காப்பாற்றும் கடவுள்...| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
ஞானி ஒருவர், சீடர்கள் இருவரை அழைத்துக் கொண்டு தியானம் செய்ய காட்டுக்குச் சென்றார். ஒரு மரத்தடியில் மூவரும் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினர். ஒரு நாள் தியானம்
சீடர்கள் இருவரும் தியானம் செய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில், சிங்கம் கர்ச்சிக்கும் சத்தத்தைக் கேட்டனர். கண்களை மெதுவாகத் திறக்க, சிங்கம் ஒன்று தூரத்திலிருந்து அவர்களை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டனர். பயமும், அச்சமும் அவர்களை ஆட்கொண்டது. தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரத்தின் மேல் ஏறி மரக்கிளை ஒன்றில் அமர்ந்து கொண்டனர்.
குள்ளனாக இருந்த சக்கேயு இயேசுவைப் பார்க்க ஆவல் கொண்டு, அவர் வரும் வழியிலுள்ள ஒரு காட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டு, இயேசுவின் வருகைக்காகக் காத்திருந்தது போல இரண்டு சீடர்களும் சிங்கத்தின் வருகையைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.
ஞானி இருந்த இடத்துக்கு சிங்கம் வந்தது. அவர் அருகில் அமர்ந்து கொண்டது. ஞானி கண்களைத் திறக்கவில்லை. கற்சிலை போல் அசைவின்றி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சிறிது நேரம் சிங்கம் தானாகவே அங்கிருந்து அமைதியாகச் சென்றுவிட்டது.
மாலைநேரம், புயல்காற்று வீசத் தொடங்கியது. காட்டிலுள்ள மரங்களெல்லாம் அசைந்தாடின. சில மரங்கள் வேரோடு சாய்ந்தன. சீடர்கள் அமர்ந்திருந்த மரக்கிளையும் ஒடிந்து கீழே விழுந்தது. சீடர்கள் தரையில் விழுந்தார்கள். அவர்களின் உடல் முழுவதும் காயங்கள். எழுந்து நடக்க முடியவில்லை.
ஞானி தியானத்தை முடித்தார். கண்களைத் திறந்து பார்க்க, சீடர்கள் காயங்களோடு கிடப்பதைப் பார்த்து வருத்தமடைந்தார்.சீடர்கள் நடந்த எல்லாவற்றையும் ஞானியிடம் கூறினார்கள். அவர்களைப் பார்த்த ஞானி, “இறைவனோடு இணைந்திருக்கிற மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. அவர்களை இறைவன் காப்பாற்றுவார் என்ற உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி முடித்தார்.
ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்... நீர் அவர்களைப் பாதுகாப்பீர் " திருப்பாடல் 5:11
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.(நீமொ 14:27)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
