இறையாட்சியின் பாதை: இரக்கம், பொறுமை, அமைதி! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 15ஆம் வாரம் – சனி
மீக்கா 2: 1-5
மத்தேயு 12: 14-21
இறையாட்சியின் பாதை: இரக்கம், பொறுமை, அமைதி!
முதல் வாசகம்.
இன்று மீக்கா இறைவாக்கினரின் வாக்கை வாசிக்கக் கேட்கிறோம். மீக்கா
இறைவாக்கினர் யூதாவில் உள்ள நாட்டுப்புற நகர் ஒன்றில் தோன்றியவர்.
ஓசேயா, எசாயா ஆகியோரின் சம காலத்தில் இறைவாக்குரைத்தவர்.
மீர்பர் பெத்லகேமில் பிறப்பார் என்று முன்னுரைத்தவர் (மீக்கா 5:2)
இவரின் காலத்தில் பிறரின் நிலங்களையும் சொத்துக்களையும்
அநியாயமாகப் பறித்துக்கொள்ளத் திட்டமிடும் செல்வந்தர்களையும்
அதிகாரிகளையும் இறைவன் கண்டிப்பார், என்றும், அவர்கள் தங்கள்
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏழைகளை ஒடுக்குவதால்,
அவர்கள்மேல் இறைவனின் தீர்ப்பு வரப்போகிறது என்றும்
வெளிப்படையாக எச்சரித்தார்.
அவர்கள் பிறருக்குச் செய்த அநீதியின் விளைவாக, அவர்களுடைய
நிலங்களும் உரிமைகளும் அவர்களிடமிருந்து பறிக்கப்படும் என்றும்
பேராசை, அநீதி மற்றும் தீய அதிகாரம் இறைவனுக்கு விருப்பமில்லாதை
என்றும், நீதி மற்றும் நேர்மையுடன் வாழ வேண்டும் என்ற முக்கியமான
செய்தியை எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசுவைக் கொலை செய்ய
பரிசேயர்கள் சதி செய்கிறார்கள். ஆனால் இயேசு அந்த இடத்தைவிட்டு
விலகிச் சென்று, தம்மை நாடி வந்த அனைவரையும் குணமாக்குகிறார்.
அதேவேளையில், தம்மைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டாம்
என்று அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
இதன் மூலம், எசாயா இறைவாக்கினர் கூறிய இறைவனின் பணியாளர்
பற்றிய இறைவாக்கு நிறைவேறியதை மத்தேயு சுட்டிக்காட்டுகிறார்.
மேலும். இயேசு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புக்குரிய
பணியாளர்; அவர் வன்முறையாலும் ஆரவாரத்தாலும் அல்ல,
தாழ்மையாலும் இரக்கத்தாலும் நீதியை நிலைநாட்டுகிவர் என்றும்,
நொறுங்கிய நாணலை முறிக்காமலும், புகைந்து கொண்டிருக்கும் திரியை
அணைக்காமலும், பலவீனமானவர்களை அன்புடன் காத்து அவர்களுக்கு
நம்பிக்கை அளிக்கிறவரு என்றும், இறுதியில், எல்லா இன மக்களும்
அவர்மீதே தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள் என்ற செய்தியை மத்தேயு
பகிர்கிறார்.
சிந்தனைக்கு.
"பரிசேயர்கள் வெளியே சென்று, இயேசுவைக் கொலை செய்யும்படி
அவருக்கு எதிராக ஆலோசனை நடத்தினர்" என்று மத்தேயு
குறிப்பிடுகிறார். ஏன் அவர்கள் இத்தகைய சதித்திட்டத்தைத் தீட்ட
வேண்டும்? காரணம், ஓய்வுநாள் சட்டத்தை இயேசு மீறினார். ஆனால்
இயேசு அதன் உண்மையான நோக்கமான இரக்கத்தையும் மனித
நலனையும் வெளிப்படுத்த முயன்றார். அவர்கள் காதில் ஏறவில்லை.
பரிசேயர்கள் ஓய்வுநாளானது, இறைஅருளை அனுபவிக்கும் நாளாக
அல்லாமல், மக்களுக்குப் பாரமாக இருக்கும் கடுமையான
கட்டுப்பாடுகளும், உயிரற்ற சடங்கு முறைகளும் நிறைந்த ஒரு நாளாக
மாற்றியிருந்தனர். இன்று, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற நாம்
முயற்சிக்கும்போது எதிர்கொள்ளும் எதிர்ப்புகளைப் பற்றி சிந்திக்க
வேண்டும். ஒவ்வொரு போராட்டத்தையும் உடனே எதிர்கொண்டு
வெல்ல வேண்டிய அவசியமில்லை. இயேசு தனக்கு எதிரான
சதித்திட்டத்தை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் அல்லவா?
அது விவேகம்.
நிச்சயமாக, தீமையை எதிர்க்கும் நேரம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும்
வரும். அது வரும்போது, அதை அன்போடு பற்றிக்கொள்ள நாம் தயாராக
இருக்க வேண்டும். ஆனால் அந்த நேரம் வரும் வரை, அமைதியில்
இறைவனின் திருவுளத்தை உணர்ந்து, அவருடைய குரலைக் கேட்டு,
அன்போடும் துணிவோடும் நாம் ஏற்றுள்ள சீடத்துவத்தை வாழ்ந்து காட்ட
வேண்டும். நேரம் அறிந்து செயல்பட வேண்டும். ஏனெனில், இறைவன்
நிர்ணயித்த நேரத்திற்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் சீடன்,
இறுதியில் இறையருளின் கனியை அறுவடை செய்வான்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, எதிர்ப்புகளும் சோதனைகளும்
வந்தபோதிலும், தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து அன்புடனும்
அமைதியுடனும் நடந்த உம்மைப் போல வாழ எனக்கும் அருள் புரிவீராக.
ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
