தேசிய விருது பெற்ற கிறிஸ்தவ நிறுவனங்கள்! | Veritas Tamil

வங்கதேசத்தில் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட்ட 55ஆவது தேசிய கூட்டுறவு நாள் விழாவின்போது, கிறிஸ்தவத் திருஅவையின் ஆதரவுடன் செயல்படும் இரண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவக் கூட்டுறவு இயக்கத்திற்கு இவ்விருதுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

The Metropolitan Christian Co-operative Housing Society Ltd. நிறுவனத்தின் தலைவரான அகஸ்டின் பிரதாப் கோமஸ் (Augustine Pratap Gomes) அவர்களுக்கு, வங்கதேச அரசால் வழங்கப்படும் 2025ஆம் ஆண்டுக்கான தேசியக் கூட்டுறவு விருதின் கீழ், சிறந்த கூட்டுறவாளர் விருது வழங்கப்பட்டது. கூட்டுறவுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு, நேர்மை மற்றும் தலைமைத்துவப் பணிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோமஸ், “இன்று நான் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனது கனவுகளில்கூட இத்தகைய விருதைப் பெறுவேன் என்று நான் நினைத்ததில்லை” என்று கூறினார்.

மேலும், “இது எனது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல. வீட்டுவசதிக் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் தலைவர்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் இது. இச்சங்கம் இன்றைய நிலையை அடைவதற்குப் பங்களித்த முன்னாள் தலைவர்கள் மற்றும் அலுவலர்களின் சேவைகளையும் நான் நினைவுகூர்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

தமது பணிகளுக்கு ஆதரவளித்த சங்க உறுப்பினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்த அவர், மேலும் பலர் தங்களுக்கான வீட்டு வசதியைப் பெற உதவுவதே இச்சங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.

இதற்கிடையே, Nagari Christian Co-operative Credit Union Ltd. நிறுவனத்திற்கும், 2024–2025 நிதியாண்டில் வங்கதேசத்தின் கூட்டுறவுத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி தேசியக் கூட்டுறவு விருது வழங்கப்பட்டது. இவ்விருது தங்களது உறுப்பினர்களின் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சிகளின் வெளிப்பாடு என்று அந்தக் கடன் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விருது பெற்ற நிறுவனங்களில் ஒன்றான The Metropolitan Christian Co-operative Housing Society Ltd., டாக்கா மற்றும் பிற நகர்ப்புறங்களில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவக் குடும்பங்கள் வீட்டு வசதியைப் பெற உதவி வருகிறது.

1977ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, மறைந்த பேராயர் மைக்கேல் ரொசாரியோ அவர்களின் ஆதரவுடன் 27 உறுப்பினர்களால் இச்சங்கம் தொடங்கப்பட்டது. தற்போது வங்கதேசத்தின் மிகப்பெரிய கிறிஸ்தவக் கூட்டுறவு முயற்சிகளில் ஒன்றாக இது வளர்ந்துள்ளது. 1,100 பிகாக்களுக்கும் அதிகமான நிலப்பரப்பில் 85 நிலத் திட்டங்களை நிர்வகித்து வருகிறது. ஏறத்தாழ 4,900 வீட்டுமனைப் பிரிவுகளையும், 200க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களையும் உருவாக்கியுள்ளது. இச்சங்கத்தில் 22,000க்கும் மேற்பட்ட வழக்கமான உறுப்பினர்களும், 41,000 சேமிப்பு உறுப்பினர்களும் உள்ளனர்.

வீட்டுவசதித் திட்டங்களுக்கு அப்பால், நலிவுற்ற பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்குதல், திருஅவையின் பணிகளுக்கு ஆதரவளித்தல், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் போன்ற சமூகப் பணிகளையும் இச்சங்கம் மேற்கொண்டு வருகிறது.

1953ஆம் ஆண்டு ஆசிரியர் நைட் வின்சென்ட் ரொட்ரிக்ஸ் (Knight Vincent Rodriguez) அவர்களால் தொடங்கப்பட்ட Nagari Christian Co-operative Credit Union, முறையான நிதிச் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்ட கிறிஸ்தவக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. சேமிப்பு மற்றும் கடன் வழங்கும் திட்டங்களுடன், பண்பாட்டுக் கல்விக்கூடம், மருத்துவச் சேவைகள் மற்றும் அவசர ஊர்திச் சேவை ஆகியவற்றையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

“ஒவ்வொரு உறுப்பினர், அலுவலர் மற்றும் பணியாளரின் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவே இந்த விருது” என்று அந்தக் கடன் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து செயல்படுவதற்கான ஊக்கமாக இவ்விருது அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய அளவிலான இவ்விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வங்கதேச அதிபர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் (Mirza Fakhrul Islam Alamgir), கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும் அழைப்பு விடுத்தார்.

“ஊழல் பெரும்பாலான கூட்டுறவுச் சங்கங்களைச் சீரழித்து, அவற்றின் செயல்பாடுகளைப் பலவீனப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், கூட்டுறவுத் தலைவர்கள் தங்களது நிறுவனங்களை வலுப்படுத்துவதோடு, நாட்டின் வளர்ச்சியில் கூட்டுறவு இயக்கத்தின் பங்களிப்பு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டின் தேசியக் கூட்டுறவு நாள் விழாவின் கருப்பொருள், “கூட்டுறவுகளை அரவணைப்போம்; நாட்டைக் கட்டியெழுப்புவோம்: அனைவருக்குமான வங்கதேசம்” என்பதாகும். இவ்விழாவில், பத்து பிரிவுகளின் கீழ் பத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் நான்கு தனிநபர் கூட்டுறவாளர்களுக்கும் தேசியக் கூட்டுறவு விருதுகள் வழங்கப்பட்டன.

Tamil Survey Popup Image