வருமுன் காப்பதே அறிவுடைமை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
13 நவம்பர் 2026
2 யோவான் 4-9
லூக்கா 17: 26-37
வருமுன் காப்பதே அறிவுடைமை!
முதல் வாசகம்.
இத்திருமுகத்தை யோவான் எழுதினார் என மரபு கூறினாலும், அவர் சீடர் ஒருவர் இதனை எழுதியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவர் தாம் ஒரு மூப்பர் எனச் சொல்லிக் கொள்கிறார். இவர் கிறிஸ்துவின் உண்மையான போதனையின்படி வாழும் மக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். கடவுளிடமிருந்து நாம் பெற்ற கட்டளை ஒன்றே: ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும். அன்பு என்பது வெறும் வார்த்தைகளில் வெளிப்படுவது அல்ல; கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாக வெளிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
மேலும், இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகிற்கு வந்தார் என்பதை மறுக்கும் தவறான போதனைகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு யோவான் அறிவுறுத்துகிறார். தொடர்ந்து,
கிறிஸ்துவின் உண்மையான போதனையில் நிலைத்திருக்க வேண்டும் அதை விட்டு விலகிச் செல்பவர்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவையும் இழக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் இயேசு, தமது வருகையின் நாளை நோவாவின் காலத்திற்கும் லோத்தின் காலத்திற்கும் ஒப்பிட்டு விவரிக்கிறார். நோவாவின் காலத்தில் மக்கள் உண்பதும் குடிப்பதும், திருமணம் செய்துகொள்வதுமாக இறைவனைப் பற்றிய சிந்தனையின்றி வாழ்ந்தார்கள் என்றும் லோத்தின் காலத்திலும் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கை மற்றும் உலகக் காரியங்களில் மூழ்கியிருந்தார்கள் என்றும், இதன் விளைவாக, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அழிவு வந்தபோது அவர்கள் தப்பிக்கத் தயாராக இல்லை என்கிறார். இதன் மூலம் இறைவனின் வருகை எதிர்பாராத நேரத்தில் நிகழும் என்பதை இயேசு எடுத்துரைக்கிறார்.
மேலும், உலகப் பொருள்கள் மீதும் சொத்துகள் மீதும் பற்றுக்கொண்டு வாழாமல், இறைவனையே முதன்மையாகக் கொண்டு வாழ வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். தன் உயிரைக் காத்துக்கொள்ள முயல்கிறவர் அதை இழந்துவிடுவார்; தன் உயிரை இழக்கிறவரோ அதைக் காத்துக்கொள்வார் என்றும் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தைக் கவனித்தோமானால், திருத்தூதர் யோவான், நாம் அன்பிலும் உண்மையிலும் நிலைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இங்கே ‘அன்பு’ என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல; அது நமது அன்றாட வாழ்க்கையில் செயல்களால் வெளிப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
கடவுளின் மற்றும் திருஅவையின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும், பிறரை அன்பு செய்வதும் உண்மையான கிறிஸ்தவ மற்றும் சீடத்துவ அடையாளங்களாகும். அதேவேளையில், இயேசு கிறிஸ்துவின் உண்மையான போதனையிலிருந்து விலகிச் செல்லாமல் நமது நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும் எனபதும் இன்றியமையாதது.
நற்செய்தியிலோ இயேசு, நோவாவின் காலத்தையும் லோத்தின் காலத்தையும் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். நோவாவின் காலத்தில் மக்கள் உண்பதும் குடிப்பதும், திருமணம் செய்துகொள்வதுமாகத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மூழ்கியிருந்தார்கள். அதுபோலவே லோத்தின் காலத்திலும் மக்கள் தங்கள் உலக காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். ஆனால் திடீரென்று அழிவு வந்தபோது அவர்களால் தப்பிக்க இயலவில்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
இன்று நமது நிலையைச் சற்று சிந்தித்துப் பாரப்போம். நாமும் இன்று ஓயாமல், பல்வேறு பொறுப்புகள், வேலைகள், குடும்பத் தேவைகள், பணம் மற்றும் உலக ஆசைகள் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் நமது வாழ்க்கைக்குத் தேவையானவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதற்கிடையில் நம்மை இயக்குபவர் ஒருவர் உள்ளார் என்பதை மறந்துவிடுகிறோம்.
எந்நேரமும் இறைவனைச் சந்திப்பதற்குத் தயாராக இருப்பதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. இங்கே சந்திப்பு என்று நான் குறிப்பிடுவது வெறும் இறைவேண்டல் (செபம்) மட்டுமல்ல. மாறாக, ஒவ்வொரு நாளும் அடுத்திருப்பவரை அன்பு செய்வதிலும், மன்னிப்பதிலும், பிறருக்குப் பணியாற்றுவதிலும், இறைவனின் வார்த்தையின்படி வாழ்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும்.
இறுதியாக, இயேசு கூறும் "தன் உயிரைக் காத்துக்கொள்ள முயல்கிறவர் அதை இழந்துவிடுவார்; அதை இழக்கிறவரோ அதைக் காத்துக்கொள்வார்" என்ற வார்த்தைகள் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைத் தருகின்றன. சுயநலத்தோடு வாழாமல், பிறருக்காக நம்மையே அர்ப்பணித்து வாழும்போதுதான் நம்மால் உண்மையான வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, உலகக் காரியங்களில் மூழ்கி இறைவனை மறந்துவிடாமல், அன்பிலும் உண்மையிலும் நிலைத்து, எந்நேரமும் இறைவனைச் சந்திக்கத் தயாராக வாழ்வதே சாட்சிய வாழ்வு. சாட்சிய வாழ்வு இன்றி கிறிஸ்தவம் செழிக்காது.
இறைவேண்டல்.
என் ஆண்டவராகிய இயேசுவே, உலகக் காரியங்களில் மூழ்கி உம்மை மறந்துவிடாமல், உமது வருகைக்காக விழிப்புடனும் நம்பிக்கையுடனும் வாழ உமது அருளைத் தாரும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
