உள்ளூர மகிழ வெளிவேடம் களைக!| அருள்பணி. முனைவர் செ. ரெ. வெனி இளங்குமரன் | Veritas Tamil

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (273)

தவநெறி இல்லாதவர் தவக்கோலம் கொண்டிருப்பது புலித்தோல் போர்த்திக் கொண்டு பசு, பயிரை மேய்ந்தது போன்றதாகும்.

தவத்தின் மேன்மையை அறிந்துணர, தவ வலிமையைப் பெருக்கிக் கொள்ள, தரப்படும் ஒரு வாய்ப்பு. இறை வேண்டலிலும் அறச்செயலிலும் நோன்பு முயற்சிகளிலும் மேலும் ஒரு படி முன்னேற தவத்துக்குகந்த நற்பயிற்சிகளை விரிவாக ஒவ்வோர் ஆண்டும் தவச் செயலாக மக்கள் செய்யும் ஒவ்வொன்றையும் பொருளுள்ளதாக்க வேண்டும். தவ, நோன்பு முயற்சிகளுக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு மதத்திலும் உள்ளன. அவற்றைச் செயற்படுத்துகையில் வெளிவேடத்தனமும் நடிப்புத்தன்மையும் இல்லாதிருக்கச் செய்வோம் பொய்ம்மையாகவும் பொம்மையாகவும் காலத்தைக் கழிப்பதற்கு நாம் பயன்படுத்தும் முகமூடிகளைக் கிழித்தெறிவோம். இல்லையேல் தீமையும் துன்பமும் விளைந்திடும்; நன்மை நம்மை விலகிச் செல்லும். காட்டை ஆள ஆசை கொண்ட நரியின் வேடம் கலைந்த கதை தெரியும் தானே. நரி ஒன்று ஊருக்குள் வந்தது. கோழிகளை விரட்டியது. குழந்தைகளை மிரட்டியது. துணிச்சல் மிக்க மாணவர்கள் சிலர் கம்புகளை எடுத்துக்கொண்டு ஒன்றுதிரண்டு நரியைத் துரத்தினர். நரி ஓடியது. கண்மூடித்தனமாக ஓடியது. ஓடியது... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடியது. திடீரென ஒரு சாயத்தொட்டியில் விழுந்தது. உடல் முழுதும் சாயம் பற்றிக் கொண்டது. மீண்டும் எழுந்து காட்டுக்குள் ஒடி ஒளிந்தது. மரத்தடியில் ஓய்வெடுத்தது.

அந்த நேரத்தில் அங்கு வந்த பிற விலங்குகள் நரியின் தோற்றத்தைப் பார்த்து என்னமோ... ஏதோ... என்று அஞ்சி அலறி ஓடின.

சாயத்தால் ஏற்பட்ட தன் தோற்ற மாற்றத்தைப் பார்த்த பேராசை கொண்ட நரி ஒரு திட்டம் போட்டது. குரல் எழுப்பிக் கொண்டே நடந்தது. காட்டு விலங்குகளையெல்லாம் அழைத்தது. அவர்களிடம் சொன்னது. 'நான் கடவுளால் அனுப்பப்பட்ட புதுமை விலங்கு; இனி நான் தான் உங்கள் அரசன்; என் ஆணைப்படிதான் எல்லாம் நடக்க வேண்டும். நாளுக்கோர் ஆள் எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நரி சொல்லி முடித்ததும், சாதியத்தை உள்ளடக்கிய மனுதர்மத்தை அமைதியாக ஏற்றுக்கொண்ட தமிழர்களைப் போல எல்லா விலங்குகளும் நடுங்கிக் கொண்டே தலையாட்டி ஏற்றுக்கொண்டன. அடக்குமுறைச் சட்டம் அரங்கேறியது. நரி நாளுக்கொரு சட்டம் ஆளுக்கொரு திட்டம் எனச் சூழ்ச்சி செய்து ஆட்சி நடத்தியது.

நாள்கள் உருண்டோடின. ஒருநாள் கருமுகிலால் காடு இருண்டது. புயலடித்தது. இடி இடித்தது. மின்னல் வெட்டியது. ஆனால், அதை அறியாமலே நரி மீண்டும் தன் ஆணவத்தால் ஆணைகள் பிறப்பித்தது. மழை கொட்டியது. நரியின் சாயம் வெளுத்துப் போனது.

விலங்குகள் சூழ்ந்து கொண்டன. ஏமாற்றப்பட்ட விலங்குகள் கைகளை ஓங்கின. ஏமாற்றிய நரி குற்றுயிராய்க் கிடந்தது...
தன் வேடத்தை நரி நம்பியது. முடிவில் அழிவே எஞ்சியது. பிறரை ஏமாற்றி நடிப்புத் திறமையால் வாழும் மாந்தர் ஒருநாள் அகப்படுவார்; 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்பது தமிழ்ப் பழமொழி. நடிப்பவரது முகத்திரை கிழிக்கப்படும். உண்மைதான் இறுதியில் வெல்லும். 'வாய்மையே வெல்லும்' என்பது தான் உண்மையானது.

தவமுயற்சிகளை மேற்கொண்டு அறச்செயல்களைச் செய்து இறைவனுக்கு உகந்த வாழ்க்கை முறையை நடத்துகிறவர் வெளிவேடம் கொண்டவராய் இருக்கக்கூடாது.

அறத்துப் பாலில் உள்ள துறவறவியலில் தவத்திற்குப் பின்வரும் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் வரும் மேற்சொன்ன 273-ஆம் குறள், வெளிவேடம் தொடர்பான கருத்தையே உவமையாகத் தருகிறது.

நல்லவர் போல் நாடகமாடுவோரை இறைவன் ஏற்க மாட்டார்; அறம் மன்னிக்காது.

நல்லவர்போல் ஏமாற்றுவோரை, உண்மை தெரியும் பொழுது, மக்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.

எனவே, நல்லவர் போல் நடிக்க வேண்டாம்; நல்லவராகவே வாழ வேண்டும்.

நாம் மட்டும் அல்லாது மற்றவர்களும் நல்லவர்களாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும்.

புலித் தோலோ, நரித் தந்திரமோ இல்லாமல் நேர்மைத் திறத்தோடு இறைவனுக்குத் திருவுளமாக இருக்கக்கூடிய தெருக்கத்தைக் கடைப்பிடித்து உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வோம்.


எழுத்து, 
வெனி இளங்குமரன்.

Tamil Survey Popup Image