வெறுப்பை வாங்க முடியாது | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

2015ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பாரிஸ் மாநகரிலும், புற நகரிலும் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டார்கள். அந்தோனி லைரிஸ் என்ற பத்திரிகையாளரின் இளம் மனைவி ஹெலன் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பலியானார். அப்போது அந்தோனி லைரிஸ் எழுதிய திறந்த கடிதம் பல்லாயிரக்கணக்கான இதயங்களில் வியப்பைத் தந்தது. அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி:

"வெள்ளிக்கிழமை இரவு, ஓர் அற்புத உயிரை நீங்கள் திருடிக் கொண்டீர்கள். அவர்தான் என் மனைவி, என் மகனின் தாய். ஆனால், என் வெறுப்பை நீங்கள் பெறவேண்டும்; நான் பயத்தில் வாழ வேண்டும்; எனக்கு அருகிலிருப்போர் அனைவரையும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். என் பாதுகாப்பிற்காக என் உள்மனச் சுதந்திரத்தைப் பலிகொடுக்க வேண்டும் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அது நிச்சயம் நடக்காது. உங்கள் எண்ணம் நிறைவேறாது.

இப்போது இருப்பது நாங்கள் இருவர் மட்டுமே, நானும் என் மகனும். வழக்கத்தைப்போலவே என் 17 மாத மகன் மெல்வின் தூங்கி எழும்புவான். ஒவ்வொரு நாளைப்போலவே உணவு உண்டு விளையாடுவான். அவனிடமிருந்து மகிழ்ச்சியை உங்களால் பறிக்க முடியாது. அவன் மகிழ்ச்சியாக இருப்பதும், சுதந்திரமாக இருப்பதுமே உங்களை அச்சுறுத்தும். ஆனால், உலகின் இராணுவங்களைவிட நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள்".

வெறுப்புக்குப் பதில் வெறுப்பைக் கொட்ட அனைவரும் முன்வந்துவிட்டால் பார்க்கும் திசை எல்லாம் கல்லறைகளும் சுடுகாடுகளும்தாம் மிஞ்சும்.


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image