இறைவனின் அன்புக்கும், நமது மீட்புக்கும் ஊற்று இயேசுவே! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

19 நவம்பர் 2026
 
 திருவெளிப்பாடு 5: 1-10
லூக்கா 19: 41-44-33 
 
இறைவனின் அன்புக்கும், நமது மீட்புக்கும் ஊற்று இயேசுவே!


முதல் வாசகம்.

திருத்தூதர் யோவான் காணும் காட்சியில், கடவுளின் வலக்கையில் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட ஒரு சுருள் ஏடு இருக்கிறது. அந்த ஏட்டின் முத்திரைகளைத் திறந்து வாசிக்க விண்ணிலும் மண்ணிலும் யாராலும் இயலவில்லை. இதனால் யோவான் மிகுந்த துயரமடைந்து அழுகிறார். அப்போது மூப்பர்களில் ஒருவர், அழ வேண்டாம் என்றும், யூதா குலத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் கூறுகிறார். அவர் ஆட்டுக்குட்டியைப் போலத் தோன்றும் இயேசு கிறிஸ்துவே ஆவார்.
அந்த ஆட்டுக்குட்டி சுருள் ஏட்டைப் பெற்றுக்கொண்டபோது, விண்ணக உயிரினங்களும் மூப்பர்களும் அவரை வணங்கி, புதியதொரு பாடலைப் பாடுகின்றனர். ஏனெனில், அவர் தமது இரத்தத்தால் எல்லா இனங்கள், மொழிகள், மக்கள் மற்றும் நாட்டினரிலிருந்து மக்களை மீட்டு, கடவுளுக்குச் சொந்தமானவர்களாக்கியுள்ளார். மேலும், அவர்களை இறையாட்சியின் மக்களாகவும் குருக்களாகவும் ஏற்படுத்தியுள்ளார் என்று யோவான் குறிப்பிடுகிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்தபோது, அந்நகர மக்கள் தங்களுக்குக் கிடைத்த அமைதிக்கான வழியை அறிந்துகொள்ளவில்லை என்பதை நினைத்து  அழுகிறார். மேலும், கடவுள் அவர்களைச் சந்திக்க வந்த காலத்தை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள் என்பதை நினைத்து இயேசு மனம் வருந்துகிறார். இறைவனின் அன்பையும் மீட்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய மக்கள், அவருடைய அழைப்பைப் புறக்கணித்ததை எண்ணி அவர் கண்ணீர் சிந்துகிறார்.

மேலும், எருசலேம் நகரம் பகைவர்களால் முற்றுகையிடப்பட்டு, அதன் மதில்கள் தரைமட்டமாக்கப்பட்டு, மக்களும் அழிவைச் சந்திப்பார்கள் என்று இயேசு முன்னறிவிக்கிறார். கடவுளின் அழைப்பை ஏற்காமல் போனதன் விளைவாக இந்த அழிவு நிகழும் என்பதை எடுத்துரைக்கிறார். 

சிந்தனைக்கு.

இன்றைய இரண்டு வாசகங்களில்  முதல் வாசகத்தில், உலகின் மீட்பராகிய ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின் மகிமையையும், இரண்டாவது வாசகத்தில், தம்மை ஏற்றுக்கொள்ளத் தவறிய எருசலேம் நகரத்திற்காக இயேசு கண்ணீர் சிந்துவதையும் காண்கிறோம்.  
 
இன்றைய நற்செய்தியில், இயேசு எருசலேம் நகரை அணுகியபோது அதைப் பார்த்துக் கண்ணீர் சிந்துகிறார். ஏன் இயேசு கண்ணீர் சிந்தினார்?

எருசலேம் நகரம் அமைதியின் நகரமாக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அந்த நகரம் உண்மையான அமைதியைத் தரும் இறைவனின் அழைப்பை அடையாளம் காணத் தவறிவிட்டது. தங்களை மீட்க வந்த மெசியாவை ஏற்றுக்கொள்ளாமல், இறைவனின் அன்பையும் அழைப்பையும் புறக்கணித்தது.

இயேசுவின் கண்ணீர் வெறும் துயரத்தின் வெளிப்பாடு அல்ல. அது தம்முடைய மக்களை ஆழமாக அன்பு செய்கின்ற இறைவனின் இதயத்திலிருந்து வெளிப்படும் வேதனையாகும். மனிதர்கள் தம்மை விட்டு விலகிச் செல்லும்போதுகூட அவர்களை வெறுக்காமல், அவர்களுடைய மீட்பையே விரும்புகின்ற இறைவனின் அன்பை இங்கே காண்கிறோம்.

இன்றும் இயேசு நம்மைப் பார்த்துக் கண்ணீர் சிந்துகிறார் என்று சொல்லலாமா? ஆம்! நாம் அவருடைய வார்த்தைகளைக் கேட்க மறுக்கும்போதும், மன்னிக்க வேண்டியவர்களை மன்னிக்காமல் இருக்கும்போதும், குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் வாழும்போதும், ஏழைகளையும் துன்பப்படுவோரையும் புறக்கணிக்கும்போதும் அவரது அன்பை நாம் நிராகரிக்கிறோம். அதற்காக இயேசு இன்றும் கண்ணீர் சிந்துகிறார் .

நிறைவாக, இன்றைய வாசகங்கள் நம்மிடம் மூன்று கேள்விகளை முன்வைக்கின்றன:
1.    இயேசுவின் அன்பையும் மீட்பையும் நமது வாழ்வில் உண்மையாக ஏற்றுக்கொள்கிறோமா?
2.    நமது குடும்பத்திலும் சமூகத்திலும் அமைதியை உருவாக்குபவர்களாக வாழ்கிறோமா?
3.    இறைவனின் அழைப்பை உணர்ந்து, அவருடைய வழியில் நடக்கத் தயாராக இருக்கிறோமா?

எருசலேம் செய்த தவறை நாமும் செய்யக்கூடாது. இறைவன் நம்மைச் சந்திக்க வருகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவரது வார்த்தைக்குச் செவிசாய்த்து, மன்னிப்பிலும் அன்பிலும் தியாகத்திலும் வளர வேண்டும். சுருங்கச் சொன்னால், இயேசுவின் கண்ணீர் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது; ஆட்டுக்குட்டியானவரின் தியாகம் நம்மை அன்பின் வாழ்வுக்கு அழைக்கிறது என்பதை அறிந்துணர்வோம்.  


இறைவேண்டல்.

ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே    நான் என்றும் உதமன்பை  நிராகரிக்காமல், உம்மை எனது வாழ்வின் மையமாகக் கொண்டு வாழும் வரம் அருள்வீராக. ஆமென்.


ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image