மறைப்பணியிலும் ஆன்மீகப் புதுப்பிப்பிலும் அருள்பணியாளர்களை உருவாக்க வலியுறுத்தும் FABC திருநிலையினர் குழாம் | Veritas Tamil
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது நிறைவிறுதிப்பேரவைக்கு ஆசிய நாடுகளின் ஆயர்கள் தயாராகி வரும் நிலையில், FABC திருநிலையினர் குழாம் அலுவலகம் (FABC Office for Clergy – FABC-OC), ஆன்மீகப் புதுப்பிப்பு பெற்ற, மறைப்பணிக்கான அர்ப்பணிப்புடன் கூடிய, ஒத்திசைவுப் பயண (Synodal) திருஅவையில் பணியாளர் தலைவர்களாக (Servant Leaders) சேவையாற்றக்கூடிய அருள்பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
2004ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அலுவலகம், ஆசியாவின் பல்வேறு சமூக, கலாச்சார, சமய மற்றும் மறைபரப்புப் பின்னணிகளில், ஆயர்கள், குருத்துவப் பயிற்சியாளர்கள் மற்றும் அருள்பணியாளர்களின் பணியையும் ஆன்மீக வாழ்வையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
"ஆசியாவில் ஆழமான ஆன்மீகப் புதுப்பிப்பும், உயிர்ப்புமிக்க விசுவாசமும், மறைப்பணிக்கான அர்ப்பணிப்பும் கொண்ட அருள்பணியாளர்களை உருவாக்குவது" என்பதே இவ்வலுவலகத்தின் முதன்மை நோக்கமாகும். ஆயர்களுடன் இணைந்து பயணித்து, ஆசிய மக்களின் வாழ்வியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, பங்கேற்பு நிறைந்த திருஅவையை உருவாக்கக்கூடிய அருள்பணியாளர்களை உருவாக்குவதே இதன் இலக்காகும்.
கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் வழியாக, குருத்துவப் பயிற்சியின் தொடக்க மற்றும் தொடர்ச்சியான உருவாக்கம், குருமடப் பயிற்சியின் புதுப்பித்தல், மேலும் அருள்பணியாளர்களுடன் தந்தை, சகோதரர் மற்றும் நண்பராக இணைந்து பயணிக்கும் ஆயர்களின் மேய்ப்புப் பணிக்கான வழிகாட்டுதலிலும் இந்த அலுவலகம் கவனம் செலுத்தி வருகிறது.
தொடங்கப்பட்டதிலிருந்து, ஆசியாவில் அருள்பணியாளர்களின் பணியிலும் உருவாக்கத்திலும் காணப்படும் முக்கிய சவால்களை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை FABC திருநிலையினர் குழாம் அலுவலகம் நடத்தியுள்ளது.
அதன் முதல் முக்கிய நிகழ்ச்சி, 2006ஆம் ஆண்டு மே 14 முதல் 19 வரை, தாய்லாந்தின் ஹுவா ஹின் நகரில் உள்ள சலேசியர் தியான மையத்தில் நடைபெற்றது. 14 ஆசிய நாடுகளிலிருந்து 73 குருமட அதிபர்களும் பயிற்சியாளர்களும் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், "அருள்பணியாளர்களின் மனித உருவாக்கம் – ஆசியச் சூழலின் சவால்கள்" என்ற தலைப்பில் நடைபெற்றது.
2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், "அருள்பணியாளர்களைக் கவனித்தல் – குறிப்பாக சிரமங்களை எதிர்கொள்ளும் அருள்பணியாளர்களுக்காக" என்ற தலைப்பில் ஆயர்களுக்கான கருத்தரங்கை அலுவலகம் ஏற்பாடு செய்தது. தனிப்பட்ட அல்லது மேய்ப்புப் பணிசார் சவால்களை எதிர்கொள்ளும் அருள்பணியாளர்களுக்கு துணைநிற்கும் அமைப்புகளை உருவாக்குமாறு ஆயர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
2008ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பாங்காக் நகரிலுள்ள Assumption பல்கலைக்கழகத்தில் இரண்டு முக்கிய கருத்தரங்குகள் நடைபெற்றன. செப்டம்பர் 8 முதல் 14 வரை நடைபெற்ற "அருள்பணியாளர்களைக் கவனித்தல் – காலத்தின் தேவை" என்ற கருத்தரங்கு, ஆசியச் சூழலில் அருள்பணியாளர்களின் அடையாளம், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு ஆயர்கள் வழங்க வேண்டிய ஆதரவு குறித்து கவனம் செலுத்தியது.
அதேபோல், நவம்பர் 17 முதல் 23 வரை நடைபெற்ற "கத்தோலிக்கக் குருத்துவம் – நவீன உலகின் சவால்" என்ற கருத்தரங்கு, அருள்பணியாளர்கள் தங்களது குருத்துவ அடையாளத்தை மீண்டும் ஆழமாக உணரவும், பணிவாழ்வில் இறைவனின் உடனிருப்பை அனுபவிக்கவும், குருத்துவ அழைப்பின் மகிழ்ச்சியைப் புதுப்பித்துக் கொள்ளவும் அழைப்பு விடுத்தது.
