ஒற்றுமையை வளர்க்கும் இசை! | Veritas Tamil

கலைகளும், குறிப்பாக இசையும், மகிழ்ச்சி, துயரம், நம்பிக்கை, ஏக்கம், துன்பத்தின் உண்மை நிலை மற்றும் நிலைவாழ்வு குறித்த உணர்வு போன்ற ஆழமான மனித அனுபவங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்றும், அதேவேளையில், மனிதர்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான கேள்விகளைப் புதிதாகச் சிந்தித்துப் பார்க்கும் உள்ளார்ந்த அமைதிக்கும் இசை அவர்களை இட்டுச் செல்கிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

நவம்பர் 21, சனிக்கிழமையன்று, 25ஆவது அனைத்துலக இசை மற்றும் கலை விழாவில் பங்கேற்பதற்காக வியன்னாவிலிருந்து வருகை தந்துள்ள வியன்னா பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் உறுப்பினர்களை வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஐரோப்பிய இசை வரலாற்றில் வியன்னா தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதையும், ஹெய்டன், மொசார்ட், பீத்தோவன், ஷூபர்ட், பிராம்ஸ், புரூக்னர் உள்ளிட்ட இசை மேதைகளின் படைப்புகள் எல்லைகளைக் கடந்து மனிதகுலத்தின் பொதுவான அறிவுசார் பாரம்பரியமாகத் திகழ்வதையும் எடுத்துக்காட்டினார்.

இந்த மாபெரும் இசைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பை வியன்னா பில்ஹார்மோனிக் இசைக்குழு சிறப்பாக ஆற்றி வருவதாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, கடந்த நூற்றாண்டுகளின் இசைப் படைப்புகளை உயிர்ப்பிப்பதன் வழியாக, இன்றைய தலைமுறையினரும் அழகின் உன்னதமான அனுபவத்தைப் பெறுவதற்கு அந்த இசைக்குழு வழிவகுப்பதாகப் பாராட்டினார்.

இசை, தமது மதிப்பிற்குரிய முன்னோடியான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, 2008ஆம் ஆண்டு அக்டோபரில் புனித பவுல் பெருங்கோவிலில் வியன்னா இசைக்குழுவினரைச் சந்தித்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், அவர்களின் இசை கேட்போரின் இதயங்களைத் தொட்டு, மனித அனுபவங்களைக் கடந்து இறைவனை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதாகப் பாராட்டியதை எடுத்துரைத்தார்.

அழகு என்பது நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் ஓர் அம்சம் மட்டுமல்ல; அது வாழ்வின் ஆழமான பரிமாணங்களைத் திறந்து, நமது வாழ்க்கையின் உண்மையையும் இறைமறைபொருளையும் உணரச் செய்கிறது என்று திருத்தந்தை கூறினார்.

குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கியுள்ள இக்காலத்தில், அன்றாட நடைமுறைச் செயல்களிலிருந்து சற்று விலகி, நமது இதயங்களை விரிவுபடுத்தி, நம்மைக் கடந்த ஓர் உயர்ந்த உண்மையால் தொடப்படுவதற்கு இத்தகைய அனுபவங்கள் பலருக்கு ஆறுதலையும் புத்துணர்வையும் அளிக்கின்றன என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

ஒரு இசைக்குழுவை மனிதக் குடும்பத்தின் அழகிய அடையாளமாகக் காணலாம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு இசைக்கருவியும் தனித்துவமான ஒலியையும் வெளிப்பாட்டையும் கொண்டிருந்தாலும், அனைத்தும் ஒன்றிணைந்து இசைக்கும்போதுதான் அழகான இசை உருவாகிறது என்று எடுத்துக்காட்டியதுடன் இதற்கு நுட்பமான திறமை மட்டுமன்றி, பிறருக்குச் செவிசாய்க்கும் பண்பும், ஒட்டுமொத்த இசையின் நலனுக்காகத் தமது பங்களிப்பைத் தாழ்மையுடன் வழங்கும் மனப்பான்மையும் தேவைப்படுகின்றன என்று வலியுறுத்தினார்.

போர்களும் மோதல்களும், அவநம்பிக்கையும் சமூகப் பதற்றங்களும் நிறைந்த இன்றைய உலகில், மனிதர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு எதிர்த்து நிற்பதற்காகப் படைக்கப்படவில்லை என்பதை இசை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், பிறருக்குச் செவிசாய்க்கவும், ஒருவரையொருவர் கவனத்தில் கொள்ளவும், அனைவருக்கும் உரிய இடமளிக்கும் நல்லிணக்கமான சமூகத்தை இணைந்து உருவாக்கவும் இசை கற்றுத்தருகிறது என்றும் கூறினார்.

இறுதியாக, இசை, பண்பாடு மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக வியன்னா பில்ஹார்மோனிக் இசைக்குழுவினர் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, அவர்களின் கலை தொடர்ந்து பலருக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்து, நம்பிக்கையைத் தூண்டி, உண்மை, நன்மை, அழகு மற்றும் அவற்றின் பிறப்பிடமான இறைவனை நோக்கி இதயங்களைத் திறக்க உதவ வேண்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார். 

Tamil Survey Popup Image