மிஸ்டு கால் மம்மி | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
ஏகப்பட்ட அலைச்சல். இரு சக்கர வாகனத்தில் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார் லாரன்ஸ். சிணுங்கிய அலைபேசியை எடுப்பதற்குள் நின்றுவிட்டது. தாய்தான் அழைத்திருந்தார். லாரன்சுக்குக் கோபம் கோபமாக வந்தது. இப்படிப்பட்ட துண்டிப்பு ஒருமுறை, இருமுறையல்ல எப்போதுமே. இந்த 'மிஸ்டு கால் மம்மியை' இன்றாவது திருத்தவேண்டும் என்று வீட்டிற்குள் கோபத்தோடு நுழைந்த லாரன்ஸ், அறைக்குள் தாயும் தந்தையும் உரையாடிக் கொண்டிருந்ததால் கோபத்தை அடக்கிக்கொண்டான்.
'ஏம்மா, அவனுக்குப் போன் போட்டா பேச வேண்டியதுதானே, எதுக்கு 'மிஸ்டு கால்'? எதுக்காக இந்தக் கஞ்சத்தனம்? அவன்தான் நம் இருவருக்கும் மாதந்தோறும் அலைபேசியில் காசு ரீசார்ஜ் பண்ணுகிறானே?" எனக் கேட்டார் தந்தை.
"புரியாமப் பேசறீங்களே, அவன் எந்நேரமும் வண்டியில சுத்தறவன். ரோட்ல வண்டியெல்லாம் எமனாட்டம் வருது. நான் விடாப்பிடியா ரிங் கொடுக்க ஏதோ அவசரமான விஷயம்னு நினைச்சு, அவன் பதற்றமா எடுத்துப் பேசினா, ஆபத்துதானே? அதனால்தான், அவன் என் மிஸ்டு காலைப் பார்த்து, எப்போது வசதிப்படுகிறதோ, அப்போது அழைக்கட்டும் என விட்டுவிடுகிறேன்” என்று தாய் கூறியதைக் கேட்ட லாரன்சுக்கு, தாயின் பாசம் அறிந்து, கண்களில் கண்ணீர் வடிந்தது.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
