நெருக்கடியில் நமது நம்பிக்கையே நமது பலம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
25 நவம்பர் 2026
திருவெளிப்பாடு 15: 1-4
லூக்கா 21: 12-19
நெருக்கடியில் நமது நம்பிக்கையே நமது பலம்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகப் பகுதியில், யோவான் கடவுளின் இறுதி வெற்றியைப் பற்றிய ஓர் அற்புதமான காட்சியைக் விவரிக்கிறார். அக்காட்சியில், ஏழு இறுதித் தண்டனைகளைக் கொண்ட ஏழு வானதூதர்கள் தோன்றினதாகவும் மேலும், கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றின் அருகில், விலங்கையும் அதன் உருவத்தையும் அதன் பெயரின் எண்ணையும் (number) வென்றவர்கள் கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன் என்கிறார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள். கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், லூக்கா இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எதிர்கொள்ளப்போகும் துன்பங்களையும் துன்புறுத்தல்களையும் குறித்து இயேசு முன்னறிவித்ததை விவரிக்கிறார். அவருடைய பெயரின் பொருட்டு மக்கள் அவர்களைப் பிடித்து, தொழுகைக்கூடங்களிலும் சிறைகளிலும் ஒப்படைப்பார்கள் என்றும், அரசர்கள் மற்றும் ஆளுநர்கள் முன்னிலையில் நிறுத்துவார்கள் எ்ன்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களுக்குத் துரோகம் செய்வார்கள் என்றும் அறிவிக்கிறார்.
தொடர்ந்து, இத்தகைய துன்பங்கள் தமது நற்செய்திக்குச் சான்று பகர்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று ஆறுதல் அளிக்கிறார். அப்போது என்ன பேசுவது என்று முன்கூட்டியே கவலைப்பட வேண்டாம் என்றும், தமக்குரிய ஞானத்தையும் பதிலளிக்கும் ஆற்றலையும் அவரே வழங்குவதாகவும் இயேசு உறுதியளிக்கிறார். இதன் மூலம், இறைபணிக்காகவும் நம்பிக்கைக்காகவும் துன்பங்களைச் சந்திப்பது தோல்வியல்ல; மாறாக, கிறிஸ்துவுக்குச் சான்று பகரும் வாய்ப்பு என்பதை உணர்த்துவதோடு, இயேசு தமது சீடர்களிடம், இறுதிவரை மன உறுதியோடு நிலைத்திருப்பவர்களே வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள் என்று கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இயேசு நமது வாழ்நாளில், இவ்வுலகில் வசதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை வாக்களிக்கவில்லை. உண்மையில், அதற்கு மாறாகவே அவர் கூறுகிறார். தனது பொதுவாழ்வின் இறுதி நாட்களில் வழங்கிய இன்றைய நற்செய்தி வழியாக, தம்மைப் பின்பற்றும் சீடர்கள் துன்புறுத்தல்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ஆகவே, கிறிஸ்துவின் சீடர்களான நாம் பஞ்சு மெத்தையில் படுத்துறங்கும் சுகபோக வாழ்வை எதிர்ப்பார்ப்பது ஆகாது. உலகில் சுகபோக வாழ்வுக்காக நாம் தேர்ந்துகொள்ளப்படவில்லை.
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் நமக்கு ஒரே செய்தியை வலியுறுத்துகின்றன: வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களுக்கே இறுதி வெற்றி உண்டு.
திருவெளிப்பாடு நூலில், விலங்கையும் அதன் உருவத்தையும் வென்றவர்கள் கண்ணாடிக் கடலின் அருகில் நின்று கடவுளைப் போற்றிப் பாடுவதைப் போன்ற காட்சியை யோவான் கண்டார். அவர்கள் தங்களது வாழ்நாளில், உலகின் தீய சக்திகளுக்கு அடிபணியாமல், தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தவர்கள். அவர்களின் வெற்றிப் பாடல் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது: தீமை எவ்வளவு வலிமையாகத் தோன்றினாலும் இறுதியில் வெற்றி இறைவனுக்கே உரியதுஎன்பதாகும்.
இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தலில் அவரது பெயரின் பொருட்டு அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள்; நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்படுவார்கள்; சிலர் உயிரையும் இழக்க நேரிடும் என்று கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில், "உங்கள் மன உறுதியினால் உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்வீர்கள்" என்று நம்பிக்கை அளிக்கிறார். இயேசு நமக்கு துன்பமில்லாத வாழ்க்கையை வாக்களிக்கவில்லை; துன்பங்களின் மத்தியிலும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவதாக உறுதியளிக்கிறார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
இக்காலத்தில். நமது அன்றாட வாழ்க்கையிலும் பலவிதமான துன்பங்களைச் சந்திக்கிறோம். குடும்பப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், நோய்கள், உறவுகளின் துரோகம், அவமானங்கள் எனப் பல சோதனைகள் நம்மைச் சூழ்கின்றன. சில நேரங்களில் இவற்றின் காரணமாக இறைவன் மீதுள்ள நமது நம்பிக்கையே ஆட்டம் காண்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், துன்பம் நமது வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் அல்ல; இறைவனோடு இணைந்திருப்பவர்களுக்கு வெற்றியும் மீட்புமே இறுதி அத்தியாயம்!
நற்செய்தியில், உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று இயேசு கூறுகிறார். இதன் பொருள், இவ்வுலகம் நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்; ஆனால் கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நமது ஆன்மாவை அதனால் ஒருபோதும் அழிக்க முடியாது.
இறுதியாக நம்மையே கேட்டுக்கொள்வோம்: துன்பங்கள் வரும்போது நான் இறைவனைத் தேடுகிறேனா? அல்லது இறைவனைவிட்டுத் தூரமாகச் செல்கிறேனா?
இறைவேண்டல்.
ஆண்டவரே, துன்பங்களும் சோதனைகளும் என்னை சூழ்ந்தாலும், உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் நான் கிஞ்சிற்றும் தளர்ந்துவிடாமல் இருக்க அருள்புரியும்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
