பேராசை பெரு நஷ்டம்...| அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
ஒரு கிராமத்தில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. வீட்டுக்கு அருகில் தோட்டமும், தோட்டத்தின் நடுவில் இனிய கனி தரும் மூன்று மாமரங்களும் இருந்தன. பிரயாணம் செய்ய மூன்று குதிரைகளும் உண்டு. அவருக்கு இரண்டு மகன்கள். இருவரும் சுயநலமிக்கவர்கள். பேராசைக்காரர்கள்.
பெரியவருக்கு வயதாகிவிட்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். இறப்பதற்கு முன் தன்னுடைய சொத்துக்களை இரண்டு மகன்களும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று 'உயில்' எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். தந்தை எழுதிய உயிலின்படி இருவரும் சொத்துக்களை சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். ஆனால் மூன்று மாமரங்களையும் மூன்று குதிரைகளையும் சமமாகப் பிரித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இருவரிடையே எப்போதும் பகையும் சண்டையுமாக இருந்தது.
இருவரும் காட்டில் வாழ்ந்த ஒரு துறவியிடம் சென்று தங்கள் பிரச்சனைகளைக் கூறினர். அவற்றை கவனத்தோடும் கனிவோடும் கேட்டார் துறவி. சிறிது மௌனத்துக்குப் பிறகு பேசத் தொடங்கினார். "வாழ்வில் அனைவருக்கும் பிரச்சனைகள் வரும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்களுடைய பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க தீர்வு உண்டு. முடியும்" என்றார். "உங்களிடத்தில் உள்ள மூன்று மாமரங்களில் ஒன்றை கோவிலுக்கு தானமாகக் கொடுத்து விடுங்கள். மீதமுள்ள இரண்டு மரங்களையும் இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம். அப்படி தானம் செய்ய விரும்பவில்லையென்றால் ஒரு மரத்தை வெட்டிவிடுங்கள்" என்றார்.
"இரண்டாவதாக உங்களிடம் உள்ள மூன்று குதிரைகளில் ஒன்றை என்னிடம் விட்டுவிடுங்கள். அப்படி விட்டுவிட விருப்பமில்லையென்றால் என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதை நீங்கள் ஓட்டிச் சென்று நான்கு குதிரைகளையும் இரண்டு இரண்டாக சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றார் துறவி . இதைக் கேட்டவுடன் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். மனநிறைவோடு துறவியின் குதிரையை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார்கள்.
அன்று இரவு பெருமழை பெய்தது. கொடிய புயல் காற்று வீசியது. மூன்று மாமரங்களும் வேரோடு சாய்ந்து விட்டன. மறுநாள் இரவில் அனைவரும் உறங்கும் நேரத்தில், துறவியின் குதிரை மற்ற மூன்று குதிரைகளையும் அழைத்துக் கொண்டு காட்டில் வாழ்ந்த துறவியிடம் சென்றுவிட்டது.
மூன்று மாமரங்களும் வேரோடு சாய்ந்தன. மூன்று குதிரைகளும் தங்களிடமிருந்து ஓடிவிட்டன என்பதை அறிந்த இருவரும் ''பேராசை பெரு நஷ்டம் " என்பதை புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் பகிர்ந்து வாழத் தொடங்கினர்.
"எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்." (லூக்கா 12:15)
வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல் நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே; ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு. (நீமொ 23:17)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
