மண்ணகத்தில் விண்ணகத் தச்சர்....| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

ஒரு கிராமத்தில் தச்சர் ஒருவர் வாழ்ந்து வந்தார். 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற முதுமொழிக்கேற்ப, வாழ்க்கை நடத்தினார். நேர்மையாளர், நல்ல உழைப்பாளர். நற்செய்தியில்,'நீதிமான்' என்று போற்றப்படும் சூசையைப் போல் கிராம மக்கள் அனைவரும், தச்சரை 'நேர்மையாளர்' என்று அழைத்தனர்.

தச்சரின் முதுமை நிலையில், வானதூதர் அவர்முன் தோன்றி, 'ஐயா, உமது மண்ணக வாழ்வு முடிந்துவிட்டது. உம்மை விண்ணகம் அழைத்துச் செல்ல வந்தேன். உடனே புறப்படும்' என்று கூறினார். தச்சர் தூதரிடம், "எங்கள் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக, கடும் வறட்சி, மழையே இல்லை. விவசாயம் நடைபெறவில்லை. ஆனால் தற்போது, நல்ல மழை பெய்திருக்கிறது. மக்கள் மிகவும் உற்சாகமாக, விவசாயம் செய்ய முன் வந்துள்ளனர். நானும் விவசாய நிலங்களைப் பண்படுத்தக் கூடிய கலப்பை, மண்வெட்டி போன்ற கருவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன் . எனவே தயவுசெய்து, இரண்டு மாதத் தவணை கொடுங்கள். வேலை முடிந்தவுடன், வந்து விடுகிறேன்" என்று கூறினார்.

இரண்டு மாதங்கள் கடந்த பிறகு, வானதூதர் தச்சரை அழைத்துச் செல்ல வந்த போது, தச்சர் வானதூதரிடம், "விதைகள் யாவும் முளைத்து, பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. பயிர்களின் மத்தியில் விளைந்துள்ள களைகளை அகற்ற, களைக்கொட்டு போன்ற கருவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். தயவுசெய்து ஒரு மாதம் மட்டும் கொடுங்கள். என் வேலை முடிந்ததும் உடனே வந்து விடுகிறேன்" என்றார்.

ஒரு மாதம் கழித்து, வானதூதர் வந்ததும், தச்சர் அவரிடம், "என்னை மன்னிக்கவும், பயிர்கள் யாவும் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில், அறுவடை செய்ய அரிவாள் போன்ற கருவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் இவற்றை செய்யவில்லையென்றால், விளைச்சல் எல்லாம் வீணாகிவிடும். இன்னும் பதினைந்து நாட்களில், இந்த வேலை முடிந்ததும், நிச்சயமாக வந்து விடுகிறேன். இதுதான் எனது கடைசி வேண்டுகோள்" என்றார்.

பதினைந்து நாட்கள் முடிவடைந்த நிலையில், வானதூதர், தச்சர் முன் தோன்றிய போது, "அறுவடை முடிந்துவிட்டது, மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளனர். எனது வேலையும் முடிந்து விட்டது. நான் இப்போது உம்மோடு வரத்தயாராக உள்ளேன்" என்று புறப்பட்டார்.

கடமை தவறாத, வானதூதர், தச்சரிடம், ''உம்மைப் போன்று, உழைப்பாளர்கள் வாழும் இப்பூமிதான் விண்ணகம். நீங்கள் தொடர்ந்து, உம் பணியை இப்பூமியில் செய்யுங்கள். இறைவன் உமக்கு நீடிய ஆயுளைக் கொடுத்துள்ளார்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

உழைக்கின்ற மக்களுக்கு, இறைவன் தரும் ஆயுளாகும். நமது நேர்மையான உழைப்பால் மண்ணகம், விண்ணகமாக மாற உழைப்போம், உழைப்போம், உழைத்துக் கொண்டே வாழ்வோம். கொடை நீண்ட

சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள் அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்; (நீமொ 6:6)

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image