இறைக்குழந்தைகளின் நடனம் அழகானது | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

ஒரு நடன வகுப்பில் ஒரு மணிநேரத்துக்கு ஆயிரம் ரூபாய், பணத்தை வாங்கிக்கொண்டு நடனம் கற்றுக்கொடுக்க ஏராளமான நடனப் பள்ளிகள் வந்துவிட்டன. பள்ளிக்கூடங்களில் ஒரு மணி நேர நடன வகுப்பு என்று சொல்லி எவ்வளவு பணம் கறக்க முடியுமோ, அத்தனையும் கறந்து விடுகின்றனர். ஆனால், திருச்சியைச் சேர்ந்த வினோத் இலவசமாக நடனம் கற்றுக்கொடுப்பதைத் தமது சேவையாக வைத்துள்ளார். அதுவும், இறைவனின் சிறப்புக்குரியவர்கள் என்று அழைக்கப்படும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு. மனநலம் குன்றிய குழந்தைகளிடம் பழகுவது என்பதே கடினமான ஒன்றுதான். ஆனால், அவர்களோடு பழகி அவர்களுக்கும் நடனம் கற்றுக்கொடுப்பது உண்மையில் சவால் நிறைந்தது.

தமது ஒரு வயதிலேயே தந்தையை இழந்த வினோத், குடும்ப வறுமை காரணமாக ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உண்டு என்பதை உணர்ந்து 12 வயதிலிருந்தே உணவகம், கட்டிடத் தொழில், பெயிண்டிங் வேலை, கூலி வேலை என இவர் செய்யாத வேலைகளே இல்லை. இருப்பினும் நடனக்கலைமீது சின்ன வயதிலேயே வினோத்துக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இசையைக் கேட்டாலே இவரது கையும் காலும் தானாகவே நடனமாடும். முறையாக நடனம் கற்காவிட்டாலும் நடனக்கலையை இவருக்குக் கடவுள் கொடுத்த வரமாகவே பார்க்க முடியும். மேற்கத்திய நடனம், கிராமிய நடனம், பாரம்பரிய நடனம் என அனைத்திலும் இவர் திறமைசாலி.

மேலும் தனக்குத் தெரிந்த நடனக்கலையோடு சில நடன நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். தற்போது பகுதிநேர நடன ஆசிரியராகப் பணியாற்றும் வினோத், திருச்சியில் உள்ள சிறப்புப் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுக்கொடுக்கிறார்.

"மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுப்பதில் மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளும் உயர வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கிறேன். நன்றாக நடனம் ஆடுபவர்களுக்கே மேடையில் இடம் கிடைப்பதில்லை. அப்படியிருக்க மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகள் மேடையேறுவதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி யாராலும் தர முடியாத ஒன்று. எனவேதான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சிறப்புப் பள்ளியில் எனது நேரத்தைக் கழிக்கிறேன்” என்று பூரிப்புடன் சொல்கிறார் வினோத்.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் நமது சிறப்புக் கவனத்துக்குரியவர்களாகட்டும்!


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image