தாராள மனமே உண்மையான செல்வம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
23 நவம்பர் 2026
திருவெளிப்பாடு 14: 1-5
லூக்கா 21: 1-4
தாராள மனமே உண்மையான செல்வம்!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில் திருத்தூதர் யோவான் ஒரு மாட்சிமிகு விண்ணகக் காட்சியைக் காண்கிறார். ஆட்டுக்குட்டியான இயேசு சீயோன் மலையில் நிற்கிறார். அவருடன் 1,44,000 பேர் நிற்கிறார்கள். அவர்களுடைய நெற்றியில் ஆட்டுக்குட்டியின் பெயரும் தந்தையின் பெயரும் எழுதப்பட்டுள்ளன. இது அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், அவருக்கு முழுமையாகத் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதையும் குறிக்கிறது.
மேலும், இவர்கள் ஆட்டுக்குட்டியான இயேசு செல்லும் இடமெல்லாம் அவரைப் பின்பற்றுகிறவர்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையை எடுத்துரைக்கிறது. இவர்கள் தங்களுடைய வாழ்வில் தூய்மையையும் உண்மையையும் கடைப்பிடித்து, ஆட்டுக்குட்டியான இயேசு செல்லும் இடமெல்லாம் அவரைப் பின்பற்றுகிறவர்கள். அவர்களுடைய உள்ளத்தில் பொய்மையும் வஞ்சகமும் இல்லை; அவர்கள் மாசற்றவர்களாக விளங்குகிறார்கள என்று யோவான் விவரிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு கோவிலில் காணிக்கைப் பெட்டியில் மக்கள் பணம் போடுவதைக் கவனிக்கிறார். செல்வந்தர்கள் தங்களிடம் மிகுதியாக இருந்தவற்றிலிருந்து காணிக்கை செலுத்தினார்கள். ஆனால் ஓர் ஏழைக் கைம்பெண் இரண்டு சிறிய செப்புக் காசுகளைப் போடுகிறார். இதைக் கண்ட இயேசு, அந்த ஏழைக் கைம்பெண்ணே மற்ற அனைவரையும் விட அதிகமாகக் காணிக்கை செலுத்தியிருக்கிறார் என்று கூறுகிறார். ஏனெனில் மற்றவர்கள் தங்களுடைய மிகுதியிலிருந்து கொடுத்தார்கள்; ஆனால் அந்தப் பெண் தன்னுடைய வறுமையிலும் தனக்கிருந்த வாழ்வாதாரம் முழுவதையும் கொடுத்துவிட்டார் என்று அந்த பெண்ணை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.
சிந்தனைக்கு.
நற்செய்தியில் இயேசு நமது வெளிப்புறத்தை அல்ல, உள்ளத்தைப் பார்க்கிறார் என்ற செய்தி பகிரப்படுகிறது. செல்வந்தர்கள் அதிகமான பணத்தைக் காணிக்கையாகச் செலுத்தினார்கள். மனிதர்களின் பார்வையில் அவர்களுடைய காணிக்கையே பெரியதாகத் தோன்றியது. ஆனால் இயேசு காணிக்கையின் தொகையைப் பார்க்கவில்லை; அதற்குப் பின்னால் இருந்த மனநிலையைப் பார்த்தார் என்பதை லூக்கா அழகாக சித்தரித்துள்ளார்.
முதல் வாசகத்தைக் கூர்ந்து கவனித்தோமானால், இயேசுவை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் உலகத்தின் பார்வையில் தோல்வியடைந்தவர்களாகத் தோன்றலாம். ஆனால் கடவுளின் பார்வையில் அவர்கள் வெற்றியாளர்கள். தூய்மை, உண்மை, நம்பிக்கை, தியாகம் ஆகியவற்றுடன் வாழ்ந்து, இறுதிவரை ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பின்பற்றுவதே விண்ணக வாழ்விற்கான வழி என்பதை அவர்கள் அறிந்து அதன்படி செய்பட்டவர்கள்.
நாம் கடவுளுக்குக் கொடுப்பது எவ்வளவு என்பது முக்கியமல்ல; எந்த மனநிலையோடு கொடுக்கிறோம் என்பதே முக்கியம். கடவுள் நமது வெளிப்புறச் செயல்களைக் காட்டிலும் உள்ளத்தின் அன்பையும் அர்ப்பணிப்பையும் பார்க்கிறார் என்பது தெளிவாகிறது. கிறிஸ்து உலக அரசர். அந்நிலையை அவர் பற்றிக்கொண்டிருக்காமல் உலகோருக்காக ஏழ்மையை ஏற்றார். மாட்டுக் கொட்டில்தன் அவரது பிறப்பிடம், அடுத்தவர் கல்லரைதான் அவருக்கான இறுதி இடம்.
நிறைவாக, ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும், இந்த ஏழைக் கைம்பெண்ணின் செயலில், கடவுள் நம்மிடமிருந்து விரும்பும் மனப்பக்குவத்தைப் பற்றிய ஆழமான செய்தியை நமக்கு வழங்குகிறார். கடவுள் நம்முடைய உடைமைகள், நேரம் அல்லது திறமைகளில் ஒரு பகுதியை மட்டும் விரும்புவதில்லை. மாறாக, நம்மிடம் உள்ள அனைத்தையும் அவரிடம் முழுமையாகக் கையளிக்கவே விரும்புகிறார். ஏன்? ஏனெனில், நம்மிடம் இருக்கும் அனைத்துமே அவரிடமிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. மேலும், நாம் பெற்ற அனைத்தும் இறுதியில் அவரிடமே சென்று சேர வேண்டும் என்பதே அதன் உண்மையான நோக்க் என்பதை மனதில் நிலைநிறுத்துவோம்.
திருக்குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
ஆம், வறியவர்களுக்கு எந்தப் பயனையும் எதிர்பாராமல் கொடுப்பதே உண்மையான தர்மமாகும். மற்றவை ஏதோ ஒரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பவையாகும் என்று திருவள்ளுவரும் மொழிந்துள்ளார்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என்னிடம் இருப்பதைக் கொண்டு பெருமை பாராட்டாமல், நீர் எனக்குத் தந்தவற்றை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளவும், பிறர் பாராட்டுவதற்காக அல்ல, தூய உள்ளத்தோடும் உண்மையான அன்போடும் பிறருக்குக் கொடுக்கவும் என்னை பயிற்றுவியும். ஆமென்
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
