இயேசுவில் பற்றுறுதி (trust) நம்மை விடுவிக்கும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
16 நவம்பர் 2026
திருவெளி 1: 1-4; 2: 1-5a
லூக்கா 18: 35-43
இயேசுவில் பற்றுறுதி (trust) நம்மை விடுவிக்கும்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகமானது திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூலில் இருந்து எடுக்கப்பட்டது. திருத்தூதர் யோவான் தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் சாட்சியாக திருஅவைக்கு எடுத்துரைக்கிறார். மேலும், இவ்வாசகப் பகுதியில், இறைவார்த்தையை வாசித்து, கேட்டு, அவற்றைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றவர்கள் என அறிவிப்பதோடு, அக்காலத்து ஏழு திருஅவைகளுக்கும் இறையருளும் அமைதியும் உண்டாக வேண்டுமென வாழ்த்துகிறார்.
திருவெளிப்பாடு 2:1-5 பகுதியில், எபேசு திருஅவையின் இறைமக்களின் உழைப்பு, பொறுமை, நம்பிக்கையில் உறுதியாக இருத்தல் ஆகியவற்றை இயேசு பாராட்டினாலும் அவர்கள் தொடக்கத்தில் கொண்டிருந்த அன்பை இழந்துவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார். எனவே, அவர்கள் மனம் மாறி, முன்பு செய்த அன்பின் செயல்களை மீண்டும் செய்யுமாறு அழைக்கிறார். நமது நம்பிக்கை வெறும் செயல்களிலும் கடமைகளிலும் மட்டும் வெளிப்படாமல், இறைவன் மீதும் சக மனிதர்கள் மீதும் கொண்ட உண்மையான அன்பிலும் வெளிப்பட வேண்டிய படிப்பினையை யோவான் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், எரிகோ நகரை இயேசு நெருங்கிச் சென்றபோது, வழியோரத்தில் பார்வையற்ற ஒருவர் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். மக்கள் கூட்டத்தின் சத்தத்தைக் கேட்டு என்ன நடக்கிறது என்று அவர் கேட்டபோது, நாசரேத்து இயேசு அவ்வழியாகச் செல்கிறார் என்று மக்கள் கூறவே, . உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்” என்று உரக்க அழைத்தார்.
மக்கள் அவரை அமைதியாக இருக்கும்படி அதட்டினாலும், அவர் இன்னும் உரக்கக் கூப்பிட்டார். இயேசு அவருடைய குரலைக் கேட்டு நின்று, அவரைத் தம்மிடம் அழைத்து வரச் சொன்னார். பின்னர், “உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்று கேட்கவே, இயேசு அவரது வண்ணப்பத்தை நிறைவு செய்கிறார். உடனே அவர் பார்வை பெற்று, கடவுளைப் போற்றிக்கொண்டே இயேசுவைப் பின்தொடர்ந்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இக்காலத்தில், உலகெங்கும் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், நோயாளிகள் மற்றும் துன்பப்படுபவர்கள் அக்கறையுடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான அரசு உதவிகளும் சமூக பாதுகாப்பும் உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களையும் பல்வேறு விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளன.
ஆனால் இயேசு வாழ்ந்த ஈராயிரம் ஆண்டளவில் நிலவிய சமூகப் பார்வை முற்றிலும் மாறாக இருந்தது. பார்வையின்மை, முடக்குவாதம் போன்ற உடல் குறைபாடுகள் கடவுளின் தண்டனையாகத் சித்தரிக்கப்பட்டன.
அந்த பார்வை அற்றவர் இயேசுவைத் தாவீதின் மகன் என்று அழைத்ததன் மூலம், அவர் வாக்களிக்கப்பட்ட மெசியா, அதாவது மீட்பர் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மற்றவர்கள் இயேசுவை ஒரு போதகராக மட்டுமே பார்த்தனர். ஆனால் பார்வையற்றவர் அவரிடம் மெசியாவைக் காணும் நம்பிக்கையைக் கொண்டிருந்தார். இயேசு இவரது இந்த ஆழ்ந்த நம்பிகையால் கவரப்பட்டார் என்றே கூற வேண்டும்.
அடுத்து, இதைக் கண்ட மக்கள் அனைவரும் கடவுளைப் புகழ்ந்தனர் என்று லூக்காக குறிப்பிட்டதன் விளைவாக, நமது வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள், தடைகள் இருந்தாலும் இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதை உணர்த்துகிறது. அவரே நமது மீட்பர். அந்த பார்வையற்ற மனிதரைப் போல நாமும் முழு நம்பிக்கையுடன் இயேசுவை நோக்கிக் கூப்பிட வேண்டும்.
உடல் பார்வையைவிட முக்கியமானது ஆன்மீகப் பார்வை. நமது உள்ளத்தின் இருளை நீக்கி, இறைவனின் அன்பையும் அருளையும் உணர்ந்து, அவரைப் பின்பற்றி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ ஆன்மீக வாழ்வாகும். உண்மையான ‘பார்வை’ என்பது கண்களால் காண்பது மட்டுமல்ல; இதயத்தால் இயேசுவை மீட்பராக, ஆண்டவராக ஏற்றுக்கொள்வதாகும்.
1. பிறர் இறைவனைத் தேடும்போது அவர்களுக்கு உதவுகிறோமா, அல்லது அந்த மக்கள் செய்ததுபோல அவர்களைத் தடுக்கிறோமா?
2. நமக்கு உடல் பார்வை இருந்தாலும், பிறருடைய துன்பங்களையும் தேவைகளையும் உணரக்கூடிய ஆன்மீகப் பார்வை நம்மிடம் இருக்கிறதா?
இந்த இரு கேள்விகளுக்கும் நாம் பதில் தேட வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, தாவீதின் மகனே, நம்பிக்கையோடும் தாழ்மையோடும் நான் உம்மில் பற்றுறுதி கொண்டு வாழ எனக்கு இரங்குவாராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
