இறைநம்பிக்கையே அச்சத்தை வெல்லும் ஆற்றல்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

26 நவம்பர் 2026
 
திருவெளிப்பாடு 18: 1-2, 21-23; 19: 1-3, 9a
லூக்கா  21: 20-28
 
இறைநம்பிக்கையே அச்சத்தை வெல்லும் ஆற்றல்!

முதல் வாசகம்.

இந்த வாசகத்தில் தீமையின் வீழ்ச்சியையும், இறுதியில் கடவுளின் வெற்றியையும் நாம் அறிய வருகிறோம். யோவானின் இக்காட்சியில், வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வருவதை யோவான் காண்கிறார். அந்த வானத்தூதரின்  மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்ததை யோவான் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, வானதூதர் பாபிலோனின் வீழ்ச்சியை அறிவிக்கிறார். இங்கு பாபிலோன் என்பது பாவம், அநீதி, ஆணவம், சிலைவழிபாடு மற்றும் கடவுளுக்கு எதிரான உலக சக்திகளின் அடையாளமாக விளங்குகிறது. தீமையும் அநீதியும் எவ்வளவு வலிமையாகத் தோன்றினாலும் அவை நிலைத்து நிற்க முடியாது என்பதை இது உணர்த்துகிறது.

ஒரு பெரிய கல்லை கடலில் வீசுவதுபோல பாபிலோன் அழிக்கப்படும் என்று வானதூதர் அறிவிக்கிறார். அதன் இசை, மகிழ்ச்சி, வணிகம், செல்வம் அனைத்தும் முடிவுக்கு வரும் என்றும்,  மனிதனின் ஆணவமும் பொருளாசையும் நிலையானவை அல்ல; கடவுளின் நீதியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதும் இங்கே எடுத்துரைக்கப்படுகிறது.

நிறைவாக, பாபிலோனின் வீழ்ச்சியைக் கண்டு விண்ணகத்தில் பெருந்திரளான மக்கள், 'அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன' என்று கடவுளைப் புகழ்கின்றனர். இறுதியில், ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பேறுபெற்றவர்கள் என்று அறிவிக்கப்படுகிறது. இது கிறிஸ்துவுக்கும் அவரது மக்களுக்கும் இடையிலான நிலையான உறவையும் இறுதி மீட்பின் மகிழ்ச்சியையும் குறிப்பதாக உள்ளது.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில்  இயேசு எருசலேமின் அழிவையும், இறுதிக்காலத்தில் நிகழவிருக்கும் அடையாளங்களையும் எடுத்துரைத்ததை லூக்கா குறிப்பிடுகிறார்.  எருசலேம் படைகளால் சூழப்படும்போது அதன் அழிவு நெருங்கிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும் என்று இயேசு எச்சரிக்கிறார். மேலும், வானிலும் பூமியிலும் ஏற்படும் அடையாளங்கள் மனிதர்களிடையே அச்சத்தையும் கலக்கத்தையும் உருவாக்கும் என்று கூறுகிறார்.

ஆனால் இந்த வாசகத்தின் முக்கியமான செய்தி அழிவைப் பற்றியது மட்டுமல்ல; நம்பிக்கையையும் மீட்பையும் பற்றியதுமாகும். மானிட மகன் மிகுந்த வல்லமையுடனும் மாட்சியுடனும் மேகங்கள் மீது வருவார். இந்நிகழ்வுகள் நடைபெறும்போது அச்சத்தில் மூழ்காமல், நிமிர்ந்து நின்று தலைநிமிருங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது என்று இயேசு அழைப்பு விடுக்கிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இடம்பெற்றுள்ள வாசகப் பகுதியானது நமக்கு அச்சமூட்டும் செய்தியாக அமைந்துள்ளது. ஆம்,  நம் ஆண்டவராகிய இயேசு ஓர் ஆழமான, அதேவேளையில் அச்சமூட்டும் இறைவாக்கை பகிர்கிறார்.  எருசலேமின் அழிவையும், அதன் குடிமக்களுக்கு நேரிடவிருக்கும் கொடிய துன்பங்களையும் அவர் முன்னறிவிக்கிறார். எருசலேம் பகைவர் படைகளால் முற்றுகையிடப்பட்டு,  அப்பகுதி  மக்கள் பாதுகாப்புத் தேடி ஓடுவார்கள் என்றும் அப்போது,  தீர்ப்பும் தண்டனையும் நிகழும் காலம் வரும் என்றும் இயேசு முன்னறிவிக்கிறார்.  கூறுகிறார்.

