வணக்கத்திற்குரிய அக்னேலோ அடிகளாரின் நூற்றாண்டு நினைவு விழா | Veritas Tamil

இந்தியாவின் கோவா மாநிலத்தில் வாழ்ந்து மறைந்த வணக்கத்திற்குரிய அக்னேலோ டி சௌசா அடிகளாரின் 100-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பிலார் சபையினர் ஓராண்டு கால சிறப்பு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். இதன் தொடக்க விழா, கடந்த நவம்பர் 20, 2026 அன்று கோவாவின் பிலாரில் நடைபெற்றது.

அன்றைய தினம் அக்னேலோ அடிகளாரின் 99-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பிலார் அன்னை மரியா துறவற இல்லத் திருக்கோவிலில் நடைபெற்ற திருப்பலிக்கு கோவா மற்றும் டாமன் மறைமாவட்டத்தின் துணை ஆயர் சிமியாவோ பெர்னாண்டஸ் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து, நூற்றாண்டு நினைவு கொண்டாட்டங்களை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஆயர், இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளத்துடன் அக்னேலோ அடிகளாரின் வாழ்க்கையை நினைவுகூரவும், அவர் வாழ்ந்த செபம், இரக்கம், தாழ்மை ஆகிய நற்பண்புகளைப் பின்பற்றவும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நூற்றாண்டு விழா, மக்களின் விசுவாச வாழ்வையும் புனிதத்துவத்தை நோக்கிய பயணத்தையும் புதுப்பிக்க உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து வணக்கத்திற்குரிய அக்னேலோ அடிகளாரின் புனிதர் பட்ட வழக்கின் துணை ஒருங்கிணைப்பாளர் அருள்பணி டாரெல் பெர்னாண்டஸ், SFX, வானொலி வெரித்தாஸ் ஆசியா*விடம் பேசுகையில், அக்னேலோ அடிகளாரின் வாழ்க்கை மற்றும் மறைப்பணியைப் பரவலாக எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு ஆன்மிக, கலை மற்றும் ஊடக நிகழ்ச்சிகளுக்குப் பிலார் சபையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, அடிகளாரின் வாழ்க்கை மற்றும் மறைப்பணியை விளக்கும் இசை நாடகம், அவரது ஆன்மிகம் மற்றும் திருஅவைக்கான பங்களிப்புகள் குறித்த கருத்தரங்கம், மேலும் அவரது வாழ்வையும் சான்று பகர்தலையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

மேலும், ஒவ்வொரு வியாழக்கிழமையையும் ஒரு குறிப்பிட்ட பங்கிற்கு அர்ப்பணித்து, அந்தப் பங்கைச் சேர்ந்த இறைமக்கள் பிலாரில் நடைபெறும் வாராந்திர நவநாள் திருப்பலியில் பங்கேற்க ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பங்குகளைச் சேர்ந்த விசுவாசிகள் ஒன்றிணைந்து, அக்னேலோ அடிகளாரின் ஆன்மிக வாழ்வையும் மறைப்பணி அர்ப்பணிப்பையும் ஆழமாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

இந்த நூற்றாண்டு விழாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு இலச்சினை, அக்னேலோ அடிகளாரின் வாழ்வில் வெளிப்பட்ட மூன்று முக்கிய நற்பண்புகளான செபம், இரக்கம், தாழ்மை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. அதில் இடம்பெற்றுள்ள மூன்று உருவங்கள், உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும் நற்செய்தியைப் பறைசாற்றிய அவரது அர்ப்பணிப்பு, ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக மக்களுக்கு இறையருளைப் பெற்றுத்தந்த பணி, ஏழை எளிய மக்களுக்குச் செய்த சேவை ஆகியவற்றைச் சித்தரிக்கின்றன. மேலும், அவர் வாழ்ந்ததும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுமான பிலார் அன்னை மரியா துறவற இல்லத் திருக்கோவிலும் இந்த இலச்சினையில் இடம்பெற்றுள்ளது.

கோவா மாநிலத் தலைநகர் பனாஜிக்கு அருகிலுள்ள பிலார் மலைப்பகுதி, ஆண்டுதோறும் நடைபெறும் நவநாள் வழிபாடுகள் மற்றும் அக்னேலோ அடிகளார் நினைவு நாளின்போது ஆயிரக்கணக்கான இறைமக்களை ஈர்த்து வருகிறது. இங்குள்ள திருத்தலத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் நவநாள் திருப்பலிகளிலும் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.

1927ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, இயேசுவின் திருஇருதய நவநாள் வழிபாட்டின்போது, ரச்சோல் பகுதியில் மறையுரையாற்றிக் கொண்டிருந்த அக்னேலோ அடிகளார் திடீரென மயங்கி விழுந்தார். மறுநாள் நவம்பர் 20ஆம் தேதி, தனது 48ஆம் வயதில் இறையடி சேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதையும் செபம், இறைவார்த்தைப் பணி மற்றும் மறைப்பணிக்காக அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது வீரத்துவமிக்க நற்பண்புகளை அங்கீகரித்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், 1986ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி அவரை 'வணக்கத்திற்குரியவர்' என அறிவித்தார். தற்போது அவரது புனிதர் பட்டத்திற்கான நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அக்னேலோ அடிகளாரின் ஆன்மிக மரபை மீண்டும் நினைவூட்டி, அவர் வாழ்ந்த செபம், இரக்கம், தாழ்மை ஆகிய நற்பண்புகளை இறைமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தூண்டுவதே இந்த நூற்றாண்டு நினைவு கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

Tamil Survey Popup Image