நிலையற்ற உலகில் நிலையான இறைவன்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
24 நவம்பர் 2026
திருவெளிப்பாடு 14: 14-20
லூக்கா 21: 5-11
நிலையற்ற உலகில் நிலையான இறைவன்!
முதல் வாசகம்
இந்த வாசகத்தில், திருத்தூதர் யோவான் மானிட மகனைப் போன்ற ஒருவர் வெண்ணிற மேகத்தின் மீது அமர்ந்திருப்பதைக் காட்சியாகக் காண்கிறார். அவரது தலையில் பொன்முடியும் கையில் கூர்மையான அரிவாளும் இருக்கின்றன. இக்காட்சியில் தோன்்றுபவர் இயேசுவாக நாம் அடையாளம் காண்கறோம். குறிப்பாக, பொன்முடி அவரது அரச அதிகாரத்தையும், அரிவாள் அவர் வழங்கவுள்ள இறுதித் தீர்ப்பையும் குறிப்பதாகப் பொருள் பொருள் கொள்ளலாம். அறுவடைக்காலம் வந்துவிட்டதால் பூமியின் விளைச்சலை அறுவடை செய்யும்படி அவருக்குக் கட்டளை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் உலகத்தின் முடிவில் இறைவன் மனிதர்களின் வாழ்வையும் செயல்களையும் மதிப்பீடு செய்வார் என்பதையும், ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு ஏற்ப இறைவனுக்கு முன்பாகக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் இவ்வாசகப் பகுதி உணர்த்துகிறது
தொடர்ந்து, மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார் என்றும் அவர் தனது கூர்மையான அரிவாளைக் கொண்டு திராட்சைக் கொத்துகள் அறுக்கப்பட்டு, இறைவனின் கோபம் என்னும் பெரிய ஆலையில் போடப்படுவதாகக் கூறப்படுகிறது. திராட்சை ஆலையில் திராட்சைகள் மிதிக்கப்படுவது, தீமையும் அநீதியும் இறுதியில் இறைவனின் நீதியிலிருந்து தப்ப முடியாது என்பதைக் குறிக்கிறது.
நற்செய்தி.
இந்த நற்செய்திப் பகுதியில், எருசலேம் ஆலயத்தின் அழகையும் அதன் பிரமாண்டத்தையும் சிலர் வியந்து பேசுவதைக் காண்கிறோம். அப்போது இயேசு, “இவற்றையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்களே! ஒரு கல்லின்மேல் மற்றொரு கல் இராதபடி இவை இடிக்கப்படும் காலம் வரும்” என்று கூறுகிறார். இதைக் கேட்ட மக்கள், இந்நிகழ்வு எப்போது நடக்கும் என்றும், அதன் அடையாளம் என்ன என்றும் கேட்கின்றனர். அதற்குப் பதிலளிக்கும் இயேசு, பலர் தம்முடைய பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவார்கள் என்றும், போர்களையும் கலகங்களையும் பற்றிய செய்திகள் வரும் என்றும், நாட்டுக்கு எதிராக நாடும் அரசுக்கு எதிராக அரசும் எழும் என்றும் எச்சரிக்கிறார். நிலநடுக்கங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள் போன்ற இயற்கைப் பேரிடர்களும் ஏற்படும் என்று கூறுகிறார்.
சிந்தனைக்கு.
திருவழிபாட்டு ஆண்டின் இந்த இறுதி வாரத்தில், திருஅவை நமது பார்வையை விண்ணக வாழ்வு என்னும் இறுதியான, மாட்சி நிறைந்த இலக்கை நோக்கி உயர்த்த நம்மை அழைக்கிறது. நிலைவாழ்வைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், விண்ணகத்தை அடைய வேண்டும் என்ற ஆவலை ஆழப்படுத்தவும் நமது வாழ்வின் இறுதி இலக்கை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ள வகையில் வாழவும் நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.
