இன்னும் ஒரு வாய்ப்பு — மனந்திரும்பி கனிதருவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

24 அக்டோபர் 2026
  
எபேசியர் 4: 7-16
லூக்கா 13: 1-9


இன்னும் ஒரு வாய்ப்பு — மனந்திரும்பி கனிதருவோம்!


முதல் வாசகம்.
  
    
பவுல் அடிகள் எபேசியிருக்கு எழுதும்பொது, இப்பகுதியில் கிறிஸ்து ஒவ்வொருவருக்கும் அவரது அருளின்படி வெவ்வேறு வரங்களை அளித்துள்ளார் என்றும், திருஅவை வளர்ச்சியடைய, இறைமக்களுக்குப்  பணி செய்ய அவர் பல்வேறு ஊழியர்களை நியமித்துள்ளார் என்றும் குறிப்பிடுகிறார்.  இதன்படி, அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார் என்கதடு,  இவர்களது முதன்மை பணியானது கிறிஸ்துவின் உடலான திருஅவையைக்  கட்டி எழுப்புவதாகும் என்கிறார் பவுல். 

மேலும், கீழே  இறங்கிய இயேசு (உலகில் மனுவுருவான)  எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர் ஆவார்  என்கிறார். 


இதனிமித்தம் நாம் அனைவரும் நம்பிக்கையில் ஒன்றுபட்டு, மானிடமகனை அறிகிற அறிவில் வளர்ந்து, ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைய வேண்டும். மேலும், அன்புடன் உண்மையுரைத்து,  எல்லாவற்றிலும் கிறிஸ்துவைப் போல் வளர்ந்து, அவரையே தலையாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தமக்குரிய பணியைச் செய்வதன் மூலம் திருஅவையைக்  அன்பில் கட்டியெழுப்ப வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில்,  பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயர் சிலர் பிலாத்துவால்  கொல்லப்பட்டதைப் பற்றி இயேசுவிடம் கூறுகின்றனர். அதற்கு இயேசு, அவர்கள் மற்றவர்களைவிடப் பெரிய பாவிகள் என்பதால் இவ்வாறு துன்பப்பட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? என்றும், சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? என்றும் வினவுகிறார். தொடர்ந்து,  யாராக இருந்தாலும் அவரவர்  பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.


பின்னர், கனி தராத அத்திமரத்தைப் பற்றிய உவமையைக் கூறுகிறார். அந்த மரம் மூன்று ஆண்டுகளாகக் கனி தரவில்லை. எனவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார்.  ஆனால் தோட்டக்காரர், இன்னும் ஓராண்டு காலம் பொறுத்திருக்குமாறும், மரத்தைச் சுற்றித் தோண்டி உரமிடுவதாகவும் தொடர்ந்து கனி தரவிடில் அதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”


 சிந்தனைக்கு.


மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும்
அழிவீர்கள்” என்றார். (லூக்கா 13:5)


நற்செய்திகளிலோ அல்லது பிற திருவிவிலிய பகுதிகளிலோ,  பிலாத்து யூதர்கைளக் கொன்ற   சம்பவத்தைப் பற்றிய விவரங்கள் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  என்றாலும், பிலாத்து சில யூதர்களைக் கொன்று குவிக்கும்படி கட்டளையிட்டிருந்தான் என்று இந்தப் பகுதியிலிருந்து சிந்திக்க  முடிகிறது. ஒருவேளை, அவர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தபோதுகூட இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்கலாம். இச்சம்பவத்தையே சிலர் இயேசுவிடம் கூறுகிறார்கள். அதற்கு கொலையுண்ட அல்லது துன்பத்துக் உட்பட்ட  அந்த யூதர்கள் பாவிகள் என்று நினைக்கிறீர்களா என்று அவர்களைக் கேட்கிறார்கள்.

ஆம், துன்பத்துக்கு உட்பட்டவர்களை நல்லவர்கள் என்றோ, தீயவர்கள் என்றோ சிந்திக்கும்  வேளையில் நமது இன்றைய நிலையைப் ப்ற்றி கவலைப்பட வேண்டும் என்கிறார் ஆண்டவர். இதை வலியுறுத்து மற்றொரு எடுத்துக்காட்டையும் இயேசு முன்வைக்கிறார். 


சீலோவாமிலிருந்த கோபுரம் இடிந்து விழுந்ததில் பதினெட்டுப் பேர் கொல்லப்பட்ட மற்றொரு சமீபத்திய துயரச் சம்பவத்தையும் இயேசு குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவமும் கடவுளுடைய தண்டனையின் அடையாளமாகவே பலரால் இயேசுவின் காலத்தில் கருதப்பட்டதை இயேசு வெளிப்படுத்துகிறார்.


இன்று நம்மத்தியில் ஆங்காங்கே பெரும் விபத்துகள் நிகழ்ந்தால் அது கடவுளின் தண்டனையாகத் திரித்து கூறுவோர் உண்டு. நமக்கு வேண்டாதவர் குடும்பதில் எதிர்பாரா நிலையில் துன்ப துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், அத் அவர்களுக்குக் கடவுள் அளித்த தண்டையாக வாய் கூசாமல் பேசுவோம். ஒரு ஆள்காட்டி விரலை நீட்டி பிறர்மீது இல்லாதது பொல்லதது கூறும்போது, மற்ற் மூன்று விரல்களும் நம்மை சுட்டும் வகையில் இருப்பதை நாம் உணர வேண்டும்.


உண்மையில் காலம் பொன்னானது. கடவுள் நமக்கு அளிக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு. நாம் வெறும் பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழாமல், நமது செயல்கள் மூலமாக அன்பையும் நன்மையையும் வெளிப்படுத்த வேண்டும். நமது மனமாற்றத்திற்காக  கடவுள் பொறுமையுடன் நாளும் பொழுதும் காத்திருக்கிறார் என்பது இயேசுவின் அறிவுறுத்தலாகும். “மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்ற இயேசு தந்தையின் இரக்கத்திற்கு மதிப்பளிக்க அழைக்கிறார்.


புனித பவுல் அடிகள், கடவுள் நமக்கு அளித்துள்ள வரங்களைப் பயன்படுத்தி, அன்பிலும் நம்பிக்கையிலும் ஒன்றுபட்டு, கிறிஸ்துவைப் போல முதிர்ச்சியடைந்து, திருஅவையை கட்டி எழுப்ப வேண்டும் என்கிறார். ஆகவே, ஒருவருக்கொருவர் திருஅவையின் வளர்ச்சியை மனதில் கொண்டு, எல்லாவற்றிலும் குறைகண்டிராமல் உண்மைக்குத் தலைவணங்கி, திருஅவையைக் காக்க வேண்டும் என்பதில்  கண்ணும் கருத்துமாக செயல்படுவோம். 


 
இறைவேண்டல்.


என் ஆண்டவரே, மனமாற்றத்தை என் அன்றாட வாழ்வில் நினைவுகூர்ந்து. அதில் உள்ள நன்மையையும் அருளையும் நான் உணரச் செய்வீராக.  ஆமென்.

 
    
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image