அன்பிலும் உண்மையிலும் நிலைத்திருப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 19 ஆம் வாரம் – வெள்ளி
எசேக்கியேல் 16: 1-15, 60, 63
மத்தேயு 19: 3-12
அன்பிலும் உண்மையிலும் நிலைத்திருப்போம்!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில், இறைவன் எருசலேமை ஒரு கைவிடப்பட்ட
குழந்தையாகவும், பின்னர் தமது மணமகளாகவும் உருவகப்படுத்தி கூறிய
செய்தியை எசேக்கியேல் விவரிக்கிறார். இக்காலக் கட்டத்தில்
எசேக்கியேல் இறைவாக்கினர் பாபிலோனில் மக்களோடு மக்களாக
நாடுகடத்தப்பட்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எசேக்கியேல் பாபிலோனில் இருந்தபோது, எருசலேமின் மக்களின்
விசுவாசமின்மை மற்றும் சிலைவழிபாட்டை கண்டித்து, எருசலேம் ஒரு
கைவிடப்பட்ட குழந்தையாகவும், பின்னர் இறைவனின் மணமகளாகவும்
உருவகப்படுத்தப்படுத்தப்பட்ட கடவுளின் செய்தியை எடுத்துரைக்கிறார்.
அவரது செய்தியில்,
எருசலேம் பிறந்தபோது யாரும் கவனிக்காத நிலையில், இரத்தத்தில்
கிடந்த குழந்தையைப் போல இருந்ததாகவும், இறைவன்தான் அவளை
இரக்கத்துடன் கண்டு, பாதுகாத்து வளர்த்து, அழகுபடுத்தினார் என்றும்,
என்றும் அவள் வளர்ந்து திருமண வயதை அடைந்தபோது, இறைவன்
அவளுடன் உடன்படிக்கை செய்து, அவளைத் தமக்குச் சொந்தமானவளாக
ஏற்றுக்கொண்டார் விவரித்து கூறுகிறார். ஆனால், பின்னர்
காலவோட்டத்தில், கடவுளின் அருளை, தயவை மறந்து தன் அழகிலும்
செல்வத்திலும் நம்பிக்கை வைத்து, பிற தெய்வங்களைப் பின்பற்றினாள்
என்ற வருத்தத்தைப் பதிவுச் செய்கிறார்.
இதில், கவனிக்க வேண்டிய முகிய செய்தி என்னவெனில், இறைவன்
அவளை முழுமையாகக் கைவிடவில்லை. “நான் என் உடன்படிக்கையை
நினைவுகூருவேன்” என்று கூறுகிறார். அவள் செய்த பாவங்களை
நினைத்து வெட்கப்படும்படி இறைவன் அவளுக்கு மனமாற்றத்தை
அளிக்கிறார்; அவளுடைய குற்றங்களை நினைவுகூராமல் மன்னிக்கிறார்.
நற்செய்தி.
இந்த நற்செய்திப் பகுதியில், பரிசேயர்கள் இயேசுவைச் சோதிக்கும்
நோக்கில், “ஒருவன் தன் மனைவியை எந்தக் காரணத்திற்காகவும்
விலக்கிவிடலாமா?” என்று கேட்கிறார்கள்.
இயேசு, திருமணம் மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடு
அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறார். தொடக்கத்திலேயே கடவுள்
“ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்” என்றும், “இருவரும்
ஒரே உடலாக இருப்பார்கள்” என்றும் கூறியதை நினைவுபடுத்துகிறார்.
எனவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது என்று
போதிக்கிறார்.
மோசே ஏன் மணவிலக்கை அனுமதித்தார் என்று அவர்கள்
கேட்கும்போது, இயேசு, மக்களின் கடினமான இதயத்தினால் அது
அனுமதிக்கப்பட்டது; ஆனால் அது கடவுளின் தொடக்கத் திட்டம் அல்ல
என்று விளக்குகிறார்.
மேலும், திருமணத்தைத் துறந்து தனிமையில் வாழ்வது பற்றியும் இயேசு
கூறுகிறார். எல்லோராலும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது;
இறைவனால் அருள் பெற்றவர்களே அதை ஏற்றுக்கொள்ள முடியும்
என்கிறார்.
சிந்தனைக்கு.
‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’ என்ற
இறைவார்த்தைப் பகுதியை தங்கள் திருண அழைப்பிதழில் அச்சிட்ட
பலரது திருமண உறவு முறிவில் முடிந்ததை நாம் பாரத்திருப்போம்.
சிலரது குடும்பத்திலும் இத்தகையை மணமுறிவு
ஏற்பட்டிருக்கக்கூடும்.
திருமணம் என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட புனிதமான
உடன்படிக்கை. கணவன்–மனைவி ஒருவருக்கொருவர் உண்மையுடனும்
அன்புடனும் வாழ அழைக்கப்பட்ட புனித இணைப்பு.
இறைவன் நம்மை நம் தகுதியினால் அல்ல, அவருடைய இரக்கத்தினாலும்
அன்பினாலும் உயர்த்துகிறார், கணவன் மனைவியாக இணைக்கிறார்.
நம்மில் பலர், பல தம்பதிகள் அவருடைய அருளைப் பெற்றபின்
அவருக்குக் கொடுத்த பிரமாணிக்க வாக்குறுதியை அற்ப
காரியங்களுக்காக காற்றில் பறக்க விடுகிறோம்.
திருமண பிரமாணிக்கம் என்பது, திருமணத்தில் கணவன்–மனைவி
இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாகவும், நம்பிக்கையுடனும்,
வாழ்நாள் முழுவதும் அன்புடனும் இருப்பதாக கடவுள் முன்னிலையிலும்
சமூகத்தின் முன்னிலையிலும் அளிக்கும் உறுதிமொழி ஆகும்.
கத்தோலிக்க திருஅவையில் திருமணம் வெறும் மனித ஒப்பந்தம் அல்ல;
அது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட புனிதமான உறவு. கணவனும்
மனைவியும் “ஒரே உடலாக” இணைக்கப்படுகிறார்கள்.
ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது; இன்பத்திலும் துன்பத்திலும்
அன்புடன் துணையாக இருப்பது; நோய், வறுமை, சிரமம் போன்ற
காலங்களிலும் கைவிடாமல் இருப்பது; தவறுகள் ஏற்படும்போது
மன்னித்து, சமரசம் செய்து, உறவைப் பாதுகாப்பது; குடும்பத்தின்
நலனையும், குழந்தைகளின் நலனையும் பொறுப்புடன் கவனிப்பது
போன்றவற்றை கடமைகளில் , பொறுப்புணர்வுகளில் வாழ்நாள்
முழுவதும் நிறைவேற்றுவதாகும்.
நற்செய்தியில், இயேசு மணவிலக்கு பற்றிப் பேசும்போது, மனிதர்களின்
“கடினமான இதயத்தினால்” மோசே மணமுறிவுக்கு அனுமதி அளித்ததாகக்
தெளிவுப்படுத்தினார். எனவே, உறவுகளில் பிடிவாதம், கோபம்,
மன்னிக்காமை ஆகியவற்றை விட்டுவிட்டு மனமாற்றம் பெற வேண்டும்.
‘திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்கள். திருமணம் வாழையடி
வாழையாக வரும் வழிமரபுக்கு அடித்தளம் என்பதை நினைவில்
கொள்வோம்.
இறைவேண்டல்.
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே, திருமண உறவால் ஏற்பட்ட
பந்தத்தை மதித்து, அதில் உண்மையுடனும் பிரமாணிக்கத்துடனும் வாழ
எனக்கு அருள்புரிவீராக, ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