2011ஆம் ஆண்டில், "ஆசியத் திருஅவையில் குழந்தைகள் மீதான பாலியல் முறைகேடு நெருக்கடியின் தாக்கம்" என்ற தலைப்பில் ஆயர்களுக்கும் குருத்துவப் பயிற்சியாளர்களுக்கும் கருத்தரங்கை நடத்தி, திருஅவையில் உருவாகி வந்த புதிய சவால்களை FABC திருநிலையினர் குழாம் அலுவலகம் எடுத்துரைத்தது. தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு, "இன்றைய ஆசியத் திருஅவையின் நெருக்கடிகளின் சூழலில் குருத்துவத் துறவற வாழ்வை (Celibacy) வாழ்வதற்கான சமகாலச் சவால்கள்" என்ற தலைப்பில் மற்றொரு கருத்தரங்கையும் நடத்தியது.
2013ஆம் ஆண்டு, "ஆசியக் கண்டத்திற்கான முழுமையான, நேர்மறையான, திறன்மிக்க மற்றும் மனிதநேயப் பண்புகள் நிறைந்த அருள்பணியாளர்களை உருவாக்குதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு, அருள்பணியாளர்களின் ஒருங்கிணைந்த உருவாக்கத்தை மையமாகக் கொண்டிருந்தது.
2014ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பட்டாயா நகரில் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவப் பயிற்சியாளர்கள் ஒன்று கூடி, "புதுப்பிக்கப்பட்ட நற்செய்திப் பணியாளர்களாக ஆசியாவில் நற்செய்தியின் மகிழ்ச்சியை அறிவித்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், குருத்துவப் பணியின் மறைப்பணி பரிமாணம் குறித்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டனர்.
அண்மைக் காலங்களில், ஒன்றிணைந்த பயண (Synodal) உருவாக்கம் குறித்த கவனம் அதிகரித்துள்ளது. 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில், FABC திருநிலையினர் குழாம் அலுவலக உறுப்பினர்கள் இணையவழி சந்திப்புகள் மூலம், குருத்துவ உருவாக்கத்தின் கோணத்தில் ஒன்றிணைந்த பயணத்தை ஆராய்ந்ததுடன், பல்வேறு ஆசிய நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் அணுகுமுறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல்–மே மாதங்களில், FABC தனது 50ஆம் ஆண்டு ஆவணம் மற்றும் ஒன்றிணைந்த பயணத்திற்கான ஆயர் மாமன்றத்தின் (Synod on Synodality) வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, ஆசியாவின் முக்கிய குருமட அதிபர்களுக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தியது. குருமடங்களுக்கான உருவாக்க வளங்கள் மற்றும் பயிற்சிப் பொருள்களை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.
FABC திருநிலையினர் குழாம் அலுவலகத்தின் கருத்துப்படி, ஒன்றிணைந்த பயண உருவாக்கம் இன்று திருஅவையின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக மாறியுள்ளது. கட்டளை வழங்கும் தலைமைத்துவ முறையைத் தாண்டி, பொறுப்பைப் பகிர்ந்து ஏற்றல், ஒத்துழைப்பு, கேட்டறிதல் மற்றும் உடனிருந்து துணைநிற்றல் ஆகிய பண்புகளைக் கொண்ட மேய்ப்புப் பணிக்கே அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.
மேலும், ஒன்றிணைந்த பயணம் என்பது வெறும் நிர்வாக அமைப்போ அல்லது ஒரு செயல்திட்டமோ அல்ல; அது திருஅவையாக வாழும் வாழ்க்கைமுறை என்று இவ்வலுவலகம் வலியுறுத்துகிறது. குறிப்பாக, எண்ணிம யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் சவால்களுக்கு மத்தியில், கிறிஸ்துவின் பணியாளர் தலைமைத்துவத்தை மையமாகக் கொண்ட ஆன்மீக வாழ்வை அருள்பணியாளர்களும் ஆயர்களும் தங்களுடையதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அது அழைப்பு விடுக்கிறது.
FABC திருநிலையினர் குழாம் அலுவலகம், துறவற வாழ்வு, பொதுநிலையினர் மற்றும் குடும்பம், கல்வி மற்றும் விசுவாச உருவாக்கம் ஆகிய FABC-இன் பிற அலுவலகங்களுடனும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. ஒன்றிணைந்த பயணம் என்பது முழு திருஅவையையும் உள்ளடக்கிய உருவாக்கப் பயணம் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள FABC-இன் 12ஆவது நிறைவிறுதிப்பேரவை, ஆசியாவில் ஒன்றிணைந்த பயண திருஅவையை உருவாக்குவது குறித்த சிந்தனையை, குறிப்பாக அருள்பணியாளர்களின் பங்கு, அடையாளம் மற்றும் உருவாக்கம் ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்தும் என்று இவ்வலுவலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது FABC திருநிலையினர் குழாம் அலுவலகத்தின் தலைவராக பணியாற்றும் பேராயர் உதுமலை பாலா, இவ்வலுவலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் பணிகளை ஆதரித்து வந்த FABC மத்திய அலுவலகம், தலைவர் கர்தினால் பிலிப்பே நேரி ஃபெர்ராவ், முன்னாள் தலைவர்கள், செயல் செயலாளர்கள், ஆயர் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
