ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு புனித பூமி ஊடக நிபுணர் அழைப்பு | Veritas Tamil

கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், தாங்கள் என்ன சொல்ல வேண்டும் அல்லது எவ்வாறு மறைப்பணி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, மக்களையும் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களையும் முதலில் புரிந்துகொண்டு, அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று புனித பூமியைச் சேர்ந்த ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் இலத்தீன் முதுபெரும் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஜெருசலேம் மறைமாவட்டத்தின் ஊடக அதிகாரியான மிரால் அடிக் (Miral Atik), செப்டம்பர் 11 அன்று கியூசான் நகரில் நடைபெற்ற முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையில், “ஆசியாவின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளுதல்” என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் தனிப்பட்ட சந்திப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்ற இந்தப் பேரவை, ஆசியா முழுவதிலுமிருந்து கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களை ஒன்றிணைத்து, வேகமாக மாறிவரும் டிஜிட்டல் கலாச்சாரத்தில் திருச்சபையின் பணியைப் பற்றி சிந்திக்கச் செய்தது.

“ஒவ்வொருவரும் என்ன அனுபவித்து வருகின்றனர் என்பதை அறிந்துகொண்டு, அவர்களுக்குச் செவிசாய்ப்பது மிகவும் முக்கியம். அதன் பின்னரே அவர்களுக்குப் பணியாற்ற வேண்டும்,” என்று அடிக் கூறினார்.

இந்த அணுகுமுறை புனித பூமியில் மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெருசலேம் மறைமாவட்டம் ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் சைப்ரஸ் ஆகிய பகுதிகளில் வாழும் கத்தோலிக்க சமூகங்களுக்கு பணியாற்றி வருகிறது.

இந்தப் பகுதிகளில் வெவ்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகச் சூழல்கள் காணப்படுகின்றன. அதேவேளை, தொடர்ந்து நிலவும் மோதல்கள் மற்றும் துயரங்கள் காரணமாக, ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் அனுபவங்கள் பெரிதும் மாறுபடுகின்றன.

“வடக்குப் பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சூழல், மேற்குக் கரையில் வாழும் மக்களின் சூழலிலிருந்து வேறுபட்டது. அதேபோல், காசாவில் வாழும் மக்களின் அனுபவமும் வேறுபட்டது, என்று அவர் கூறினார்.

இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, திருச்சபையின் தகவல் தொடர்பாளர்கள் மக்களின் சூழ்நிலையை முதலில் புரிந்துகொள்ளாமல் அனைவருக்கும் ஒரே செய்தியை வழங்க முடியாது என்று அடிக் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக, முதலில் மக்களுக்குச் செவிசாய்த்து, அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அந்த வாழ்வியல் சூழலுக்குள் அவர்களுடன் உடனிருந்து பயணிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த அணுகுமுறையை இயேசுவின் பணியோடும் அவர் தொடர்புபடுத்தினார். இயேசு மக்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களுக்குப் பதிலளித்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

“அவர் அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களைச் சந்தித்தார்,” என்று அடிக் கூறினார்.

புவியியல் மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து, ஒரே பதிவு, காணொளி அல்லது செய்தியின் மூலம் மிகப்பெரிய மக்களைச் சென்றடையக்கூடிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு இந்தக் கொள்கை மிகவும் முக்கியமானது.

ஆனால், டிஜிட்டல் தளங்களின் பரந்த சென்றடைவு, திரைக்குப் பின்னால் இருக்கும் மக்களைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையை நீக்கிவிடாது.

அடிக்கின் பார்வையில், தகவல் தொடர்பு என்பது சந்திப்பிலிருந்தே தொடங்குகிறது. உண்மையான மனிதர்கள், அவர்களின் அனுபவங்கள், அவர்களின் கேள்விகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து உள்ளடக்கங்கள் உருவாக வேண்டும்.

ஜெருசலேம் மறைமாவட்டத்தின் ஊடக அதிகாரியாக அவர் மேற்கொள்ளும் பணியும் இதனைப் பிரதிபலிக்கிறது. ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் சைப்ரஸ் பகுதிகளில் உள்ள உள்ளூர் திருச்சபையின் வாழ்க்கையைப் பதிவு செய்து, உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக கட்டுரைகள், காணொளிகள் மற்றும் பல்வேறு ஊடக உள்ளடக்கங்களை அவர் தயாரித்து வருகிறார்.

மோதல்களால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் பணியாற்றுவது தகவல் தொடர்பாளர்களுக்கு நுட்பமான சவாலையும் ஏற்படுத்துகிறது. மக்களின் துயரங்களையும் அவர்களைச் சுற்றியுள்ள உண்மை நிலவரங்களையும் திருச்சபையின் தகவல் தொடர்பாளர்கள் ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், கத்தோலிக்க தகவல் தொடர்பு வெறும் அரசியல் சார்ந்ததாக மாறிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அடிக் கூறினார்.

மக்களுக்கு அறிவிக்கப்படும் நற்செய்தியை, அவர்களின் வாழ்விலிருந்து பிரிக்க முடியாது. அதேவேளை, தகவல் தொடர்பு திருச்சபையின் பணியை மையமாகக் கொண்டதாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கலாச்சாரம், மதம் மற்றும் சமூகப் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களில் பணியாற்றும் ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு அடிக்கின் அனுபவம் ஒரு நடைமுறை வழிகாட்டுதலை வழங்குகிறது:

“மக்கள் இருக்கும் இடத்திற்கே முதலில் சென்று அவர்களைச் சந்தியுங்கள்; அதன் பின்னர் அவர்கள் திருச்சபை இருக்கும் இடத்திற்கு வருமாறு அழைக்கலாம்.”

டிஜிட்டல் தளங்கள் திருச்சபையின் சென்றடையும் திறனை விரிவுபடுத்தலாம். ஆனால், அர்த்தமுள்ள நற்செய்திப் பணிக்கு தனிநபரையும், அவர் வாழும் சமூகத்தின் உண்மை நிலவரத்தையும் கவனத்தில் கொள்வது தொடர்ந்து அவசியமாகிறது.

இறுதியில், அடிக்கின் செய்தி சிறந்த டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்குவது பற்றியது மட்டுமல்ல. முதலில் செவிசாய்த்து, மக்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்வியல் அனுபவங்களுக்கேற்ப திருச்சபை அவர்களுடன் எவ்வாறு உடனிருந்து பயணிக்க வேண்டும் என்பதை உருவாக்கும் ஒரு மறைப்பணி மனப்பாங்கை வளர்த்துக்கொள்வது பற்றியது.

Tamil Survey Popup Image