திருப்பீடப் பொறுப்புகளுக்கு புதிய நியமனங்கள்! | Veritas Tamil
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நவம்பர் 21, சனிக்கிழமையன்று டொமினிக்கன் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் செர்ஜ்-தோமா பொனினோ அவர்களை திருத்தந்தை இல்லத்தின் இறையியலாளராக (Theologian of the Pontifical Household) நியமித்துள்ளார்.
தற்போது புனித தாமஸ் அக்வினாஸ் பாப்பிறை கல்விக்கழகத்தின் தலைவராக இருக்கும் அருள்பணி பொனினோ, 1961-ஆம் ஆண்டு பிரான்சின் மார்செய்ல் நகரில் பிறந்தவர்; இவர் 1988-ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இறையியல் மற்றும் தத்துவவியலில் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ள இவர், உலகளாவிய இறையியல் ஆணையத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், உரோமிலுள்ள புனித தாமஸ் அக்வினாஸ் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் (Angelicum) பேராசிரியராகவும் உள்ளார்.
மேலும், திருநிலையினர் குழாம்களுக்கான திருப்பீடத் துறையின் (Dicastery for the Clergy) இணைத் துணைச் செயலராக இதுவரை பணியாற்றி வந்த அருள்தந்தை என்ரிகோ மாசிக்னானி அவர்களை (Fr. Enrico Massignani), அதே திருப்பீடத் துறையின் துணைச் செயலராகவும் (Under-Secretary) திருத்தந்தை நியமித்துள்ளார்.
இறைவழிபாடு மற்றும் அருளடையாளங்களின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறையின் செயலர் ஆரேலியோ கார்சியா மாசியாஸ் (Aurelio García Macías) மற்றும் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையின் செயலர் பால் டெஸ்மண்ட் டைக் (Paul Desmond Tighe) ஆகியோருக்கு 'பேராயர்' என்ற தனிப்பட்ட சிறப்பு நிலை (Personal title of Archbishop) வழங்கப்பட்டது.
அதே நாளில், திருப்பீடச் செயலகத்தின் மரபு ஒழுங்கு நடைமுறைகளுக்கான தலைவராகப் பணியாற்றிவந்த பேராயர் ஹாவியர் டோமிங்கோ ஃபெர்னாண்டஸ் கொன்சாலஸ் அவர்களை, லைபீரியா மற்றும் சியரா லியோனுக்கான திருப்பீடத் தூதராகத் திருத்தந்தை நியமித்துள்ளார். மேலும், டியானோ என்ற பெயருடைய பட்டமதிப்புசார் மறைமாவட்டத்தின் பேராயராகவும் அவரை நியமித்துள்ளார்.
1973ஆம் ஆண்டு வெனிசுலாவின் கராகஸ் நகரில் பிறந்த இவர், 2001ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2007ஆம் ஆண்டு திருப்பீடத்தின் தூதரகப் பணியில் இணைந்தார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஸ்பெயின், நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள திருப்பீடத் தூதரகங்களிலும், திருப்பீடச் செயலகத்திலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
