உள்ளங்களின் சுத்தமே ஆலயத்தின் சுத்தம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
20 நவம்பர் 2026
திருவெளிப்பாடு 10: 8-11
லூக்கா 19: 45-48
உள்ளங்களின் சுத்தமே ஆலயத்தின் சுத்தம்!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், யோவான் விண்ணகத்திலிருந்து ஒலித்த குரலைக் கேட்கிறார். அக்குரலானது, “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்று அவரூப் பணித்தது. பின்னர் அந்தச் சுருலேட்டை உண்ணும்படி அவரிடம் கூறப்படுகிறது. அந்தச் சுருளேடு அவரது வாயில் தேனைப்போல இனிமையாக இருந்தது எனவும், அதை விழுங்கியபோது வயிற்றில் கசப்பாக மாறியது எனவும் யோவான் கூறுகிறார்.
தொடர்ந்து, யோவான் பல மக்கள், இனங்கள், மொழியினர், அரசர்கள் ஆகியோரைக் குறித்து மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டதாக யோவான் குறிப்பிடுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு எருசலேம் கோவிலுக்குச் சென்று, அங்கு விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை வெளியேற்றத் தொடங்கிய நிகழ்வை வாசிக்கிறோம்.
இயேசு, “என் இல்லம் இறைவேண்டலின் வீடு; நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்று கூறுகிறார். கோவில் என்பது இறைவனை வழிபடுவதற்கும், இறைவேண்டலில் ஈடுபடுவதற்குமான புனிதமான இடம் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். ஆனால் மக்கள் கோவிலை வியாபாரத்திற்கும் சுயநலத்திற்கும் பயன்படுத்தியதால், அதன் புனிதத்தன்மை சீர்குலைந்திருந்தது.
நிறைவாக, இயேசு நாள்தோறும் கோவிலில் மக்களுக்குக் கற்பித்து வந்தார் என்றும். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்கள் தலைவர்களும் அவரைக் கொல்ல வழி தேடினர் என்றும் லூக்கா குறிப்பிடுகிறார். . ஆனால் மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தயங்கினர் என்றும் லூக்கா பதிவுச் செய்துள்ளார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரண்டு வாசகங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை மறுக்க இயலாது. முதல் வாசகம் இறைவார்த்தையை தினமும் உள்வாங்கி அதன்படி வாழ அழைக்கிறது. நற்செய்தி நமது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி இறைவனுக்கு ஏற்ற இல்லமாக மாற்ற அழைக்கிறது.
முதல் வாசகத்தின்படி, இறைவார்த்தையைக் கேட்பதும் வாசிப்பதும் நமக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்தாலும் அந்த வார்த்தையின்படி வாழ்வது எப்போதும் எளிதானதுமல்ல, இனிப்பானதும் அல்ல என்று உணர்த்தப்படுகிறோம். அது பல தருணங்களில் கசப்பானதுமாகும். ஏனெனில், சில நேரங்களில் அது நம்முடைய தவறுகளைச் சுட்டிக்காட்டும்போடு நமக்கு கசப்பானதாகத் தோன்றும். நோயிற்கு நாம் ஏற்கும் மருந்துகள் கூட கசப்பாகத்தான் இருக்கும். ஆனால், நோயைக் குணப்படுத்த மருந்து அவசிநமன்றோ? அவ்வாறே, இறைவார்த்தையை வெறுமனே கேட்பவர்களாக இல்லாமல், அதை நம்மை குணப்படுத்தும் மருந்தாகவும் ஏற்க வேண்டும்.
நற்செய்தியில், நாம் கடவுளை வழிபடும் ஆலயங்கள் மட்டுமல்ல, நமது உள்ளங்களும் இறைவன் குடிகொள்ளும் புனித இடங்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. நமது வழிபாடு வெளிப்புறச் சடங்குகளோடு நின்றுவிடாமல், தூய்மையான உள்ளத்தோடும் உண்மையான இறைவேண்டலோடும் அமைய வேண்டும். நமது உள்ளத்தை கள்வரின் இல்லமாக மாற்றிட வேண்டாம் என்கிறார் ஆண்டவர்.
அன்று, இயேசு ஆலயத்தைத் தூய்மைப்படுத்தியது ஒரு இறைவாக்கு சார்ந்த தீர்ப்பாக அமைந்தது. உண்மையான வழிபாடு மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை அவர் இதன் மூலம் அறிவித்தார். இறைவனை வழிபடுவதே நமது முதன்மையான கடமை என்பதை மறந்து, தூய்மையான வழிபாட்டைக் காட்டிலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மரபுகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கும்போது, நாமும் ஆண்டவரால் தூய்மைப்படுத்தப்பட வேண்டியவர்களாக மாறுகிறோம்.
மனித மரபுகளும் பாரம்பரியங்களும் ஆழமான அர்த்தத்தையும் மதிப்பையும் கொண்டிருக்கலாம். ஆனால் அவை நம்மை இறைத்தூய்மையை நோக்கி வழிநடத்தும் கருவிகளாக இல்லாமல், அவற்றையே இறுதி இலக்காகக் கருதும்போது, அவை நமது ஆன்மிக வளர்ச்சிக்குத் தடையாக மாறிவிடுகின்றன. எனவே, இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, நமது திருவழிபாட்டின் மையம் இயேசுவுவே என்று போதிக்கத் தொடங்கியது. குறிப்பாக, திருப்பலியில் இயேசுவே மையம் என்பதை மறந்துவிடக்கூடாது. அன்னை மரியாவோ, வேறு எந்த புனிதரோ இயேசுவின் இடத்துக்குரிவர்கள் அல்ல.
இறைவனின் இல்லம் நமது சுயநலத்திற்கும் இலாப நோக்கத்திற்கும் பயன்படுத்தப்படுவதை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் ஆலயச் சுத்தம் நமது உள்ளத்தையும் ஆய்வு செய்ய அழைக்கிறது. புனித பவுல் கூறுவதுபோல, நமது உடலே தூய ஆவியின் ஆலயம் (1 கொரி 6:19). நமது உள்ளத்தில் பொறாமை, வெறுப்பு, அகந்தை, பேராசை, மன்னிக்காத மனம் போன்றவை குடிகொண்டிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்திய இயேசு, நமது இதயத்தையும் தூய்மைப்படுத்த விரும்புகிறார்.
நிறைவாக, ஆலயம் என்பது கட்டடம் மட்டுமல்ல; அது இறைமக்களின் சமூகமாகிய திருஅவையையும் குறிக்கிறது. எனவே, திருஅவையில் நிலவும் அநீதி, அதிகாரப் போட்டி, பாகுபாடு, சுயநலம் போன்றவற்றை அகற்றுவதற்கு ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை இயேசு இன்று உணர்ந்துகிறார். இயேசுவின் ஆலயச் சுத்தம் நமது உள்ளச் சீர்திருத்தத்திற்கான அழைப்பு என்பதை ஏற்று செயல்படுவோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது இறைவார்த்தையை அன்புடன் ஏற்று வாழவும், என் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் தீய எண்ணங்களையும் தீய பழக்கங்களையும் என் இதயத்தை உமது தூய ஆலயமாக மாற்றவும் எனக்கு அருள்புரிய மன்றாடுகிறேன். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
