நல்ல பங்கை தேர்ந்து, பணியில் சிறந்திருப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
06 அக்டோபர் 2026
கலாத்தியர் 1: 13-24
லூக்கா 10: 38-42
நல்ல பங்கை தேர்ந்து, பணியில் சிறந்திருப்போம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் கலாத்தியருக்கு எழுதும்போது, பவுல், தான் கிறிஸ்துவின் பணியாளராக எப்படி மாறினார் என்பதை விவரிக்கிறார். அக்காலுத்தில், கலாத்திய சபையில் யத கிறிஸ்தவர்கள் சிலர் புகுந்து பவுல் எடுத்துரைத்த போதனைக்கு எதிராகப் பேசினர். இந்நிலையில் சில யூத கிறிஸ்தவர்களின் தவறான போதனையை முறியடிக்கக் கடுமையான முறையில் பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். எனவே, அவரைப் பற்றிய சிறு பின்னணி விபரத்தைத் தருகிறார்.
முன்பு பவுல் யூத மதத்தில் தீவிரமாக இருந்து, திருஅவையைத் துன்புறுத்தி அழிக்க முயன்றதையும், தன் முன்னோர்களின் பாரம்பரியங்களைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்ததையும் குறிப்பட்ட வேளையில், அவர் தாயின் கருவிலிருந்தே தன்னைத் தேர்ந்தெடுத்து, கடவுள் அவரது அருளினால் மறைபரப்புப் பணிக்கு அழைத்தார் என்று பதிவுச் செய்கிறார்.
கவுளின் அழைப்பானது, இயேசு கிறிஸ்துவை யூதரல்லாத பல புறவினத்தாருக்கு வெளிப்படுத்தி, அவர்கள் மத்தியில் நற்செய்தியை அறிவிப்பதாகும் என்பதோடு, இந்த அழைப்பைப் பெற்றவுடன், பவுல் மனிதர்களின் ஆலோசனையை நாடாமல், கடவுளின் அழைப்பின்படி பணியைது தொடங்கினார் என்கிறார்.
பின்னர் அவர் எருசலேமுக்குச் சென்று பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் சந்தித்தார் என்றும் முன்பு திருஅவையைத் துன்புறுத்திய அவர், இப்போது அதே நம்பிக்கையை பறைசாற்றுகிறார் என்பதைக் கேட்டு மக்கள் கடவுளை மாட்சிபடுத்துகிறார்க்ள் என்றும் குறிப்பிட்டு கலாத்தியருக்கு எழுதுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில் மார்த்தா மற்றும் மரியா பற்றிய நிகழ்வை லூக்கா குறிப்பிடுகிறார். இயேசு அவர்களுடைய வீட்டிற்கு வந்தபோது, மார்த்தா அவரை உபசரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி, மிகவும் பரபரப்பாகக் கணாப்பட்டார். ஆனால் அவளுடைய சகோதரி மரியாவோ இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
திடீரென்று, மார்த்தா, தனக்கு உதவும்படி மரியாவிடம் இயேசு சொல்ல வேண்டும் என்று கேட்டாள்.
அதற்கு இயேசு, மார்த்தா பல காரியங்களைக் குறித்து கவலையடைந்து கலங்குகிறாள் என்று கூறினார்.
மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்; அது அவளிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படாது என்று இயேசு மார்த்தாவிடம்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் ஒரே இல்லத்தில் இரு வெவ்வேறு பணிகள் நிகழ்வதை லூக்கா சுட்டிக்காட்டுகிறார். அடுப்படியில், உணவு உபசரிப்புக்குத் தயாரிப்பு, இயேசுவின் காலடியில் விண்ணக வாழ்வுக்குத் தயாரிப்பு.
தனக்கு உதவும்படி மரியாவிடம் அறிவுறுத்தும்படி இயேசுவிடம் மார்த்த கூறியபோது, இயேசுவோ கனிவான பதிலை முன்வைக்கிறார். இது மார்த்தாவின் மீது அவர் கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், அவளுடைய கவலையைப் போக்க உதவும் விதமாக, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
இங்கே என்னைக் கவர்ந்த சொற்றொடர், ‘நல்ல பங்கு’ என்பதாகும். அந்த ‘நல்ல பங்கு’ என்ன? மரியா சேவை செய்யாமல் இருப்பதைத் தேர்ந்தெடுத்ததா? நிச்சயமாக இல்லை. இயேசு குறிப்பிடும் ‘நல்ல பங்கு’ என்பது வெளிப்புறச் செயல்பாட்டைக் காட்டிலும், உள்ளார்ந்த மனநிலையையே அதிகமாகக் குறிக்கிறது என்லாம்.
