கர்தினால் தாக்லேவின் ஆன்மிக வழிநடத்தலுக்கு FABC தலைவர் கர்தினால் ஃபெராவ் நன்றியுரை | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவரான கர்தினால் ஃபிலிப் நேரி ஃபெராவ் அவர்கள், ஜூலை 22 அன்று நடைபெற்ற FABC-யின் 12ஆவது பேரவைக் கூட்டத்தின் செப மற்றும் ஆன்மிகத் தியான நாளை வழிநடத்திய கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் முலியாவின் Gerbera Room-இல் இடம்பெற்ற ஒருநாள் ஆன்மிகத் தியானத்தின் நிறைவாக அர்ப்பணிக்கப்பட்ட திருப்பலிக்குப் பிறகு உரையாற்றிய கர்தினால் ஃபெராவ் அவர்கள், தியான இயக்குநராகப் பொறுப்பேற்றதற்காக மட்டுமன்றி, பேரவையின் தொடக்க நாள்களிலிருந்தே ஆயர்களுடனும் பிரதிநிதிகளுடனும் சகோதரராக இணைந்து பயணித்ததற்காகவும் கர்தினால் தாக்லே அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த ஆன்மிகத் தியானம், பேரவையின் பணிகளை முன்னெடுக்க தேவையான ஆன்மிகத் தயாரிப்பை அனைவருக்கும் வழங்கியதாக அவர் கூறினார்.

"கடந்த இரண்டு நாட்களாக கர்தினால் தாக்லே எங்களுடன் சகோதரராக இருந்து, இந்த செப மற்றும் தியான நாளை சிறப்பாக வழிநடத்தினார். பேரவையின் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சரியான மனநிலையையும் ஆன்மிகத் திசையையும் அவர் எங்களுக்கு அளித்தார்," என்று கர்தினால் ஃபெராவ் அவர்கள் தெரிவித்தார்.

உரையின்போது நகைச்சுவையூட்டும் ஒரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். தனது குருத்துவப் பயிற்சி காலத்தில், முதல் பொதுச் சொற்பொழிவை நிகழ்த்திய ஒரு புதிய அருள்பணியாளரின் உரை "மக்களை நகர்த்தியது, அமைதிப்படுத்தியது, திருப்திப்படுத்தியது" என்று கூறப்பட்டதாகவும், பின்னர் அதற்கான விளக்கம், மக்கள் அரங்கிலிருந்து வெளியேறிவிட்டனர், சிலர் தூங்கிவிட்டனர், இனி அவரை மீண்டும் அழைக்க வேண்டியதில்லை என்ற திருப்தியுடன் சென்றனர் என்பதாக இருந்ததாகவும் அவர் சிரிப்புடன் கூறினார்.

"அந்த மூன்று சொற்களை நான் பயன்படுத்தப் போவதில்லை. ஆனால் கர்தினால் தாக்லே அவர்களே, உங்கள் உரைகள் எங்கள் இதயங்களைத் தொட்டன; எங்களை ஊக்கப்படுத்தின; மேலும் எங்களை ஒளியூட்டின," என்று அவர் கூறியபோது அரங்கில் இருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டினர்.

தியான நாள் முழுவதும், ஆசியாவில் "பணியிலும் ஒன்றிப்பிலும் பாலங்களாக மாறுதல்" என்ற பேரவையின் மையக் கருத்தை மையமாகக் கொண்டு, கிறிஸ்துவுடனான ஆழமான சந்திப்பை வளர்த்துக்கொள்ள கர்தினால் தாக்லே அவர்கள் அனைவரையும் அழைத்தார்.

அவரது தியான உரைகள், மாமன்ற மனமாற்றத்தை வளர்த்துக்கொள்வது, சாதாரண மனிதர்களிலும் அன்றாட நிகழ்வுகளிலும் இறைவன் செயல்படுவதை உணர்வது, மேலும் பிறரை முன்முடிவுகளுடன் அல்லாமல் நம்பிக்கையும் இரக்கமும் நிறைந்த இயேசுவின் பார்வையோடு காணக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன.

"இயேசுவைச் சந்தித்து அவரை அனுபவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் எங்களுக்கு உணர்த்தினீர்கள். நாம் உண்மையில் பாலங்களாகவும் பாலங்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க விரும்பினால், இயேசுவின் பார்வையையும், நமது வாழ்விலும் திருஅவையிலும் சமூகத்திலும் இறைவன் செய்து வரும் மகத்தான செயல்களை அறியும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்," என்று கர்தினால் ஃபெராவ் அவர்கள் கூறினார்.

கர்தினால் தாக்லே மற்றும் FABC இடையேயான நீண்டகால உறவையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த ஆண்டைய பேரவைக் கூட்டம், கர்தினால் தாக்லே அவர்கள் பங்கேற்ற ஏழாவது FABC பேரவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நீங்கள் FABC குடும்பத்தின் ஒருவரே. தற்போது உரோமில் உங்கள் முக்கியமான பணியை மேற்கொண்டு வருகிறீர்கள் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் சவாலான திருப்பணிக்காக எங்கள் சகோதரத்துவ ஒற்றுமையையும் இடைவிடாத செப ஆதரவையும் உறுதியளிக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

மேலும், "நீங்கள் திருத்தந்தையுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதால், எங்களின் மகன்பாசமிக்க பற்றுறுதியையும், அவருக்காக நாங்கள் இடைவிடாது ஏறெடுக்கும் செபங்களின் உறுதியையும் திருத்தந்தையிடம் தெரிவித்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் கர்தினால் ஃபெராவ் அவர்கள் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஆப்பிரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (SECAM) தலைவரான கர்தினால் ஃபிரிடோலின் பெசுங்கு அம்போங்கோ அவர்களுக்கும், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய ஆயர் பேரவையின் (CELAM) தலைவரான கர்தினால் ஜெய்மி ஸ்பெங்லர் அவர்களுக்கும் ஆலோசகர்களாகப் பங்கேற்றதற்காக அவர் நன்றியைத் தெரிவித்தார்.

இறுதியாக, திருவழிபாட்டு குழுவினருக்கும், துறவியர், அருள்பணியாளர்கள், மேலும் இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோரஸ் தீவின் ருடெங் மறைமாவட்டத்தைச் சேர்ந்த Prima Unggul கத்தோலிக்க சிறார் இல்லக் குழுவினருக்கும், விழா முழுவதும் செபமயமான சூழலை உருவாக்கியதற்காக கர்தினால் ஃபெராவ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Tamil Survey Popup Image