வழிகாட்டும் பங்குத்தந்தை...| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

மரியபுரம், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமம். கிராமத்தின் நடுவில் மாதாவின் அழகிய ஆலயம். ஆண்டுதோறும் மாதாவின் தேர் திருவிழா ஆடம்பரமாகக் கொண்டாடப்படும்.

விழாவைக் காண்பதற்கு மரியபுரம் மக்கள் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் பெரும் திரளாகக் கூடிவிடுவார்கள். ஆலயம் எழுப்பப்பட்ட 100-வது ஆண்டு வந்தது. விழாவை வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு செய்தார்கள்.ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஒளி வீசியது. மலர்களால் மாதா பீடமும், மாதாவின் தேரும் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. திருப்பலி முடிந்தவுடன், பங்குத்தந்தை மாதா தேரை மந்திரித்தார்.தேரைத் தோள்களில் தூக்கிச் செல்வதற்காக நான்கு இளைஞர்கள் முன்வந்தார்கள். அவர்கள் நால்வரும் குடிபோதையில் இருந்தபடியால், ஊர்பெரியவர்கள் தேரைத் தூக்க விடவில்லை. இதனால் வீண் வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்ட நேரத்தில் பங்குத்தந்தை அங்கு வந்து அவர்களிடையே அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

நான்கு இளைஞர்களையும், பங்குத்தந்தை தனியாக அழைத்துச் சென்று, "நீங்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிடவில்லையென்றால் இன்னும் மூன்று மாதத்தில் உங்களில் ஒருவர் இறப்பது உறுதி" என்றார். இறப்பு, அதுவும் இளைஞர்களுக்கு என்று கேட்டவுடன், இறப்பைப்பற்றிய பயம் அவர்களுக்கு ஏற்பட்டது. குடிப்பழக்கத்தை வீட்டுவிட்டனர். நல்ல செயல்களைச் செய்யத்தொடங்கினர். மூன்று மாதங்கள் பங்குத்தந்தையை சென்றவுடன் சந்தித்தார்கள். "நீங்கள் குடிப்பழக்கத்தை தவிர்த்தபடியால், உங்களுள் யாருக்கும் சாவு இல்லை. தொடர்ந்து நல்லவர்களாக வாழ்ந்தால், இந்த ஆண்டு மாதா தேரை நீங்கள் தூக்கி சிறப்பிக்கலாம்" என்றார் பங்குத்தந்தை.

மாதா தேர்திருவிழா வந்தது. திருவிழாவுக்கு பெரிய கூட்டம். குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்ட நான்கு இளைஞர்களும் மாதா தேரைத் தூக்கிச் சென்றார்கள். இதைப் பார்த்த மற்ற இளைஞர்கள், நாங்களும் தேரைத் தூக்க வேண்டும் என்று விரும்பினர். பங்குத்தந்தையும் கிராமத்துப் பெரியவர்களும் கூடி, மாதா தேரை தூக்க விரும்புகிறவர்களுக்கு குடிப்பழக்கம் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தார்கள். அன்றிலிருந்து மரியபுரம் குடிப்பழக்கம் இல்லாத கிராமமாக மாறியது.

நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே. ( நீமொ 20:18) 

எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image