பாலங்களை அமைக்கும் திருஅவையாக உருவெடுக்க இலங்கைத் திருஅவை அழைப்பு | FABC | Veritas Tamil
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவிறுதிப் பேரவையை முன்னிட்டு, "ஒன்றிணைந்த மனமாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை அமைப்பவர்களாகவும் இருப்பதற்கான திருப்பணியும்" என்ற கருப்பொருளை இலங்கைத் திருஅவை தனித்துவமான பார்வையில் எடுத்துரைத்துள்ளது.
பௌத்தர்கள் பெரும்பான்மையாகவும், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இணைந்து வாழும் இலங்கையில், பாலங்களை அமைத்தல் என்பது திருஅவையின் உள்நோக்கிலும் வெளிநோக்கிலும் இடம்பெறும் பணியாகக் கருதப்படுகிறது. ஒருபுறம் திருஅவைக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, மறுபுறம் பிற கிறிஸ்தவ சபைகளுடனும், பல்வேறு சமய மரபுகளுடனும் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் திருஅவை முயற்சி செய்து வருகிறது.
1980 மற்றும் 1990-களில் மறைந்த இயேசு சபை இறையியலாளர் அருள்பணி அலோய்சியஸ் பியரிஸ் அவர்களின் பணியால், இலங்கையில் சபைகளுக்கிடையேயான மற்றும் சமயங்களுக்கிடையேயான உரையாடல் புதிய ஊக்கத்தைப் பெற்றது. இன்று காரித்தாஸ் இலங்கை (SEDEC), மருதானையில் உள்ள சமுதாயம் மற்றும் சமய மையம் (Centre for Society and Religion – CSR) மற்றும் ஆயர் ஜூட் நிஷாந்த சில்வா தலைமையிலான சபைகளுக்கிடையேயான மற்றும் சமயங்களுக்கிடையேயான உரையாடலுக்கான ஆயர் ஆணையம் ஆகியவை இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
இருப்பினும், சமயமும் தேசிய அடையாளமும் நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ள இலங்கையில், பாலங்களை அமைக்கும் பணி எளிதானதல்ல. சில தேசியவாதக் குழுக்கள் கிறிஸ்தவர்களை மேற்கத்திய செல்வாக்கின் பிரதிநிதிகளாக சித்தரிப்பதால், சமயங்களுக்கிடையேயான உரையாடல் பல நேரங்களில் சவாலானதாக மாறுகிறது.
இந்த சவால்களுக்கு மத்தியிலும், சில கத்தோலிக்க ஆளுமைகள் உரையாடலின் நிலையான அடையாளங்களாக திகழ்ந்துள்ளனர். புத்தள பகுதியில் பௌத்த மக்களிடையே மறைப்பணி ஆற்றிய ஒப்லேட் துறவியான அருள்பணி மைக்கேல் ரொட்ரிகோ, 1987ஆம் ஆண்டு திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார். மேலும், இலங்கை கலாச்சாரத்தையும் பௌத்த–கிறிஸ்தவ நல்லிணக்கத்தையும் ஊக்குவித்த அருள்பணி மார்சலின் ஜயக்கொடி, தனது பங்களிப்பிற்காக ரமோன் மக்சசே விருது பெற்றார்.
பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி வழங்கி, சமாதானச் சகவாழ்வை வளர்த்ததில் கத்தோலிக்கப் பள்ளிகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், பழிவாங்கும் வன்முறை பரவக்கூடும் என்ற அச்சம் நிலவியபோது, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினருடன் இணைந்து அமைதியையும் பொறுமையையும் வலியுறுத்தினார். இதனால் பெரிய அளவிலான இன, சமய மோதல்கள் தவிர்க்கப்பட்டதுடன், முஸ்லிம் சமூகத்துடனான உறவும் பாதுகாக்கப்பட்டது.
பதுளை, காலி, அனுராதபுரம், கண்டி போன்ற மறைமாவட்டங்களில், கத்தோலிக்கர்கள் சிறுபான்மையாக வாழ்ந்தாலும், ஆயர்களும் அருள்பணியாளர்களும் பௌத்த, இந்து மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றனர். இருப்பினும், இந்த உறவுகளை அடித்தள மக்களிடையே ஆழமான ஒத்துழைப்பாக மாற்றுவது இன்னும் சவாலாகவே உள்ளது என்று திருஅவைத் தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். உண்மையான பாலங்களை அமைக்கும் பணி அரசியல் நோக்கங்களையோ வெளிப்படையான அடையாளங்களையோ அல்லாது, பகிரப்பட்ட ஆன்மீக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வரவிருக்கும் FABC நிறைவிறுதிப்பேரவை, ஒன்றிணைந்த பயணத்தை (Synodality) சமூகத்துடனான உரையாடலோடு மேலும் ஆழப்படுத்த உள்ளூர் திருஅவைகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கருப்பொருளைப் பற்றி கருத்து தெரிவித்த முனைவர் அருள்சகோதரி ரசிகா பியரிஸ், ஒன்றிணைந்த திருஅவை என்பது அனைவரையும் உள்ளடக்கியதும், அனைவரின் பங்கேற்பையும் உறுதி செய்வதுமான திருஅவையாக இருக்க வேண்டும் என்றார். திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் திருஅவையின் மறைப்பணியில் சமமான பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க உரையாடல், கேட்டறிதல் மற்றும் பாலங்களை அமைத்தல் இன்றியமையாதவை என்றும் வலியுறுத்தினார். மேலும், குருத்துவ மைய அணுகுமுறையைத் தாண்டி, அனைத்து இறைமக்களின் சம மாண்பையும் அழைப்பையும் மதிக்கும் திருஅவையாக வளர வேண்டும் என்றார்.
களனியா பல்கலைக்கழகத்தின் பொதுநிலை இறையியலாளர் பேராசிரியர் ஷெர்லி லால் விஜேசிங்க அவர்கள் ஒன்றிணைந்த திருஅவைப் பயணம் நடைமுறை அருள்பணிசார் மாற்றங்களையும் தேவைப்படுத்துகிறது என்றார். பங்குத் திருஅவையின் புதுப்பிப்பு, பயிற்சி பெற்ற பொதுநிலையினரின் பங்கேற்பு, புதுப்பிக்கப்பட்ட மறைக்கல்வித் திட்டங்கள், முடிவெடுப்புகளில் பங்கு மக்களின் ஈடுபாடு, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டடங்களில் அல்லாமல் மனித வள மேம்பாட்டில் முதலீடு செய்வது ஆகியவற்றிற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார்.
ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள FABC நிறைவிறுதிப்பேரவையை முன்னிட்டு, இலங்கைத் திருஅவையின் அனுபவம், திருஅவைக்குள்ளும் பல்வேறு சமய, கலாச்சாரச் சூழல்களுக்கிடையிலும் பாலங்களை அமைக்கும் பணியில் உள்ள வாய்ப்புகளையும் சவால்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
