மௌனம் ஒரு தவம்... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
ஐந்து ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டு, சீடர்கள் ஐவரும் வேதம் போதிக்கப் புறப்பட்டனர். பயணத்தைத் தொடங்குமுன் குருகுலத் தலைமை குருவிடம் ஆசீர் பெறச் சென்றார்கள்.
ஒரு சிறிய குடிசை வீட்டில் குரு வாழ்ந்து வந்தார். சீடர்கள் குடிசைக்கு முன் குருவிற்காகக் காத்திருந்தனர். படித்து முடித்து பட்டமும் பெற்றுவிட்டோம். சான்றிதழும் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில், சீடர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். குடிசையிலிருந்து குரு வெளியே வந்தார். அமைதியாக இருந்த இடத்தில், சீடர்கள் ஆடல் பாடல்களோடு சத்தம் செய்வதைப் பார்த்து கடும் கோபம் கொண்டார்.
அனல்பறக்கும் கோபக் கண்களோடு, சீடர்களைப் பார்த்து, "நீங்கள் வேதம் போதிக்க இன்னும் தகுதி பெறவில்லை. உங்கள் உள்ளத்தில் அமைதி கிடையாது. வேதம் போதிப்பதற்கு அடிப்படைத் தேவை அமைதி. எனவே, இப்போது உங்களுக்கு ஆசீர் வழங்க முடியாது. மேலும், அமைதியைப் பெற, வருகிற தவக்காலத்தின் நாற்பது நாட்களிலும் குருகுலத்திலேயே தங்கி மௌனத்தைக் கடைபிடித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கட்டளை இடுகிறேன் " என்று பணித்தார் குரு.
அந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்களது ஐந்து வயது சிறுமியின் பிறந்த நாளில், தலைமைக் குருவிடம் ஆசீர் பெற குருகுலத்துக்கு வந்தனர். சிறுமியின் முகத்தை உற்று நோக்கிய குரு, சிறுமி கவலையோடும், சோகத்துடனும் இருப்பதைக் கவனித்தார். சிறுமியைப் பார்த்து, " ஏன் சோகமாகவும், கவலையுடனும் இருக்கிறாய் ?" என்று கேட்டார். சிறுமி கலங்கிய கண்களுடன் பேச ஆரம்பித்தாள்."அப்பா, அம்மா இருவரும் எப்போதும் போடுகிறார்கள். சண்டை ஒருவரையொருவர் கெட்ட வார்த்தைகளினால் திட்டிக் கொள்கிறார்கள். அப்பா, அம்மாவைப் பார்த்து, நாயே, பேயே என்றும், அம்மா, அப்பாவைப் பார்த்து கழுதையே, பன்றியே என்றும் திட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் நாய், பன்றி என்றால் நான் யார்? நாயா அல்லது பன்றியா?" என்று கூறிக் கொண்டே அழ ஆரம்பித்தாள் சிறுமி.
குரு பெற்றோரைத் தனியாக அழைத்தார். அவர்களிடம் "உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு வளர வேண்டுமென்றால் நீங்கள் சண்டை போடுவதை உடனே நிறுத்துங்கள். இந்த தவக்காலம் முழுவதும் மௌனம் காத்து குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள்" என்றார்.
குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள், குழப்பங்கள் எழுவது இயல்பு. இவற்றைத் தீர்ப்பதற்கான ஒரே மருந்து 'மௌனம்.' மௌனத்தைக் கடைபிடித்து வாழ்வது மிகப்பெரிய தவ முயற்சியாகும்.
நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார். (நீமொ 22:6)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
