரையும் உள்ளடக்கிய மொழிக் கல்வி அணுகுமுறையை இந்த தேசிய விவாதம் உருவாக்கும் என்று நம்புகிறோம்" என்று அருட்சகோதரி ஜோதி கூறினார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அதன் இறுதித் தீர்ப்பு, இந்தியாவின் மொழிக் கொள்கையிலும், கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
