வீடுவரை உறவு... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil

புதிய பங்குத்தந்தை பங்கின் பொறுப்பை ஏற்றவுடன் முதல் பணியாக இல்லங்களைச் சந்திக்கத் தொடங்கினார். ஒரு வீட்டில் நுழைந்தபோது வயதான கணவனும் மனைவியும் இருந்தனர். அவர்களைக் கவனிக்க வீட்டில் யாருமில்லை. தனிமையில் அவர்கள் துன்பப்படுவதைப் பார்த்த பங்குத்தந்தை வேதனையோடு வெளியே வந்தார்.

அன்று மாலை இளந்தம்பதியர் பங்குத்தந்தையைச் சந்திக்க வந்தார்கள்."பாதர்! இன்று காலையில் வயதான பெற்றோர் வீட்டிற்குச் சென்று அவர்களைச் சந்தித்தீர்கள். அவர்கள்தான் என் பெற்றோர். நான் அவர்களுடைய இளைய மகன். முடியாத வயதில் அவர்கள் தனிமையில் வேதனைப்படுகிறார்கள். எங்களோடு வந்து தங்கும்படி கூறினால், 'வரமுடியாது' என்று பிடிவாதம் செய்கிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. நீங்கள் அவர்களிடம் எங்களோடு தங்குமாறு அவர்கள் தங்கியிருக்கிற வீட்டை என் கூறினால் சம்மதிப்பார்கள். பையனுக்கு எழுதிவைத்துவிட்டு, எங்களோடு தங்கும்படி கூறுங்கள். நாங்கள் நல்லவிதமாக அவர்களைக் காப்பாற்றுவோம்" என்று கூறினர். அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் தெரிந்தது பங்குத்தந்தைக்கு.

மறுநாள் காலையில் பங்குத்தந்தை பெரியவரைப் பார்க்கச் சென்றார். அவரிடம், ''ஐயா! நேற்று மாலை உங்கள் இளையமகன், என்னை வந்து சந்தித்தார். நீங்கள் தனிமையில் வாடுவதைப்  பார்த்து மிகவும் வேதனைப்படுகிறார். நீங்கள் தங்கி இருக்கிற வீட்டை உங்களுடைய பேரனுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, உங்கள் இளைய மகன் வீட்டில் தங்கியிருங்கள். அவர்கள் உங்களை எந்தக் குறையுமின்றி காப்பாற்றுவார்கள்" என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன் கண்களில் கோபக்கனல் பொங்க கத்தக் தொடங்கினார் பெரியவர். "பாதர்! உங்களுக்கு ஊர் உலகம் பற்றி எதுவும் தெரியாது. குடும்பங்களில் நடப்பது பற்றியும் எதுவும் தெரியாது. என் மகன் ஒரு ஏமாற்று ஆசாமி. எனக்கு சொத்துக்கள், நிலங்கள் எல்லாம் நிறைய இருந்தன. அனைத்தையும் எனது மூன்று மகன்களும் எடுத்துக்கொண்டார்கள். இந்த வீடு மட்டும்தான் எங்களுக்குச் சொந்தம். ஐந்து வருடங்களாக இந்த வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம். எவனும் எங்களை எட்டிப்பார்த்தது கிடையாது. ஆதரவு அற்றவர்களாய் இருந்தாலும், இந்தச் சொந்த வீட்டில் நிம்மதியாகத் தூங்கி எழுகின்றோம், இப்போது நீங்களும் அவனோடு சேர்ந்து எழுதிக் கொடுக்கச் சொல்கிறீர்கள், எங்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு சாகடிக்கப்பார்க்கிறீர்களா?" என்று மிகுந்த மன வேதனையோடு கொட்டித்தீர்த்தார் பெரியவர் இரக்கமற்ற இளைய மகனுடைய வஞ்சகம், கபடு மனதைப் புரிந்து கொண்டார் பங்குத்தந்தை. அப்போது அவர் மனதில் பழைய நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது.

பணக்காரர் ஒருவருக்கு இரண்டு மகன்கள். இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் வயதான பெற்றோரைத் தனிமையில் விட்டுவிட்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். ஆண்டுகள் சில கடந்தன. வயது மூப்பின் காரணமாக தாய் இறந்து விட்டாள். தந்தை தனிமையில் வாடினார். அப்போது தந்தை இரண்டு மகன்களையும் அழைத்து அவர்களிடம் 'எனக்கு வயதாகிவிட்டது. உடல்நலம் சரியில்லை. நான் வாழும் இந்த வீட்டின் மதிப்பு பத்து கோடிக்கு மேல் இருக்கும். என்னுடைய கடைசி நாள்களில் எந்த மருமகள் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாளோ, அவளுக்கு இந்த வீட்டை இறப்பதற்குமுன் எழுதிவைக்கிறேன்!" என்றார் பெரியவர்.

இரண்டு மருமகள்களும் எப்படியாவது அந்த வீட்டைப் பெறவேண்டும் என்ற ஆசையில் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு பெரியவரைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். இவர்களுடைய நல்ல கவனிப்பில் பெரியவர் நல்ல உடல் சுகத்தோடு 100-வது வயதைத் தொடங்கினார். அப்போது தயாரித்து வைத்திருந்த 'உயிலை' பங்குத்தந்தையிடம் கொடுத்தார். பின் தனது 101-வது வயதில் இறந்தார் பெரியவர்.

உயில் திறக்கப்பட்டது. அதில் "என்னை இரண்டு மருமகள்களும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி. இந்த வீட்டை ஏழைகளுக்காக அன்னை தெரசா சபைக்கு எழுதிக்கொடுக்கிறேன்" என்று எழுதியிருந்தது.


எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.

Tamil Survey Popup Image