திருஅவையைத் தொடர்ந்து கட்டியெழுப்பும் சிற்பிகள் நாம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
18 நவம்பர் 2026
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு -நினைவு
தி.ப. 28: 11-16, 30-31
மத்தேயு 14: 22-33
திருஅவையைத் தொடர்து கட்டியெழுப்பும் சிற்பிகள் நாம்!
முன்னுரை.
திருத்தூதர்கள் புனித பேதுரு மற்றும் புனித பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்புக்கான நினைவு நாளை ஆண்டுதோறும் நவம்பர் 18ஆம் நாள் திருஅவை நினைவுகூர்கிறது, வத்திக்கானில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயம், திருத்தூதர் பேதுருவின் கல்லறை அமைந்துள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது. தற்போதைய பேராலயம் 1626ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் நேர்ந்தளிக்கப்பட்டது.
முதல் வாசகம்.
புனித லூக்கா எழுதிய திருத்தூதர் பணிகள் நூலில் எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், மூன்று மாதங்களுக்குப் பிறகு பவுல் உரோமைக்குப் பயணம் செய்து அங்கு வந்தடைந்தார் என்றும். உரோமையில் மனமாற்றத்திற்கு உள்ளாகி கிறிஸ்துவை ஏற்ற கிறிஸ்தவர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர் என்றும் லூக்கா குறிப்பிடுகிறார்.
உரோமையில், உரோமையர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், பவுல் தன்னைச் சந்திக்க வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு, கடவுளின் ஆட்சியைப் பற்றிப் போதித்தார். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைத் துணிவுடன், தடையின்றி அறிவித்தார் என்று குறிப்பிடப்படுள்ளது.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களைப் படகில் ஏறி மறுகரைக்குச் செல்லுமாறு பணித்துவிட்டு, தனியாக இறைவனிடம் வேண்டுவதற்காக மலைக்குச் சென்றார். இரவு நேரத்தில் படகு கடலில் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டது. அப்போது இயேசு கடலின்மீது நடந்து சீடர்களை நோக்கி வந்தார். அவரைக் கண்ட சீடர்கள் அச்சமடைந்தனர். ஆனால் இயேசு, “துணிவுடன் இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பேதுரு இயேசுவை நோக்கிக் கடலின்மீது நடந்து வர முயன்றார். ஆனால் காற்றைக் கண்டு அஞ்சியதால் அவர் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினார்.
உடனே இயேசு தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்று கேட்டார். இயேசு படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்த சீடர்கள் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்று அறிக்கையிட்டனர்.
சிந்தனைக்கு.
இன்று திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு -நினைவைக் கொண்டாடுகிறோம். இந்த இரு பேராலயங்களின் அடித்தளம், முதல் நூற்றாண்டைச் சார்ந்தது. திருத்தூதர்களான புனித பேதுருவும் புனித பவுலும் தங்களது குருதியைச் சிந்தி மறைசாட்சிகளாக உயிர்துறந்த இடங்களிலேயே, இன்று இப்பேராலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிட தக்கது.
கி.பி. 64ஆம் ஆண்டு, பெரும் தீ விபத்து உரோம் நகரின் பெரும்பகுதியை அழித்தது. அந்தத் தீ விபத்திற்குக் கிறிஸ்தவர்களே காரணம் என்று உரோமையின் நீரோ மன்னன் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து, உரோமைப் பேரரசில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான முதல் திட்டமிட்ட துன்புறுத்தலைத் தொடங்கினார். கைது செய்யப்பட்டு மறைசாட்சிகளாக உயிர்துறந்த பலருள் புனித பேதுருவும் புனித பவுலும் அடங்குவர். பேதுருவும் புனித பவுலும் தங்களது குருதியைச் சிந்தி மறைசாட்சிகளாக உயிர்துறந்த இடங்களிலேயே, இன்று இப்பேராலயங்கள் அமைந்துள்ளன.
இன்று, நவம்பர் 18ஆம் நாள், அவர்களது கல்லறைகளின் மீது எழுப்பப்பட்டு, அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு விழாவை நினைவுகூர்ந்து, அவ்விரு புனிதர்களையும் மீண்டும் ஒருமுறை சிறப்பித்துப் போற்றுகிறோம். குறிப்பாக, இந்த இரண்டு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும்போது, கட்டடங்களாகிய ஆலயங்களை மட்டுமல்ல, அவை யாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளனவோ அந்தத் திருத்தூதர்களின் நற்செய்தி பணியையும் அதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் போற்றி மகிழுகிறோம்.
புனித பேதுரு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்களின் தலைவராகவும், திருஅவையின் ஒற்றுமையின் அடையாளமாகவும் விளங்குகிறார். இயேசு அவரிடம், "நீர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருஅவையைக் கட்டுவேன்" (மத்தேயு 16:18) என்று கூறினார். இதன் வழியாக, திருவையின் தலைமைப் பொறுப்பையும், நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டிய கடமையையும் நாம் உணர்கிறோம்.
புனித பவுல் பிற இனத்தவருக்கான திருத்தூதராக விளங்கினார். இயேசுவைச் சந்தித்த பின்னர், தனது வாழ்க்கையையே நற்செய்திப் பணிக்காக அர்ப்பணித்தார். பல நாடுகளுக்குப் பயணம் செய்து, பல கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கி, தமது திருமுகங்கள் வழியாக கிறிஸ்தவ நம்பக்கையின் ஆழமான போதனைகளை வழங்கினார். அவர் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்கும் திருஅவையின் மறைப்பணிக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
புனித பேதுரு உரோமையில், தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டதாகவும், புனித பவுல் தலைவெட்டப்பட்டு மறைசாட்சியாக உயிர்துறந்ததாகவும் மரபு வழி அறிகிறோம். இந்த விழா நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது: திருஅவையானது, வெறும் கட்டடங்களால் ஆனது அல்ல; அது நம்பிக்கை கொண்ட இறைமக்களால் கட்டியெழுப்பப்படும் இறைச் சமூகம். பேதுரு மற்றும் புனித பவுல் அடிகள் போன்று நற்செய்தியை மற்றவர்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். நாம் பேருக்காக வாழும் கிறிஸ்தவர்கள் அல்ல. மாறாக, நற்செய்தி பணிக்கான ஊழியர்கள்.
இறைவேண்டல்.
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டரே, புனித பேதுருவும் புனித பவுலும் தங்கள் குருதியையே சிந்தி, இறுதிவரை கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்குசு சான்று பகர்ந்ததைப்போல, என் வாழ்வாலும் செயல்களாலும் உமது நற்செய்திக்குச் சான்று பகர தேவையான துணிவையும் அருளையும் தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
