மறைக்கல்வி மற்றும் நம்பிக்கை உருவாக்கப் பணியை வலுப்படுத்தும் FABC | FABC | Veritas Tamil

இந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) நிறைவிறுதி கூட்டத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் முக்கிய அருள்பணித் துறைகளில் ஒன்றான கல்வி மற்றும் நம்பிக்கை உருவாக்க துறை (Office of Education and Faith Formation – OEFF), ஆசியத் திருஅவையில் நம்பிக்கை உருவாக்கம், மறைக்கல்விப் புதுப்பிப்பு மற்றும் கத்தோலிக்கக் கல்விப் பணியை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

முன்னர் கல்வி மற்றும் மாணவர் அருள்பணித் துறை (Office of Education and Student Chaplaincy – OESC) என அறியப்பட்ட இந்த துறை, மறைக்கல்வித் தலைமைத்துவத்தை மேம்படுத்துதல், முழுமையான நம்பிக்கை உருவாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆசிய நாடுகளின் ஆயர் பேரவைகளில் நடைபெறும் கத்தோலிக்கக் கல்விப் பணிகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆசிய நாடுகளின் கல்வி மற்றும் மறைக்கல்வி ஆணையங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தி, திருஅவையின் கல்வி மற்றும் மறைக்கல்வி சார்ந்த முன்னுரிமைகளை நிறைவேற்றுவதையும், ஆசியத் திருஅவைகளுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதையும் இந்த துறை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கல்வி மற்றும் மறைக்கல்வித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வலையமைப்பாகச் செயல்பட்டு, உள்ளூர் திருஅவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், அருள்பணித் திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் FABC-யின் உலகளாவிய மாமன்ற (Synodal) நோக்கங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

தொடங்கப்பட்டதிலிருந்து கல்வி மற்றும் மறைக்கல்வி தொடர்பான பல கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை இந்த துறை நடத்தியுள்ளது. அவற்றில் மூன்று முக்கியமான மாநாடுகள் ஆசியாவில் மறைக்கல்விப் பணிக்கான முக்கிய ஆவணங்களை உருவாக்கியுள்ளன.

1995-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற பான்-ஆசிய மறைக்கல்வி மாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட “A Renewed Catechesis for Asia: Towards the Year 2000 and Beyond” என்ற ஆவணம், ஆசியாவில் மறைக்கல்விக்கான புதிய பார்வைக்கு அடித்தளமிட்டது.

அதனைத் தொடர்ந்து, 2006-ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக்கில் ஆசிய யதார்த்தங்களின் சவால்கள்: குடும்ப மறைக்கல்வி” என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 2004-ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற FABC-யின் எட்டாவது நிறைவிறுதிக் கூட்டத்தில் குடும்பம் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, மாறிவரும் ஆசியச் சூழலில் குடும்பம் நம்பிக்கையைப் பரிமாறும் முதன்மை இடமாக எவ்வாறு அமைய முடியும் என்பது குறித்து இக்கூட்டம் ஆராய்ந்தது.

2022-ஆம் ஆண்டு, தற்போதைய OEFF என்ற பெயரில், Antiquum Ministerium என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆவணத்தை மையமாகக் கொண்டு இணையவழி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆசிய நாடுகளின் ஆயர் பேரவைகள் மற்றும் மறைக்கல்வி ஆணையங்களைச் சேர்ந்த 106 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பொதுநிலையினரின் மறைக்கல்விப் பணியை அதிகாரப்பூர்வ திருப்பணியாக அங்கீகரிக்கும் திருத்தந்தையின் அழைப்பை ஆராய்ந்த இக்கூட்டம், அதன் இறுதி அறிக்கையையும் செயல்முறைக் குறிப்புகளையும் வெளியிட்டது.

இந்த முக்கிய ஆவணங்களையும் FABC-யின் பிற வழிகாட்டல் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு, ஆசியாவில் மறைக்கல்விப் பணிக்கான எட்டு முக்கிய முன்னுரிமைகளை கல்வி மற்றும் நம்பிக்கை உருவாக்கத் துறை (OEFF) முன்வைத்துள்ளது.ஆசிய மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை மையமாகக் கொண்ட மறைக்கல்வி, உரையாடலை ஊக்குவித்தல், ஆசிய இயேசுவின் முகத்தை உலகிற்கு வெளிப்படுத்துதல், குடும்பங்களை நம்பிக்கை உருவாக்கத்தின் முதன்மை மையமாகக் கருதுதல், இளைஞர்களுக்கு பொருத்தமான மற்றும் அர்த்தமுள்ள மறைக்கல்வியை வழங்குதல், பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து ஊக்குவித்தல், சமூக, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மறைக்கல்வியைப் புதுப்பித்தல், மேலும் நமது பொதுவான இல்லமான படைப்புலகைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வை வளர்த்தல் ஆகியவையாகும். இந்த முன்னுரிமைகள், 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாங்காக் ஆவணத்தில் இடம்பெற்றுள்ள FABC-யின் ஒன்பது அருள்பணித் திட்ட முன்னுரிமைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

இந்த துறையின் தலைவராக இந்தோனேசியாவின் பாண்டுங் மறைமாவட்ட ஆயர் அந்தோனியுஸ் சுபியான்டோ புஞ்சாமின் அவர்கள் பணியாற்றுகிறார். அவருக்கு மலேசியாவின் கோலாலம்பூர் பேராயர் ஜூலியன் லியோ பெங் கிம், ஹாங்காங் துணை ஆயர் ஜோசப் ஹா சி-ஷிங், பிலிப்பைன்ஸின் கொடபாட்டோ பேராயர் சார்லி எம். இன்சோன், தென்கொரியாவின் இஞ்சோன் ஆயர் ஜான் பாப்டிஸ்ட் ஜங் ஷின்-சுல் ஆகியோர் துணையாக உள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீவன் செல்வராஜு அவர்கள் அலுவலகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள FABC நிறைவிறுதிக் கூட்டத்தை முன்னிட்டு, நம்பிக்கை உருவாக்கம், மறைக்கல்விப் புதுப்பிப்பு மற்றும் கல்விசார் ஒத்துழைப்பில் OEFF தொடர்ந்து மேற்கொண்டு வரும் பணிகள், ஆசியத் திருஅவையின் எதிர்காலம் நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சார மற்றும் சமூகச் சூழல்களில் தங்கள் நம்பிக்கையை வாழ்ந்து சாட்சியமளிக்கும் சீடர்களை உருவாக்குவதிலும் தங்கியுள்ளது என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றன.

Tamil Survey Popup Image