மேலும், இந்த வாசகத்தின் வழியாக இயேசு நமக்கு மற்றுமோர் ஆழமான ஆன்மீகப் பாடத்தை கற்பிக்கிறார். ஆம், உலகில் ஏற்படும் போர்கள், இயற்கைப் பேரிடர்கள், குழப்பங்கள் ஆகியவற்றைக் கண்டு நாம் அச்சமடையவோ, நம்பிக்கையை இழக்கவோ கூடாது. ஏனெனில், இவை அனைத்தும் உடனடியாக உலகின் முடிவு வந்துவிட்டது என்பதற்கான அடையாளங்கள் அல்ல என்று இயேசு தெளிவுபடுத்துகிறார்.
மாறாக, தவறான போதனைகளிலிருந்து விலகி, உண்மையான நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே அவரது அழைப்பு. இவ்வுலகா வாழ்வில், அதாவது, இம்மையில் நாம் கொண்டிருக்கும் ஆடம்பரங்களும் பெருமைகளும் நிலையானவை அல்ல; ஆனால் இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அவருடைய வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையுமே நிலையானவை. எனவே, எந்தச் சூழ்நிலையிலும் அச்சமின்றி, விழிப்புடனும் நம்பிக்கையுடனும் வாழ இயேசு நம்மை அழைக்கிறார்.
நிறைவாக, திருவெளிப்பாடு நூலில், அறுவடைக்குத் தயாரான உலகத்தைப் பற்றிய காட்சி நமக்குத் தரப்படுகிறது. கையில் அரிவாளுடன் மேகத்தின் மீது அமர்ந்திருக்கும் மானிட மகன் (இயேசு) , இறுதித் தீர்ப்பின் அடையாளமாக விளங்குகிறார். அறுவடை என்பது ஒவ்வொருவருடைய வாழ்வும் இறைவனால் மதிப்பீடு செய்யப்படும் நேரத்தைக் குறிக்கிறது. நாம் இவ்வுலகில் வாழும் காலத்தில் எத்தகைய அன்பையும், நீதியையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தினோம் என்பதற்கு இறைவன் முன்பாகக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை இவ்வாசகம் நினைவூட்டுகிறது.
இந்த இரு வாசகங்களும் நம்மிடம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன: நாம் எதைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம்? அழிந்துபோகும் உலகச் செல்வங்களையா? அல்லது அழியாத விண்ணகச் செல்வங்களையா? நமது வீடுகளையும் வாழ்க்கையையும் அழகுபடுத்துவதில் அக்கறை காட்டுகிறோம். ஆனால் நமது உள்ளத்தை இறைவனின் அன்பாலும், மன்னிப்பாலும், இரக்கத்தாலும் அழகுபடுத்துகிறோமா? ஆலயம் கற்களால் கட்டப்படலாம்; ஆனால் உண்மையான இறை இல்லமாக நமது இதயம் மாற வேண்டும். அறுவடை நாளில் இறைவன் எதிர்பார்ப்பது நமது செல்வத்தையோ பதவியையோ அல்ல; அன்பிலும் நம்பிக்கையிலும் நாம் வாழ்ந்த வாழ்க்கையையே!
எனவே, உலகில் எத்தகைய துன்பங்கள், சோதனைகள் வந்தாலும் அச்சமின்றி, நம்பிக்கையோடும் விழிப்புணர்வோடும் வாழ்வோம். நிலையற்ற உலகில் வாழ்ந்தாலும், நிலையான விண்ணகத்தை நமது இலக்காகக் கொள்வோம். இறைவனைச் சந்திக்கும் நாளில் வெறுமையான கைகளோடு அல்ல, நாம் செய்த அன்புச் செயல்கள் என்னும் நற்செல்வங்களோடு அவரைச் சந்திக்கத் தயாராவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே. அறுவடையின் நாயகரே உலகின் நிலையற்ற நிகழ்வுகளைக் கண்டு அஞ்சாமல் வாழும் மனஉறுதியை எனக்குத் தாரும். ஆமென்!
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
