இறைவேண்டலில் சோர்வு, நம்பிக்கையில் தோல்வி! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

14 நவம்பர் 2026
 
3 யோவான் 5-8
லூக்கா 18: 1-8


இறைவேண்டலில் சோர்வு, நம்பிக்கையில் தோல்வி!

முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், திருத்தூதர் யோவான், காயு என்ற இறைநம்பிக்கையாளரின் அன்பான விருந்தோம்பலையும், இறைப்பணியாளர்களுக்கு அவர் செய்த உதவிகளையும் பாராட்டுகிறார். குறிப்பாக, இறைநற்செய்தியை அறிவிக்கச் செல்லும் சகோதரர்களுக்கு அவர் அன்புடன் உதவி செய்து, அவர்களின் பணிக்கு ஆதரவாக இருப்பது உண்மையான கிறிஸ்தவப் பண்பு என்பதை எடுத்துரைக்கிறார்.


மேலும், இறைப்பணியாளர்களை ஆதரிப்பதன் மூலம் நாமும் இறைவனின் பணியில் பங்கெடுக்கிறோம் என்பதை யோவான் எடுத்துரைக்கிறார். 


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், இயேசு, மனம் தளராமல் தொடர்ந்து இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதை ஓர் உவமையின் வழியாக எடுத்துரைக்கிறார். ஒரு நகரில் இருந்த நேர்மையற்ற நீதிபதியிடம், கைம்பெண் ஒருவர் தனக்குரிய நீதியை வழங்குமாறு தொடர்ந்து முறையிட்டு வந்தார். அந்த நீதிபதி இறைவனுக்கும் மனிதர்களுக்கும் அஞ்சாதவராக இருந்தபோதிலும், கைம்பெண்ணின் தொடர் வேண்டுதலால் இறுதியில் அவருக்கு நீதி வழங்கினார் என்றும்,   நேர்மையற்ற நீதிபதியே தொடர்ந்து மன்றாடிய கைம்பெண்ணுக்கு நீதி வழங்கியபோது, தம்மை நம்பி இரவும் பகலும் மன்றாடும் மக்களுக்கு நீதியுள்ள இறைவன் நிச்சயமாக நீதி வழங்குவார் என்று இயேசு உறுதிப்படுத்துகிறார்.


சிந்தனைக்கு.


இன்றைய இரு வாசகங்களையும் நாம் கூர்ந்து வாசித்தால்,  நமக்கான இரு முக்கியமான பண்புகளை புலப்படும்.  அவை இறைவன் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையும், பிறரிடம் காட்டும் உண்மையான அன்பும் ஆகும்.


முதல் வாசகத்தில், திருத்தூதர் யோவான் காயு என்பவரின் விருந்தோம்பலையும், இறைப்பணியாளர்களுக்கு அவர் செய்த உதவிகளையும் பாராட்டுகிறார். இவ்வாறு செய்வது  மூலம் நாமும் இறைப்பணியில் பங்கெடுக்கிறோம் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இது குறித்து புனித யாக்கோபு  ‘நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால், அது தன்னிலேயே செத்ததாகும்’ என்கிறார் (யாக் 2:17)

ஆம், கிறிஸ்தவ அன்பு என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் இருக்கக்கூடாது; அது நமது செயல்களிலும் வெளிப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.  பிறருக்குத் தேவையான நேரத்தில் உதவுவது, துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பது, இறைப்பணிக்கு ஆதரவாக இருப்பது ஆகியவை உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. 


இன்றைய நற்செய்தியில், மனம் தளராமல் தொடர்ந்து மன்றாடிய கைம்பெண்ணை இயேசு நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர், நேர்மையற்ற நீதிபதியிடம் மீண்டும் மீண்டும் நீதி கேட்டார். இறுதியில், அவருடைய விடாமுயற்சியைக் கண்டு நீதிபதி அவருக்கு நீதி வழங்கினார் என்று இயேசு முடிக்கிறார். 


இந்த உவமையின் வழியாக இயேசு நமக்குக் கூறும் செய்தி என்ன? நமது வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறவில்லை என்பதற்காக இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நினைக்கக்கூடாது. இறைவன் நமது மன்றாட்டைக் கேட்கிறார். அவருடைய நேரமும் திட்டமும் நமது நேரத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம். எனவே, நாம் நம்பிக்கையுடன் தொடர்ந்து மன்றாட வேண்டும். ‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்’ (மத் 7;7) என்பதுதான் ஆண்டவரின் உறுதிமொழி. மேலும், "முயற்சி திருவினையாக்கும்" என்பதும் நாம் அறிந்த கூற்று. 


ஒரு நல்ல தந்தை தன் பிள்ளைகளுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பது போல, நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் இறைவனை நாடுபவர்களுக்கு அவர் நிச்சயம் நன்மை செய்வார் என்பதில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இழக்கக்கூடாது. அவ்வாறே, “இறைவன் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை நமது மன்றாட்டில் மட்டுமல்ல, பிறருக்குச் செய்யும் அன்பான செயல்களிலும் வெளிப்பட வேண்டும்.”  ஆகவே, 


1.    மன்றாடுவதில் விடாமுயற்சி: எந்தச் சூழ்நிலையிலும் இறைவன் மீது நம்பிக்கை இழக்காமல் இருப்போம்.
2.    அன்பில் செயல்படுதல்: நமது அன்பைச் செயல்கள் வழியாக வெளிப்படுத்துவோம்.
3.    இறைப்பணியில் பங்கேற்றல்: பிறருக்கு உதவுவதன் மூலம் இறைவனின் பணியைத் தொடர்வோம்.


இறைவேண்டல்.

என் அன்பு ஆண்டவரே, எத்தகைய துன்பத்திலும் மனம் தளராமல் உம்மை நம்பி மன்றாடும் உறுதியான நம்பிக்கையை எனக்குத் தாரும். இறுதிவரை நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் வாழ என்னை வழிநடத்தும். ஆமென்.

 
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image