வயலின் வித்துவான்| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
ஒரு நகரத்தில் வயலின் வித்துவான் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த இசை ஞானி. அவரிடம் பழைய வயலின் இசைக் கருவி ஒன்று இருந்தது. அவர் அதை எடுத்து மீட்டும்போது, இனிமையான வயலின் இசை எழும். இசையை ரசிப்பதற்காக மக்கள் திரளாகக் கூடிவிடுவர்.
ஒருநாள் வயலின் இசைக் கச்சேரி விழாவொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில், வயலின் வித்துவான் வாசிக்க உள்ளார் என்று கேள்வியுற்ற மக்கள் பெருந்திரளாக மேடையருகில் கூடிவிட்டனர்.
வயலின் வித்துவான் மேடைக்கு வந்து அமர்ந்தார். தனது வயலின் இசைக்கருவியைத் தொட்டு வணங்கி இசைக்கத் தொடங்கினார். இனிமையான இன்னிசை வயலின் கருவியிலிருந்து எழுந்தது. மக்கள் இசையில் மயங்கி ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று இனிமையாக இசைத்துக் கொண்டிருந்த வயலின் இசை நின்று போனது. ஏனெனில், தான் மீட்டிக்கொண்டிருந்த பழைய வயலின் இசைக்கருவி உடைந்துபோனது. வித்துவான் அதிர்ச்சியுற்றார். ஆனாலும், அவரிடம் புதிய வயலின் இசைக்கருவி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இசை நிகழ்வு விழா நடைபெற்று இனிதாக நிறைவுற்றது.
வித்துவான் அவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடும், வருத்தத்தோடும் அரங்கத்தை விட்டு வெளியே வந்தார். மீண்டுமாக மேலும் ஒரு பழைய வயலின் கருவியை வாங்குவதற்காக பழைய இசைக்கருவிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றார். அக்கடையில், உடைந்துபோன உபயோகமற்ற பழைய வயலின்களை எல்லாம், ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்திருந்தான் அந்தக் கடைக்காரன். இருவரும் அந்த அறைக்குச் சென்றார்கள். பூட்டப்பட்டிருந்த கதவு திறக்கப்பட்டது. உள்ளே கவனிப்பாரற்றுக் கிடந்த வயலின்களெல்லாம் சேர்ந்து சப்தமிடத் தொடங்கின.
"திருடர்களே, வெளியேறுங்கள். நாங்களெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். வெளியேறுங்கள். கதவினை தாழிடுங்கள்' என்று சப்தமாகக் கூச்சல் இட்டன. சப்தம் செய்துகொண்டிருந்த வயலின்களில் ஒன்றை கையில் எடுத்தார் வித்துவான்.
"தொடாதே, என்னைத் தொடாதே;
நான் தூங்க வேண்டும்.'
என்று சப்தம் போட்டது. சில நிமிடங்கள் கழிந்த பின்பு, வயலின் கருவியிலுள்ள நரம்புகளைத் தடவிப் பார்த்தார் வித்துவான். 'ஐயோ, வலிக்கிறதே, எனது உடம்பெல்லாம் வலிக்கின்றதே; என்னை விட்டுவிடு என்று அழத்தொடங்கியது வயலின். அக்கருவியை மட்டும் எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தார். கதவு தாழிடப்பட்டது. கடையின் உள்ளேயிருந்த வயலின்களெல்லாம் மீண்டும் நிம்மதியாக உறங்கத் தொடங்கின.
கடையின் வெளி முற்றத்தில் அமர்ந்து, வயலினை சுத்தம் செய்தார் வித்துவான். கருவியில் புதிய நரம்புகளை இணைத்தார். சுருதி ஏற்றி இனிமையான சுரங்களில் வயலினை இசைத்தார்.
வயலினின் இன்னிசை நாதத்தைக் கேட்டவுடன், கடையின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பழைய வயலின் கருவிகள் எழுந்து, சன்னல்களின் கதவுகளைத் திறந்து, வெளியே எட்டிப்பார்த்தன. என்ன ஆச்சரியம்! தங்களோடு அறையில் உறங்கிக்கொண்டிருந்த, பழைய வயலினின் இசைதான் என்பதனை அறிந்து, ஆவலோடும், ஆச்சரியத்தோடும் ரசித்துக் கொண்டிருந்தன.
இந்நேரத்தில், இசை எழுப்பிக்கொண்டிருந்த வயலின் அறையிலிருந்த வயலின் கருவிகளைப் பார்த்து
"தூங்காதீர், தம்பிகளே தூங்காதீர்கள்,
சோம்பேறி என்ற பெயர் வாங்காதீர்கள்' என்று பாடியது.
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
