பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு....| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
சிறுவன் ஒருவன் திருட்டுக் குற்றத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டான். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். காவல்துறையினர் சிறுவனுடைய பெற்றோரை வரவழைத்தனர். சிறுவனுடைய தந்தையைப் பார்த்தவுடன் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பலரால் அறியப்பட்ட, பெரிய திருடன் அவன். "அப்பனுக்குத் தப்பாமல் பிள்ளை பிறந்திருக்கிறான் " என்பதை உணர்ந்து கொண்டனர் காவல்துறையினர்.
சிறுவனிடம், "திருட்டுத் தொழிலை யார் உனக்குக் கற்றுக் கொடுத்தது? எப்படி கற்றுக் கொண்டாய்? என்று கேள்விகளைக் கேட்டனர். என் தந்தைதான் கற்றுக் கொடுத்தார் என்றவாறு தொடர்ந்து கூறலானான். ஓர் இரவு, சுமார் 12மணி இருக்கும். என் தந்தை என்னை திருடுவதற்கு அழைத்துச் சென்றார். காரிருள், கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. விண்மீன்கள் ஒன்று கூட கண்களுக்குத் தெரியவில்லை. ஊர் முழுவதும் உறங்கிக் கொண்டிருந்தது. என் தந்தை ஒரு வீட்டின் பின்புறம் இருந்த சுற்றுச் சுவரின் மேல் என்னைத் தூக்கி உட்புறமாக இறக்கிவிட்டார். பின்புறம் உள்ள கதவைத் திறந்து உள்ளே சென்று திருடிவரச் சொன்னார்.
நானும் என் தந்தை கூறியபடி, மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். திடீரென்று உள்ளே இருந்த நாய் என்னைப் பார்த்து "லொள் லொள்" என்று குரைக்க ஆரம்பித்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எல்லோரும் எழுந்து விட்டனர். பயம் என்னை ஆட்கொண்டது. எப்படி தப்பிப்பது என்ற எண்ணம் தோன்றும்முன் வேகமாக ஓடிச்சென்று சுற்றுச்சுவரில் ஏறினேன். ஆனால் என் தந்தையை அங்கு காணவில்லை. கண்களை மூடிக்கொண்டு கீழே குதித்து வீட்டை நோக்கி ஓடினேன். எந்தவித பதட்டமும் இல்லாமல் அமர்ந்திருந்தார் என் தந்தை. என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "மகனே ! நீ திருடக் கற்றுக்கொண்டாய்" எனக் கூறி என்னைப் பாராட்டினார்" என்றான்.
அவன் அன்றுமுதல் தினமும் திருட ஆரம்பித்தான் சிறுவன். வளர்ந்தவுடன் ஒருமுறை திருடச் சென்றபோது வயதான ஒருவரைக் கொலை செய்துவிட்டான். அதற்காக அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குமேடை செல்வதற்குமுன் அவனுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், தன் தந்தையை நேரில் பார்த்து சில வார்த்தைகள் கூற வேண்டும் என்றான்.
மகனைத் தூக்கிலிடப் போகிறார்களே என்ற கவலையோடும் கண்ணீரோடும் தந்தை வந்தார். அவரிடம் இரகசியமாகப் பேசுவதுபோல் மகன், தந்தையின் காதையொட்டி நின்று இவ்வாறு கூறினான்.
"அப்பா! நான் தூக்கு தண்டனை பெற்றுச் சாவதற்கு நீதான் மூலகாரணம். இந்தக் கொடிய செயல் உனக்கு என்றும் நினைவில் இருக்கவேண்டும' என்று கூறியபின், தன் கூர்மையான பற்களால் தந்தையின் காதைக் கடித்து பிடுங்கி எடுத்துவிட்டான். இரத்தம் ''மளமள' வெனத் தந்தையின் காதிலிருந்து கொட்டியது. நஞ்சின் கொடுமை வெளிப்பட்டது.
"என் மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது." (மாற்கு 9:42)
பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம். ( 22:15)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
