குடும்பம்: இறையாட்சி துளிர்விடும் விளைநிலம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 30-ம் வாரம்-செவ்வாய்
27 அக்டோபர் 2026
எபேசியர் 5: 21-33
லூக்கா 13: 18-21
குடும்பம்: இறையாட்சி துளிர்விடும் விளைநிலம்!
முதல் வாசகம்.
இந்த முதல் வாசகத்தில் தொடர்ந்து எபேசியருக்கு பவுல் அடிகள் எழுதி வருவதன் மற்றொரு பகுதியை வாசிக்கிறோம், இன்று கணனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை, பணிவு ஆகியவற்றுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை விவரிக்கிறார்.
தம்பதியர் எப்போதும் கிறிஸ்துவுக்கு அஞ்சி, ஒருவரை ஒருவர் மதித்து, பணிவுடன் வாழ வேண்டும் எனும் படிப்பினையை முன்வைத்து, மனைவி ஆண்டவருக்குக் கீழ்ப்படிவதுபோலத் தன் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்கிறார். அவ்வாறே கணவன் கிறிஸ்து திருஅவையை அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மையே கையளித்ததுபோல, தன் மனைவியைத் தியாக அன்புடன் அன்பு செய்வது இன்றியமையாதது என்றுரைக்கிறார்
மேலும், திருமண வாழ்வு குறித்து பேசுகையில், கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒரே உடலாக வாழ்கிறார்கள். இந்த உறவு கிறிஸ்துவுக்கும் திருஅவைக்கும் இடையிலான ஆழமான உறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்கிறார்.
அத்துடன், கணவன் தன் மனைவியைத் தன்னைப்போல அன்புகூர வேண்டும்; மனைவியும் தன் கணவனை மதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு இறையாட்சியை மக்களுக்கு நன்கு அறிமுகமான கடுகு விதை மற்றும் புளித்த மாவு ஆகிய இரு பொருள்களையும் கையாண்டு உவமைகள் மூலம் விவரித்துப் போதிக்கிறார்.
கடுகு விதை மிகவும் சிறியதாக இருந்தாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது. அதுபோல, இறையாட்சி சிறியதாகத் தொடங்கினாலும், நாளடைவில் வளர்ந்து பலருக்கும் நன்மை அளிக்கும் என்பதோடு, ஒரு பெண் சிறிதளவு புளித்த மாவை மாவுடன் கலந்து வைக்கிற வேளை அந்தப் புளிப்பு முழு மாவையும் புளிக்கச் செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே, இறையாட்சி மனிதர்களின் உள்ளங்களிலும் வாழ்க்கையிலும் அமைதியாகச் செயல்பட்டு, அவர்களை மாற்றுகிறது என்று போதித்ததை லூக்கா குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
நமது கண்களுக்கும் அறிவுக்கும் புலப்படாத இறையரசானது சிறிய செயல்களிலிருந்தும் தொடங்கி, பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதை நாம் அறிந்துணர வேண்டும். நம்மில் சிலர் அல்லது பலர் இறையரசு என்பது எதைக்குறிக்கிறது என்ற குழப்பத்தில் இருக்கலாம்.
இறையரசு என்பது கடவுள் நம்முடைய உள்ளத்திலும், வாழ்விலும் ஆட்சி செய்யும் ஓர் அரசாகும். அதாவது, நாம் கடவுளின் அன்பு, நீதி, அமைதி, மன்னிப்பு ஆகியவற்றை ஏற்று, அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப வாழ்வதே இறையரசு என விளக்க்ம் தரலாம்.
இறையரசை ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது இடமாக பார்க்க இயலாது. ஏனெனில் அது கண்ணகளுக்குப் புலப்படாத ஒன்று. புனித பவுல் உரோமையருக்கு எழுதிய போது, ‘இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது’ ( உரோ 14:17) என்று விளக்கம்ளித்தார். ஆம், நாம் என்ன உண்கிறோம் என்பதைக் காட்டிலும், நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக, மனிதநேயத்தோடு வாழ்கிறோம் என்பதே கடவுளுக்கு முக்கியமானது.
முதல் வாசகத்தில், பவுல் அடிகள் குடும்ப வாழ்வின் அடிப்படை உறவைப் பற்றி பேசும்போது, கணவன் மனைவி ஒருவரையொருவர் மன்னித்து, கருத்து வேறுபாடுகளை அன்புடன் தீர்த்துக்கொள்ளும்போது, குடும்பத்தில் அமைதி வளர்கிறது என்கிறார் ஏனெனில், அந்த அமைதிதான் இருவரிடையே இறையரசின் அடையாளமாக விளங்குகிறது.
ஆகவே, குடும்பதில் இறையரசு என்பது வழிபாட்டில் மட்டும் வெளிப்படுவதல்ல; அது குடும்ப உறவுவில் வெளிப்படக் கூடியது. நம்முடைய சிறிய நற்செயல்களும், சிறிய இறைவேண்டல்களும், சிறிய அன்புச் செயல்களும் இறைவனின் அருளால் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கைகொள்வோம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் வாழ்வில் உமது நீதியை நிலைநாட்டவும் என் எடும்ப உறவில் பிறருடன் அமைதியாக வாழவும், எல்லாச் சூழ்நிலைகளிலும் உம்மில் உண்மையான மகிழ்ச்சியைக் காணவும் எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
