பாலின நீதி, அரசியலமைப்பு உரிமைகள்: இளையோருக்குப் பயிற்சி! | Veritas Tamil

தேசிய தலித் கிறிஸ்தவ கண்காணிப்பு அமைப்பு (National Dalit Christian Watch – NDCW) சார்பில், புதுச்சேரியில் உள்ள கொன்சாகா அனிமேஷன் மையத்தில் நடைபெற்று வரும் இளையோர் தலைமைத்துவ மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், பாலின உணர்வு மற்றும் இந்திய அரசியலமைப்பு உரிமைகள் குறித்து கவனம் செலுத்தின. நவம்பர் 14, சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்வுகளில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளையோர் பங்கேற்றனர்.

பிறப்பதற்கு முன்பே தொடங்கும் பாகுபாடு!

காலையில் நடைபெற்ற பாலின உணர்வு குறித்த அமர்வுகளுக்கு வழக்கறிஞர் செல்வி தலைமை தாங்கினார். பெண்களுக்கு எதிரான பாகுபாடு அவர்கள் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது என்று குறிப்பிட்ட அவர், வட இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படும் ஆண், பெண் பிறப்பு விகித வேறுபாடுகளை எடுத்துரைத்தார். பெண்களைத் தெய்வங்களாகப் போற்றுவது என்ற பெயரில் அவர்களுக்குரிய உண்மையான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், சிறுவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும், அடக்கி வைக்கப்படும் உணர்வுகள் பல நேரங்களில் கோபமாகவும் வன்முறையாகவும் வெளிப்படுவதாகவும் தெரிவித்தார். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வைச் சிறுவர்களுக்கும் பெற்றோர் கற்பிக்க வேண்டும் என்றும், அது தொடர்பான மௌனத்தையும் அவமான உணர்வையும் களைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இளம் வயதினரின் கர்ப்பம் குறித்துப் பேசிய அவர், இத்தகைய சூழல்களில் சமூகமும் சில நேரங்களில் திருஅவையும் அந்தப் பெண்ணையே குற்றம் சாட்டுகின்றன என்றும், அதற்குக் காரணமான ஆண் எவ்விதப் பொறுப்பும் ஏற்காமல் விடப்படுகிறார் என்றும் தெரிவித்தார். கிறிஸ்தவர்கள் மனமாற்றம் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்பதே தமது செய்தி என்று குறிப்பிட்டார். ஆண்கள் தங்களது பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், கர்ப்பமடைந்த இளம்பெண்கள் மாண்புடன் வாழ்வதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கர்ப்பமடைந்த இளம்பெண்களுக்காக இல்லங்களை நடத்தும் அறக்கட்டளை ஒன்றின் நிர்வாகக் குழுவில் தாம் இடம்பெற்றுள்ளதாகவும், இத்தகைய பெண்களைச் சந்திப்பவர்கள் அவர்களை அந்த இல்லங்களுக்கு அனுப்பி உதவலாம் என்றும் தெரிவித்தார்.

சாதி குறித்துப் பேசிய அவர், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் தங்களது மனப்பான்மைகளிலும், குறிப்பாகத் திருமணம் குறித்த அணுகுமுறைகளிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார். வயது வந்த ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொள்ள அரசியலமைப்பு உரிமை வழங்கியிருந்தாலும், மிகச் சிலரே அந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டார். பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை எடுத்துரைத்த அவர், சட்டத்தைப் பயன்படுத்துவதோடு, பெண் சக பணியாளர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திருநங்கைகளின் மாண்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்த அவர், அவர்கள் பல நேரங்களில் குடும்பங்கள், திருஅவைச் சமூகங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்படுவதாகக் கூறினார். பிலிப்பு திருத்தூதர் எத்தியோப்பிய அரச அலுவலரைச் சந்தித்த விவிலிய நிகழ்வை, அனைவரையும் அரவணைக்கும் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்களின் உடல்நலம் புறக்கணிக்கப்படுவதையும், கைம்பெண்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, தாங்கள் கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதுடன், தேவையில் இருப்பவர்களில் ஒருவருக்காவது கல்வி கற்பிக்க வேண்டும் என்றும் பங்கேற்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

சமூக மாற்றத்திற்கான கருவியாக அரசியலமைப்பு!

பிற்பகலில் நடைபெற்ற அமர்வில், கவிதா கஜேந்திரன் அவர்கள் இந்திய அரசியலமைப்பும் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தலித் மக்களின் உரிமைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இளையோர் ஏன் இங்கு ஒன்றுகூடியுள்ளனர், எந்தச் சமூக அமைப்பிற்கு எதிராக அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய அரசியலமைப்பு 1949 நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததை விளக்கிய அவர், அதன் முகவுரை அரசியலமைப்பின் தத்துவ அடித்தளமாக விளங்குகிறது என்று கூறினார். மேலும், சட்டமன்றம், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் பணிகளையும் எடுத்துரைத்தார். இளையோர் தங்களது அரசியலமைப்பு உரிமைகளைத் தாங்களே அறிந்திருக்க வேண்டும் என்றும், அவற்றை வழக்கறிஞர்களிடம் மட்டுமே விட்டுவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சாதிய, ஆணாதிக்க மற்றும் நிலப்பிரபுத்துவச் சிந்தனைகள் நிறைந்த சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியலமைப்பை உருவாக்கினார் என்று அவர் தெரிவித்தார். 'தலித்' என்ற சொல் ஒடுக்கப்பட்டவர் அல்லது நசுக்கப்பட்டவர் என்ற பொருளைக் கொண்டுள்ளது என்றும், ஜோதிராவ் பூலே மற்றும் அம்பேத்கர் ஆகியோர் அதனைத் தனித்துவமான அடையாளச் சொல்லாக மாற்றினர் என்றும் விளக்கினார்.

மேலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (SC/ST Prevention of Atrocities Act), இந்தியச் சட்டங்களில் அவர்களைப் பாதுகாக்கும் வலிமையான சட்டங்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார்.

சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்த அவர், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய நான்கு இலட்சியங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றார். தலித் கிறிஸ்தவப் பெண் ஒருவர், பெண் என்பதாலும், தலித் என்பதாலும், தனது மதத்தின் காரணமாகவும் ஒரே நேரத்தில் பல்வேறு பாகுபாடுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதை எடுத்துக்காட்டினார்.

அரசியல் ஜனநாயகம் என்பது சமூக ஜனநாயகமின்றி முழுமையான பொருளைப் பெறாது என்ற அம்பேத்கரின் எச்சரிக்கையையும் நினைவுபடுத்தினார். உரிமைகளுக்கான போராட்டம் என்பது சாதியப் படிநிலை அமைப்பிற்கு எதிரான போராட்டம் என்றும், பாகுபாடுகள் பல நேரங்களில் குடும்பங்களிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

இந்நாளில், பங்கேற்பாளர்களுக்கிடையே கலந்துரையாடல்களும் திறந்தவெளிக் கருத்துப் பகிர்வுகளும் நடைபெற்றன. தொடர்ந்து, கற்றுக்கொண்ட முக்கிய கருத்துகள் குறித்த மறுஆய்வும் இடம்பெற்றது.

Tamil Survey Popup Image