ஆனாலும்  இத்தகைய அழிவையும் பேரிடரையும் குறித்து முன்ன்றிவிக்கும் இயேசு  தம் சீடர்களின் பார்வையை நம்பிக்கையின் பக்கம் திருப்பி, ‘நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது’ என்று நம்பிக்கையூட்டியதை லூக்கா இங்கே பதிவுச் செய்துள்ளார். 

இன்றைய இரண்டு வாசகங்களும் அழிவு, தீர்ப்பு, துன்பம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டாலும், அவற்றின் ஆழமான செய்தி நம்மில் அச்சத்தை உருவாக்குவது அல்ல என்பது தெளிவாகிறது.  மாறாக, இவை இரண்டுமே  நம்மில் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவதாக உள்ளன.  

உணமையில்,  நம் வாழ்நாளில் நிலையானது என்று நாம் நினைத்து பெருமைபடுவதெல்லாம்  ஒருநாள் மறைந்துபோகலாம்! முதல் வாசகத்தில் பாபிலோன் நகரத்தின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசப்படுகிறது. செல்வம், அதிகாரம், ஆடம்பரம், வணிகம் என்று செழிப்புடன் விளங்கிய பாபிலோன் இறுதியில் இயேசுவிற்குப் பிறகு, கி.பி. 70-ம் ஆண்டளவில் உரோமையர்களால் அழிக்கப்பட்டது. தாவீது அரசரால் எழுப்பப்பட்ட புனித நகரம் பிற்காலத்தில்  மனிதனின் ஆணவம், பேராசை, அநீதி, கடவுளை மறந்து வாழும் மனநிலை ஆகியவற்றின் அடையாளமாக மாறியதை வரலாறு எண்பித்தது. இன்றும் அது தலைத்தூக்கவில்லை. 

அவ்வாறே, நாம் கட்டியெழுப்பும் வீடுகள் ஒருநாள் பழுதடையலாம். நாம் சேர்த்துவைக்கும் செல்வங்கள் ஒருநாள் நம்மைவிட்டுப் பிரியலாம். நாம் பெற்றிருக்கும் புகழ்கூட மறைந்துபோகலாம். ஆனால் கடவுளோடு நாம் கொண்டிருக்கும் உறவும், பிறருக்காக நாம் செய்த அன்பின் செயல்களும் வீணாகிப்போவதில்லை. நாம் அழியப்போகும் உலகச் செல்வங்களுக்காக வாழ்கிறோமா அல்லது அழியாத விண்ணகச் செல்வங்களுக்காக வாழ்கிறோமா? எனபதே நமக்கான கேள்வியாக உள்ளது. 

நிறைவாக, நாம் துன்பங்களைக் கண்டு தலைகுனிகிறோமா? அல்லது  நம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்கிறோமா? இன்றைய நற்செய்தியில்  நிமிர்ந்து நின்று தலைநிமிருங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது என்று இயேசு அழைப்பு விடுக்கிறார் (லூக்கா 21:28).

இங்கே, இயேசு துன்பங்கள் வராது என்று வாக்குறுதி அளிக்கவில்லை. துன்பங்களின் மத்தியிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்றுதான் அழைக்கிறார். எதிர்பாரா துன்பங்கள், துயரங்கள் நம்மைத் தலைகுனியச் செய்யலாம். ஆனால் இயேசு நம்மிடம் கூறுவது: சூழ்நிலையைப் பார்த்து அஞ்சாதீர்கள்; என்னைப் பார்த்து நம்பிக்கையோடு தலைநிமிருங்கள் என்பதாகும். இந்த வாக்குறுதி நம்மில் நிலைக்கட்டும். 


இறைவேண்டல்.

ஆண்டவராகியே இயேசுவே, ஒவ்வொரு துன்பத்தின் மத்தியிலும் எனக்கு நம்பிக்கையைத் தாரும். ஒவ்வொரு சோதனையையும் ஒரு சுமையாகக் கருதாமல், துணிவுடனும், உறுதியுடனும், முழு நம்பிக்கையுடனும் உம்மை நோக்கி என் பார்வையை உயர்த்துவதற்கான ஒரு வாய்ப்பாகக் காண எனக்கு உதவி செய்வீராக. ஆமென்!

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image