சாலைக் குழிகளை நிரப்புகின்ற முதியவர்| அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
அடுத்தவர் நலனில் அக்கறைகொள்ளும் அனைவருக்கும் வயது ஒரு தடையில்லை.
சாலையில் ஏராளமான விபத்துகள் நடப்பதற்கு மிக முக்கியமான காரணம் சாலையில் காணப்படுகின்ற குண்டும் குழியும்தான். வேகமாக வருகின்ற இருசக்கர ஊர்தி சாலையில் காணப்படுகின்ற குண்டுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாவதை நாம் பார்த்திருக்கின்றோம். ஒருவேளை நமக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும். அறுபத்து ஆறு வயதான ஒரு முதியவர் நரை முடியோடு, கண்ணிலே கண்ணாடியோடு தோற்றமளிப்பவர். ஆந்திர மாநிலத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எர்நாந்தும் கிராமத்தில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர்தான் கங்காதர திலக் கட்னாம் என்பவர்.
தென்னக இரயில்வேயில் 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணி ஓய்வு பெற்ற இவர் 2010ஆம் ஆண்டு ஒரு தனியார் மென்பொருள் துறைப்பணியில் சேர்கிறார். முதல் நாள் பணிக்குச் சென்றபோது நடந்த நிகழ்வு இவரின் எதிர்காலச் சேவைக்கு வித்திட்டது. இவரின் வாகனம் சாலையில் காணப்பட்ட குழிக்குள் விழுந்ததில் ஒரு பள்ளி மாணவியின் சீருடை சேற்றால் மோசமானது. தனது செயலுக்கு அந்தக் குழந்தையிடமும் தாயிடம் அவர் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் மன்னிப்பு அளிக்க விரும்பவில்லை. இந்த அனுபவம் இவரை மிகவும் பாதித்தது. உடனே தனது கையிலிருந்த ₹ 4200யைச் செலவு செய்து அந்தச் சாலையில் காணப்பட்ட குழியை உடனடியாகச் சரிசெய்தார்.
தனது பணியை விட்டுவிட்டு 2011ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக களத்தில் இறங்கினார். அவருக்குக் கிடைத்த ஓய்வூதியப் பணத்தைக்கொண்டு சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களைத் தார், சல்லி பயன்படுத்தி நிரப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனக்குக் கிடைக்கக்கூடிய ₹ 23,000 ஓய்வூதியத்தில் ₹ 15,000ஐ இந்தப் பணிக்காகவே செலவிடுகிறார். இவரது காரில் மணல், தார், மண்வெட்டி, எனக் குழிகளைச் சரிபடுத்துவதற்கான அனைத்துப் பொருள்களும் எப்போதும் இருக்கும். தினசரி வாகன எரிபொருளுக்கே ₹500 செலவிடுகிறார்.
எவ்விதப் பலனும் எதிர்பார்க்காமல் மனித உயிரைக் காக்கவேண்டும் என்ற எண்ணத்தில், விபத்தைத் தடுக்கும் முயற்சியாகக் குழிகளை நிரப்பி வருகின்றார். இதுவரைக்கும் இவர் 1264 சாலைப் பள்ளங்களைச் சரிசெய்துள்ளா பதுள்ளார். அரசு அதிகாரிகளே கண்டுகொள்ளாமல் இருக்கும் இன்றைய காலத்தில் இவரின் இந்தப் பணியை எவ்விதம் பாராட்டுவது?
மாற்றங்கள் தேடும் மகத்தான மனிதர்களால்தான் மானுடம் இன்னமும் இயங்குகிறது.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
