பெற்றால்தான் பிள்ளையா? | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

உலக வரலாற்றில் மாபெரும் இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறவர் செங்கிஸ் கான் (Genghis Khan, 1162-1227).

ஒரு சமயம், செங்கிஸ் கானின் இராணுவம் படையெடுத்து வருவதைப் பார்த்து, தாய் ஒருவர் அஞ்சி நடுங்கி, இரண்டு குழந்தைகளைச் சுமந்துகொண்டு ஓடினார். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையைக் கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு ஓடினார் அந்தத் தாய். படைவீரர்கள் அந்தத் தாயை நெருங்கிவரவே, இடுப்பில் வைத்திருந்த குழந்தையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, கையில் பிடித்திருந்த பிள்ளையுடன் ஓடினார் அவர். ஆயினும் படைவீரர்கள், அந்தத் தாயைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது குதிரையில் வந்துகொண்டிருந்த செங்கிஸ் கான், அந்தத் தாயிடம், "அம்மா உண்மையைச் சொல், நீ வழியில் விட்டுவந்த குழந்தை நிச்சயமாக உள் குழந்தையாக இருக்காது, வேறு ஒருவரின் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும், அப்படித்தானே?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தாய், "இல்லை, நான் வழியிலேயே விட்டுவந்த அதுதான் என் குழந்தை. இந்தப் பிள்ளை, நேற்று நீ கொலைசெய்த அந்தப் பெண்ணின் குழந்தை. அந்தப் பெண் இறப்பதற்குமுன், இந்தப் பிள்ளையை என்னிடம் ஒப்படைத்து, பத்திரமாகப் பாதுகாத்துக்கொள் என்று சொல்லிவிட்டு உயிர்விட்டார். எனவே என் குழந்தையைக் காப்பாற்றுவதைவிட, இந்தக் குழந்தையைக் காப்பாற்றுவது எனக்கு முக்கியமாகப்பட்டது" என்று சொன்னார்.

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தால்தான் அன்னையா, இல்லை. மற்றவரைத் தாய்மை உள்ளத்துடன், சேவை மனப்பான்மையுடன் கவனித்துக்கொள்ளும் அனைவருமே அன்னையர்தான்.

மனிதன் மட்டுமல்ல பறவை விலங்கு அனைத்திற்கும்

அன்பினுடைய முழு வடிவமே தாய்மைதான்.


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image