பகிர்ந்து வாழ்வதே மனமாற்றத்தின் அடையாளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

17 நவம்பர் 2026
 
திருவெளி  3: 1-6, 14-22
லூக்கா 19: 1-10
 
பகிர்ந்து வாழ்வதே மனமாற்றத்தின் அடையாளம்!


முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் நேற்றைய தொடர்ச்சியாக,  பத்மோஸ் தீவில் யோவான்   இருந்தபோது இறைவனிடமிருந்து பெற்ற வெளிப்பாட்டின் ஒரு பகுதியை வாசிக்கிறோம்.   இப்பகுதியில்  இயேசு கிறிஸ்து சர்தை, பிலதெல்பியா மற்றும் லவோதிக்கேயா திருஅவைகளுக்குக் கூறும் இறைவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இது உரோமையர்களால் திருஅவை வெகுவாகத் துன்புறுத்தப்பட்ட காலம்.

சர்தை திருஅவை உயிருள்ள திருஅவை  என்று பெயர் பெற்றிருந்தாலும், உண்மையில் அது ஆன்மீக வாழ்வில் இறந்த நிலையில் இருந்தது. எனவே, விழித்தெழுந்து தங்களிடம் இறைமக்களைத் திடப்படுத்தி,  மனந்திரும்பி இறைவனிடம் திரும்புமாறு இயேசு அழைக்கிறார். தங்கள் ஆடைகளை மாசுபடுத்தாதவர்களும் இறைவனுக்கு உண்மையாக இருப்பவர்களும் வெள்ளை ஆடை அணிந்து அவரோடு வாழ்வார்கள் என்றும் வாக்களிக்கிறார்.

லவோதிக்கேயா இறைமக்களிடம்  இயேசு அவர்களின் ஆழமற்ற நம்பிக்கை வாழ்க்கையைக் கண்டிக்கிறார். அவர்கள் முழுமையாகச் சூடாகவும் இல்லை, குளிர்ச்சியாகவும் இல்லை மறாக, வெதுவெநுப்பாக உள்ளனர் என சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் செல்வந்தர்கள் என்றும், எதுவும் தேவையில்லை என்றும் நினைத்தாலும், உண்மையில் ஆன்மீக வறுமையிலும் குருட்டுத்தனத்திலும் இருப்பதை அவர்கள் உணரவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.  எனவே,  "இதோ, நான் கதவருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறி, தமது குரலைக் கேட்டு கதவைத் திறப்பவர்களுடன் உறவுகொண்டு வாழ விரும்புவதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.

நற்செய்தி.

இந்த நற்செய்தி வாசகத்தில் இயேசு எரிகோ நகருக்குள் சென்றபோது, சக்கேயு என்ற தலைமை வரி வசூலிப்பவரைச் சந்திக்கிறார். சக்கேயு செல்வந்தராக இருந்தாலும், மக்கள் பார்வையில் பாவியாகவும் வெறுக்கப்பட்டவராகவும் கருதப்பட்டவர்.  இயேசுவைக் காண விரும்பிய அவர், குட்டையாக இருந்த காரணத்தால்,  ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினார். அவ்வழியாக வந்த இயேசு அவரைப் பார்த்து, “சக்கேயுவே, விரைவாக இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்று கூறினார். இயேசு தமது வீட்டிற்கு வருவதை எண்ணி சக்கேயு மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். ஆனால், இதைக் கண்ட மக்கள், இயேசு ஒரு பாவியின் வீட்டில் தங்கச் சென்றதைக் குறித்து முணுமுணுத்தனர்.

இயேசுவைச் சந்தித்த அனுபவம் சக்கேயுவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தமது உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாகவும், யாரிடமிருந்தாவது முறைகேடாகப் பணம் பெற்றிருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார். இதைக் கேட்ட இயேசு, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்று அறிவித்தார். மேலும், “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று தமது மீட்புப் பணியின் நோக்கத்தை வெளிப்படுத்தியதை லூக்கா பதிவுச் செய்துள்ளார்.


சிந்தனைக்கு.

நாம் கொண்டிருக்கும்  வெளிப்புற   புகழோ, செல்வமோ, சமயச் செயல்பாடுகளோ மட்டும் உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு வழிவகுக்காது.  நம்மில் காணப்படும் விழிப்புணர்வுள்ள நம்பிக்கை, செயல்மிக்க மனமாற்றம், இறைவனுக்கு உண்மையாக வாழ்தல் ஆகியவையே மீட்பு்கு பக்கபலமாக அமையும்.  இயேசு நம் இதயக் கதவைத் தட்டுகிறார்; அவருக்கு இடமளித்து நமது வாழ்வை அவரிடம் ஒப்படைக்க முற்பட்டால் நமக்கு அவரது அருள்நிலை கிட்டும்.

திருப்பலியில் உண்மையான இயேசுவுடனான சந்திப்பு (நற்கருணை) வெறும் உணர்ச்சியாக முடிந்துவிடாமல், மனமாற்றத்தையும் நமது செயல்களில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும். சக்கேயுவைப் போல நாமும் நமது தவறுகளை உணர்ந்து, பிறருக்கு நீதி வழங்கி, பகிர்ந்து வாழும் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்பது ஆண்டவரின் எதிர்ப்பார்ப்பு. வெறும்   

நற்செய்தியில், இயேசு தமது வீட்டிற்கு வருவதை எண்ணி சக்கேயு மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். ஆனால், இதைக் கண்ட மக்கள், இயேசு ஒரு பாவியின் வீட்டில் தங்கச் சென்றதைக் குறித்து முணுமுணுத்தனர். இத்தகைய முணுமுணுத்தலுக்கு நாம் ஆளாகும்போது நம்மை நாமே இகழ்ச்சிக்கு ஆளாகிறோம்.  இயேசுவுக்கே புத்தி சொல்லும் அளவுக்கு நம்மை நாம் உயர்வாகக் காண்கிறோம். பொறாமையால், அறியாமையால் ஏற்படும்  முணுமுணுத்தலால் பலனில்லை.

இயேசுவைச் சந்தித்த அனுபவம் சக்கேயுவின் வாழ்க்கையில் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தமது உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பதாகவும், யாரிடமிருந்தாவது முறைகேடாகப் பணம் பெற்றிருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார். நாமும் பல வழிகளில் சக்கேயு போன்றவர்கள்தான். ஆனால், அவர் போன்று வாழ்வுபெற எதையும் விட்டுக்கொடுக்க முன்வருவதில்லை. 

இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது பெயரளவிலான நம்பிக்கை அல்ல.  மாறாக உண்மையான மனமாற்றத்துடனும் அன்புடனும் உறுதியான நம்பிக்கை வாழ்க்கை வாழ்வதாகும். இயேசு நம் இதயக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார்; நாம் அவருக்கு நம் உள்ளத்தைத் திறந்து, அவரோடு இணைந்து வாழும்போது உண்மையான மீட்பையும் நிலைவாழ்வையும் பெற முற்படுவோம். துன்பமும் துன்புறுத்தரும் நம்மை பலவீனப்படுத்தும் அளவுக்கு நாம் சோர்ந்துவிடக்கூடாது.  


இறைவேண்டல். 
 

ஆண்டவரே இயேசுவே, சக்கேயுவைப் போல உம்மைத் தேடி உம்மைச் சந்திக்கும் ஆர்வத்தையும், என் தவறுகளை உணர்ந்து உண்மையான மனமாற்றம் அடையும் மனதையும் எனக்குத் தாரும். ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image