மேலும், இன்றைய வாசகங்கள் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. “நாம் ஆண்டவருக்காக என்ன செய்கிறோம்?” என்பதை முக்கியமாகப் பார்ப்பதா அல்லது ஆண்டவருடன் நாம் எப்படிப்பட்ட உறவில் இருக்கிறோம்?” என்பதை கவனிப்பதா?
நாம் பல நேரங்களில் இறைவனுக்காக நிறைய காரியங்களைச் செய்கிறோம். குடும்பப் பொறுப்புகள், வேலை, ஆலயப் பணிகள், சமூகப் பணிகள், பிறருக்கு உதவுதல் என்று ஓய்வில்லாமல் செயல்படுகிறோம். ஆனால், இந்த எல்லா செயல்களின் நடுவிலும் ஆண்டவரோடு அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்க நாம் நேரம் ஒதுக்குகிறோமா? என்பதே கேள்வியக அமைகிறது.
1. மார்த்தா – நல்லதைச் செய்கிறாள், ஆனால் கவலையுடன் செய்கிறாள். அவள் செயலில் மூழ்கி, ஆண்டவரையே மறந்துவிடுகிறாள். அதே வேளயில் தன் சகோதரியையும் பணிக்கு அழைக்கிறாள், இயேசுவைத் தனிமைபபடுத்த விழைகிறாள்.
2. இயேசு மார்த்தாவின் சேவையை நிராகரிக்கவில்லை. அவளுடைய கவலை, குழப்பம் மற்றும் உள்ளார்ந்த அமைதியின்மையைத்தான் சுட்டிக்காட்டுகிறார்.
நாமும் சில நேரங்களில் மார்த்தாவைப் போல இருக்கிறோம். “எல்லா பணிகளையும் நான் தான் செய்ய வேண்டும். என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று முணுமுணுக்கிறோம்.
ஆனால் இயேசு இன்று நம்மிடம் கூறுவது: “நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய். ஆனால் ஒன்றே தேவை.” அந்த “ஒன்று” என்ன? ஆண்டவருடைய உடனிருப்பில் இருப்பது. அவருடைய வார்த்தையைக் கேட்பது. அவரோடு உறவை வளர்த்துக்கொள்வது.
மரியாவுக்கு செயலுக்கு முன் இறைவார்த்தையைக் கேட்க வேண்டும் என்பது முக்கியமானதாகப் பட்டது. ஆம், பணியை நிறைவேற்றும் முன் அவருடைய குரலைக் கேட்க வேண்டும்.
நமது வாழ்க்கையிலும் இதுதான் தேவை. “ஆண்டவரே, நீர் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்?”
என்று கேட்க வேண்டும். இதுதான் மரியா ஏற்ற அல்லது இயேசு குறிப்பிட்ட “நல்ல பங்கு”.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி பேசுகிறார்.
அவர் கிறிஸ்தவத்தைத் துன்புறுத்தியவர். திருஅவையை அழிக்க முயன்றவர். ஆனால் கிறிஸ்துவை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் திருத்தூதராக மாறினார். இயேசுவை உண்மையாக சந்திக்கும் மனிதன் அதே நிலையில் தொடர்ந்து இருக்க முடியாது. கிறிஸ்துவுடனான சந்திப்பு நம்முடைய எண்ணங்களையும், முன்னுரிமைகளையும், உறவுகளையும், வாழ்க்கை நோக்கத்தையும் மாற்றுகிறது.
நாம் மறைபரப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதில் மாற்று கருத்துகிடையாது. ஆனால், அன்றாட பணிகளில் மூழ்கியவராக நாம் வாழ்ந்தோமானால், இறைபணி சிறக்காது. முதலில் ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்போம். பின்னர் அந்த வார்த்தையை நமது செயல்களில் வெளிப்படுத்துவோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் “ஒன்றே தேவை”என்ற வார்த்தை நம்முடைய வாழ்க்கையை ஆராய அழைக்கிறது. நம்மிடம் பல தேவைகள் இருப்பதாக நாம் நினைக்கிறோம். பணம் வேண்டும்., பாராட்டு வேண்டும், பதவி வேண்டும், அங்கீகாரம் வேண்டும் என நினைத்த பணியின் முன்னேற துடிக்கிறோம். ஆனால் இயேசு சொல்கிறார்: “ஒன்றே தேவை.” அது என்ன? இறைவனோடு உள்ள உறவு. அந்த உறவு சரியாக இருக்கும்போது, மற்ற விடயங்களை நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குவோம்.
இறைவார்த்தை.
ஆண்டவரே, பல காரியங்களில் சிதறிப்போகும் எனது கவனத்தை ஒன்றிணைத்து,
உமது பாதத்தில் அமர்ந்து உமது குரலைக் கேட்கும் அருளையும், மரியாவைப் போல “சிறந்த பங்கை” தேர்ந்தெடுத்துச் செயல்படும் ஞானத்தையும் எனக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
