இறையரசுப் பணிக்கான வல்லமை மேலிருந்து வருகிறது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 25-ம் வாரம்-புதன்
23 செப்டம்பர் 2026

நீதிமொழிகள் 30: 5-9
லூக்கா வாசகம் 9: 1-6

இறையரசுப் பணிக்கான வல்லமை மேலிருந்து வருகிறது!

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகமானது   கடவுளின்  வார்த்தை உண்மையானது மற்றும் நம்பத்தக்கது என்பதை வலியுறுத்துகிறது. அவரது வார்த்தையில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்று அறிவுறுத்துவதோடு,  வாழ்க்கையில் பொய் உரைப்பதையும், செல்வச் செழிப்பையும், வீண் ஆடம்பரத்தையும்,  தவிர்த்து, தேவையான அளவு உணவை மட்டும் ஏற்று, படைத்தவரான கடவுளை நம்பி நேர்மையாக வாழ வேண்டும் என்று கூறுகிறது.


நற்செய்தி.  

நற்செய்தியில், இயேசு தம் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தீய ஆவிகளை விரட்டவும், நோய்களை குணப்படுத்தவும், இறையரசை அறிவிக்கவும் அதிகாரம் அளித்து அனுப்புகிறார். அவர்கள் பயணத்திற்கு தேவையானவற்றில் அதிகமாக எதையும் எடுத்துச் செல்லாமல், கடவுள் மீது நம்பிக்கை வைத்து செல்ல வேண்டும் என்று கூறுகிறார். அவர்களை ஏற்றுக்கொள்ளும் வீட்டில் தங்கி, ஏற்றுக்கொள்ளாத இடத்தை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

இயேசு தம் திருத்தூதர்களை அழைத்து, சிறு  குறுகிய கால பயிற்சிக்குப் பிறகு, அவர் அவர்களைத் தம் பணிக்காக அனுப்பினார். இந்தப் பணிக்காக, நோய்களைக் குணப்படுத்தவும், பேய்களை விரட்டவும், இறை அரணை அறிவிக்கவும் அவரது தெய்வீக வல்லமையையே அவர்களுக்கு அளித்தார்.

அவர்களில் ஒருவராக நாம் இருந்திருந்தால், அந்த அனுபவத்தாலும், பெற்ற அந்த வல்லமையாலும் உச்சி குளிர்ந்திருக்கும்.  நாம் செய்த எல்லாவற்றையும் எண்ணி வியந்து, பெருமை கொள்ளும் சோதனைக்கு எளிதில் ஆளாகியிருப்போம்.  ஆனால் இயேசு இதை அறிந்திருந்தார். அதனால்தான், ஊருக்குள்  திருத்தூதர்கள் தங்களுக்கான உணவையும் தங்குமிடத்தையும் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இங்கே பணியில் தாழ்ச்சியும், கடவுளை நம்பி வாழ்வதும் இன்றியமையாத பண்பாக ஏற்று செயல்பட இயேசு திருத்தூதர்களைப் பயிற்றுவித்தார். பல வருடங்களுக்கு முன் நம் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு அருள்பணியாளர்கள் சுகபோக வாழ்வை எதிர்பார்த்து இங்கு வரவில்லை. எதையும் எதிர்பாரக்காமல் இந்த மண்ணில் காலடி வைத்தாரகள் என்பது வரலாறு. கடவுளின் வல்லமையில் அவர்கள் செயல்பட்டார்கள். கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைத்தார்கள். நாமோ, இங்கு நமக்கென்று உறவுகள், வீடு வாசல்கள் இருந்தும் இறையரசுப் பணிக்கு அஞ்சுகிறோம்.


இயேசு, திருத்தூதர்களை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் இத்தகைய எளிய பணி வாழ்வுக்கு அழைக்கிறார்.  அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் அந்நியர்களின் அன்பையும் இரக்கத்தையும் சார்ந்து வாழ்ந்த அந்த எளிய வாழ்வுமுறை  அவர்கள் பெற்றிருந்த வல்லமை அவர்களுடையது அல்ல என்பதை  நினைவூட்டியது. அவர்கள் வெறுங்கையுடன் ஊர்களுக்குள் சென்றார்கள். இதன்வழி, அற்புதங்களைச் செய்தவர்களும் ஆன்மாக்களை மீட்டவர்களும் அவர்கள் அல்ல; கிறிஸ்துவே அவர்களுக்குள் செயல்பட்டு, அவர்களின் வழியாகப் பேசியவர் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டியிருந்தது. 


ஆம், இன்றைய வாசகங்கள் நமக்கு ஒரு முக்கியமான படிப்பினையை நினைவூட்டுகின்றன: நாம் எவ்வேளையிலும் கடவுளை நம்பி, அவருடைய வல்லமையைச் சார்ந்து வாழ வேண்டும்.
முதல் வாசகத்தில், “கடவுளின் வார்த்தைகள் தூய்மையானவை” என்று கூறப்படுகிறது. மேலும், செல்வம் அதிகமாகவும் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; அன்றாட வாழ்விற்குத் தேவையானதை மட்டும் அருளுமாறு ஆசிரியர் இறைவனிடம் வேண்டுகிறார். ஏனெனில், அதிகமான செல்வம் நம்மை இறைவனை மறக்கச் செய்யக்கூடும், வறுமை நம்மை தவறான வழியில் அல்லது குறுக்கு வழியில்  செல்லத் தூண்டக்கூடும். இதனால் நாம் வழிதவறலாம்.  

எனவே, திருப்தியுடனும் இறைநம்பிக்கையுடனும் வாழ்வதே உண்மையான ஆசீர்வாதமாக நாம் ஏற்க வேண்டும். உலகோர் ஆயிரம் சொல்வர், ஆயிரம் வழிகளைக் காட்டுவர்.   நமக்கோ வல்லமையும் வழிகாட்டதலும் நம்மிடமிருந்து வருவதில்லை; அது கடவுளிடமிருந்து வருகிறது.

நாம் செய்யும் பிறர் அன்பு பணிகளில் தலைகனமும், பெருமை கொள்ளாமல், “இறைவனே என் வழியாக இதைச் செய்தார்” என்ற தாழ்மையான மனப்பான்மையுடன் வாழ்வதே நமது மேலான  சீடத்துவ வாழ்வு. தேவையானதை மட்டும் நாடி, கிடைத்ததை  நன்றியுடன் பெற்று,  நம்முடைய வாழ்க்கையின் மூலம் இறையன்பையும் நற்செய்தியையும் பிறரிடம் கொண்டு செல்வோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, எல்லா நிலையிலும் என்னை உமது கருவிகளாகப் பயன்படுத்தவும், உம்மில்  முழுமையாக நம்பிக்கை வைத்து வாழவும் அருள் புரிவீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி

Tamil Survey Popup Image