பெரு நாட்டைச் சென்றடைந்த திருத்தந்தை பதினான்காம் லியோ! | Veritas Tamil

தென் அமெரிக்க நாடுகளான உருகுவே, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கான பயணத்தைத் தொடர்ந்து, தமது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக நவம்பர் 11ஆம் தேதி திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பெரு நாட்டைச் சென்றடைந்தார்.

கல்லாவோ வான்படைத் தளத்தில் வந்திறங்கிய திருத்தந்தையை, பெரு நாட்டின் அரசுத்தலைவர் கெய்கோ புஜிமோரி மற்றும் வெளியுறவு அமைச்சர் கார்லோஸ் எஸ்பா ஆகியோர் வரவேற்றனர். அப்போது இரு சிறுவர்கள் மலர்க்கொத்து வழங்கி அவரை வரவேற்றனர். மேலும், குழந்தைகள் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஆசி வழங்கிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த மக்களையும் சந்தித்தார்.

தொடர்ந்து, பெரு நாட்டின் அரசுத் தலைவரைச் சந்திப்பதற்காகத் தலைநகர் லிமாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அரசுத்துறை அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளையும் சந்தித்து உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

பெரு நாட்டில் பல ஆண்டுகள் அகுஸ்தீனிய மறைப்பணியாளராகப் பணியாற்றிய திருத்தந்தை, 2015 முதல் 2023 வரை சிக்கிலாயோ மறைமாவட்ட ஆயராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் பெரு நாட்டிற்குத் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 12ஆம் தேதி பெரு நாட்டின் ஆயர்களைச் சந்தித்து, லிமா பேராலயத்தில் நண்பகல் இறைவேண்டலில் பங்கேற்கவும், பெரு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த சந்திப்பில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வடக்கு பெருவில் உள்ள சிக்கிலாயோ நகருக்குச் சென்று, பம்பாஸ் தெ பிமென்டெல் பகுதியில் திருப்பலி நிறைவேற்றவுள்ளார். மேலும், குஸ்கோ நகரில் உள்ள சக்சாய்வாமான் பகுதியில் மூவேளை செபத்தில் பங்கேற்பதுடன், புகல்பா நகரில் அமேசான் பகுதி மறைப்பணியாளர்கள் மற்றும் பழங்குடியினச் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

நவம்பர் 16ஆம் தேதி லிமாவில் உள்ள லாஸ் பால்மாஸ் வான்படைத் தளத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், திருத்தந்தை உரோம் திரும்பவுள்ளார்.

Tamil Survey Popup Image