கிறிஸ்தவ மறைப்பணிக்கு எதிர்ப்பு! | Veritas Tamil
தென்கிழக்கு வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளில் கிறிஸ்தவ மறைப்பணியாளர்களின் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அமர் வங்கதேசக் கட்சியின் (AB Party) பொதுச்செயலரும் வழக்கறிஞருமான அசாதுஸ்ஸமான் ஃபுவாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்ரா சங்பாத் (Chhatra Sangbad) என்ற யூடியூப் அலைவரிசையில் அண்மையில் நடைபெற்ற நேர்காணலில் பேசிய அவர், கிறிஸ்தவ மறைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், சிட்டகாங் மலைப்பகுதிகளில் எந்தவொரு கிறிஸ்தவ மறைப்பணியாளரும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அப்பகுதிகளில் கிறிஸ்தவ மறைப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியையும் அவர்களின் செயல்பாடுகளையும் வங்கதேச அரசு முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது கருத்துகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகத்தினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இக்கருத்துகள் மதப் பாகுபாட்டைத் தூண்டுவதோடு, நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். அதேவேளையில், சில சமூக ஊடகப் பயனர்கள் அவரது கருத்துகளுக்கு ஆதரவும் தெரிவித்தனர்.
இது குறித்து RVA செய்தி நிறுவனத்திடம் பேசிய வங்கதேசக் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் நிர்மல் ரோசாரியோ, அசாதுஸ்ஸமான் ஃபுவாத்தின் கருத்துகளைக் கடுமையாகக் கண்டித்தார்.
"18 கோடி மக்கள் வாழும் வங்கதேச நாட்டில், இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு ஃபுவாத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்தைக்கூட நாங்கள் காணவில்லை. இருப்பினும், இத்தகைய பேச்சுகள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. சமூக ஒற்றுமையையும், மதச்சார்பற்ற பண்பையும், பல்வேறு மதத்தினர் இணைந்து வாழும் பாரம்பரியத்தையும் இவை சீர்குலைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களின் கூட்டு உழைப்பாலும் பங்களிப்பாலும் வங்கதேசம் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஃபுவாத்தின் கருத்துகள் பிற்போக்குத்தனமானவை என்றும் எதிர்மறையானவை என்றும் கூறினார்.
வங்கதேச அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் மதச் சுதந்திரத்தையும், தங்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் உறுதிப்படுத்துகிறது என்றும், ஒவ்வொருவரும் தங்களது மதத்தைப் பின்பற்றவும் அதனைப் பரப்பவும் உரிமை பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, ஃபுவாத்தின் கருத்துகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை; ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொறுப்பான பொதுவாழ்வில் இருப்பவர்களிடமிருந்து இத்தகைய கருத்துகள் வெளிவரக்கூடாது என்றும், ஒரு வழக்கறிஞராக இருக்கும் அவர், தனது தொழிலுக்குரிய ஒழுக்கநெறிகளுக்கும் பொறுப்புணர்வுக்கும் முரணாகப் பேசியுள்ளார் என்றும் நிர்மல் ரோசாரியோ தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தின் உணர்வில் உருவான வங்கதேசத்தில், மதப் பாகுபாட்டையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் பொறுப்பற்ற கருத்துகளைத் தவிர்க்குமாறு ஃபுவாத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் மேரிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கதேச கிறிஸ்தவ சங்கம் (Bangladesh Christian Association Inc. – BCA), கிறிஸ்தவ மறைப்பணியாளர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிட்டகாங் மலைப்பகுதிகளில் பல ஆண்டுகளாக கிறிஸ்தவ மறைப்பணியாளர்களும், கிறிஸ்தவ அடிப்படையிலான தொண்டு நிறுவனங்களும் மத வேறுபாடின்றி கல்வி, அடிப்படை மருத்துவப் பராமரிப்பு, சமூக மேம்பாடு மற்றும் மனிதாபிமான உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து கிறிஸ்தவ நிறுவனங்களையும் பொதுவாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, அத்தியாவசிய சமூக நலப் பணிகளைப் பாதிப்பதோடு, வங்கதேசத்தின் பல்வேறு மத மற்றும் இன சமூகங்களுக்கு இடையிலான அமைதியான இணக்க வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று எச்சரித்துள்ளது.
மதச் சுதந்திரமும், சட்டப்படி பதிவு செய்யப்பட்ட மத மற்றும் தொண்டு நிறுவனங்களைச் செயல்படுத்துவதற்கான உரிமையும் வங்கதேச அரசியலமைப்புச் சட்டத்தாலும், சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டரீதியான அல்லது நிர்வாக ரீதியான பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின், அவை உரிய சட்ட நடைமுறைகளின்படி தனித்தனியாக அணுகப்பட வேண்டும் என்றும், ஒட்டுமொத்த மதச் சமூகத்தையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கக் கோருவது சகிப்புத்தன்மையின்மையையும் சமூகப் புறக்கணிப்பையும் ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே, பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துகளை நிராகரிக்கவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கிறிஸ்தவ மறைப்பணியாளர்களும் மனிதாபிமானப் பணியாளர்களும் பாதுகாப்புடனும் மாண்புடனும் தங்களது சட்டபூர்வமான சேவைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு வழிவகை செய்யவும் வங்கதேச அரசுக்கும், குடிமைச் சமூகத் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த அறிக்கை அமெரிக்காவின் மேரிலாந்தில் செயல்படும் வங்கதேச கிறிஸ்தவ சங்கத்தின் இயக்குநர்கள் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
