புலம்பெயர்ந்தோர் நலனில் திருஅவை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தல் | Veritas tamil
போர்கள், வன்முறைகள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் சர்வதேச உதவி நிதி குறைவு ஆகியவற்றால் உலகளவில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் குறிப்பாக இடம்பெயர்ந்த குழந்தைகளின் உரிமைகளையும் மாண்பையும் பாதுகாப்பதில் கத்தோலிக்கத் திருஅவை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
நவம்பர் 10ஆம் தேதி, உரோமையில் நவம்பர் 10 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றுவரும் பன்னாட்டு கத்தோலிக்கப் புலம்பெயர்ந்தோர் ஆணையத்தின் (ICMC) குழுக் கூட்டத்திற்காக வெளியிட்ட காணொளிச் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டம், பன்னாட்டு கத்தோலிக்கப் புலம்பெயர்ந்தோர் ஆணையம் தொடங்கப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெறுகிறது. 1951ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், பின்னாளில் திருத்தந்தை ஆறாம் பவுலாகப் பொறுப்பேற்ற கர்தினால் ஜியோவானி பத்திஸ்தா மோந்தினி மற்றும் அமெரிக்க பொதுநிலையினர் ஜேம்ஸ் நோரிஸ் ஆகியோரால் இவ்வாணையம் தொடங்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஆயர் பேரவைகள் மற்றும் உள்ளூர் திருஅவைகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, புலம்பெயர்ந்த மக்களின் நலனுக்காக இவ்வாணையம் செயல்பட்டு வருகிறது.
தனது செய்தியில், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவோரைக் கனிவுடன் வரவேற்பது, பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவது மற்றும் சமூகத்தில் ஒருங்கிணைப்பது ஆகிய பணிகளில் திருஅவையின் சேவைகளை வலுப்படுத்தும் உன்னதமான பணியைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, இடம்பெயர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறியுமாறு ஆணையத்தினருக்கு அறிவுறுத்தினார். குழந்தைகள் தங்கள் இல்லங்களையும் நாடுகளையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணங்களைக் களைய, அவர்களின் சொந்த நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதேவேளை அவர்கள் பயணிக்கும் இடைநிலை நாடுகளிலும் தஞ்சம் புகும் நாடுகளிலும் உரிய பாதுகாப்பும் வரவேற்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பிற சமய அமைப்புகள் மற்றும் குடிமைச் சமூகக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவதன் வழியாக, புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு இறைவன் அளித்துள்ள மாண்பையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய மனிதாபிமானச் சூழலை எடுத்துரைத்த திருத்தந்தை, போர்கள், வன்முறைகள், அநீதிகள், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாகப் பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் நாடுகளையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழல்கள், மக்கள் வெளியேறும் நாடுகள் மட்டுமின்றி, அவர்கள் பயணிக்கும் இடைநிலை நாடுகள் மற்றும் தஞ்சம் தேடும் நாடுகளிலும் கடுமையான மனிதாபிமான, சமூகச் சவால்களை உருவாக்குகின்றன என்றும் சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவில் பாதுகாப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கான நிதி குறைந்து வருவது இந்நிலையை மேலும் மோசமாக்குவதாகவும் கவலை தெரிவித்தார்.
எனவே, சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார்.
தமது Dilexi Te என்ற திருத்தூது அறிவுரையைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படும் மக்களிடம் கிறிஸ்துவைக் காண்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் பொறுப்பு என்பதை நினைவூட்டினார்.
“புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு புலம்பெயர்ந்தவரின் கதவையும் தட்டுவது கிறிஸ்துவே” என்று அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய புலம்பெயர்வு நிலவரங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், அகதிகள், இடம்பெயர்ந்த மக்களின் அதிகரித்து வரும் தேவைகளுக்குப் பதிலளிப்பதில் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்வதற்காகப் பன்னாட்டு கத்தோலிக்கப் புலம்பெயர்ந்தோர் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில், திருத்தந்தையின் இச்செய்தி வெளியாகியுள்ளது.
