நாமும் போய் அப்ப்டியே செய்வோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

05 அக்டோபர் 2026
 
கலாத்தியர்  1: 6-12
லூக்கா 10: 25-37

நாமும் போய் அப்ப்டியே செய்வோம்!
 

முதல் வாசகம்.


முதல் வாசகத்தில்,  பவுல் கலாத்திய இறைமக்களை எச்சரிக்கிறார். அவர்கள் கடவுளின் அருளால்   கிறிஸ்துவிடம் அழைக்கப்பட்டிருந்தும், வேறொரு “நற்செய்தியை” ஏற்றுக்கொள்வதைக் குறித்து அவர் எச்சரிக்கிறார்.  இங்கே, உண்மையான நற்செய்தி என்பது கிறிஸ்துவின் அருளையும் மீட்பையும்  மையமாகக் கொண்டது.


வேறு யாராவது, அவர்கள் திருத்தூதர்களாக இருந்தாலும் அல்லது வானதூதர்களாக இருந்தாலும், வேறு ஒரு நற்செய்தயை போதித்தால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பவுல் கடுமையாக வலியுறுத்துகிறார். 


பவுல் அறிவிக்கும் நற்செய்தி, மனிதர்களிடமிருந்து வந்தது அல்ல; அது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டினால் அவருக்கு கிடைத்தது. எனவே, மனிதர்களை மகிழ்விப்பதைவிட கடவுளுக்கு உண்மையாக இருப்பதே முக்கியம்.


நற்செய்தி.


இந்தப் பகுதியில், ஒரு சட்ட அறிஞர் இயேசுவிடம் ‘நிலைவாழ்வு’ பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார். அதற்கு இயேசு, திருச்சட்ட்த்தில் கூற்றப்ட்டிருப்பது என் என்று அவரைக் கேட்டதும்  அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார்.


 அதே நபர் மேலும் ஒரு கேளவியால் இயேசுவை மடக்க நினைத்து,   “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். இக்கேள்விக்கு இயேசு ஓர் உவமையின் வழியாக பதில் அளிக்கிறார். 


இயேசு “நல்ல சமாரியன்” உவமையைச் சொல்கிறார். ஒரு மனிதன் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு வழியில் காயமடைந்து கிடக்கிறான். ஒரு குருவும் லேவியரும் அவனைப் பார்த்தும் உதவாமல் கடந்து செல்கிறார்கள். ஆனால் ஒரு சமாரியன் அவனைப் பார்த்து இரக்கம் கொண்டு, அவனுடைய காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார் என்றும், அந்த நபரை நோக்கி, “கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார். முடிக்கிறார்.


சிந்தனைக்கு.


நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஓர் உவமையை இன்று மீண்டும் நற்செய்தியில் வாசிக்கிறோம். லூக்கா மட்டுமே விவரித்துள்ள இந்த உவமை உலகப் புகழ்பெற்ற ஒன்று என்றால் மிகையாகாது. 


கூர்ந்து கவனித்தால், இயேசு இந்த உவமையை ஒரு யூத சட்ட அறிஞர் கேட்ட கேள்விக்குப் பதிலாகக் கூறுகிறார். அந்தச் சட்ட அறிஞர், திருச்சட்டத்தின் சாராம்சத்தை எடுத்துரைக்கும் தோராவின் இரண்டு முக்கிய பகுதிகளை மேற்கோள் காட்டுகிறார்.  முதலாவது, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.” (இச 6:5) இரண்டாவதாக, உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ (லேவி 19:18).


இயேசு இந்த விவாதத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. யார் “அயலான்” என்று கருதப்பட வேண்டும் என்பதற்கு அவர் எந்த வரம்பையும் விதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, நல்ல சமாரியன் உவமையின் மூலம், அனைவருக்கும் நாம் எவ்வாறு அயலானாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறார். 


இந்த உவமையில், இரக்கத்திற்கு முன்மாதிரியாக ஒரு சமாரியனை இயேசு காட்டுகிறார். இதைக் கேட்ட மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ஏனெனில், அந்தக் காலத்தில் சமாரியர்கள் சமய மற்றும் சமூக  ரீதியாக பகைவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் கருதப்பட்டனர். குறிப்பாகச் சொன்னால் யூதர்களுக்கு ஆகாதவர்கள். 


சற்று ஆழமாகச் சிந்தித்தால், சட்ட அறிஞர், “என் அயலான் யார்?” என்று கேட்டார். ஆனால் இயேசு கேள்வியை வேறு விதமாக மாற்றுகிறார்: “நீ யாருக்கு அயலானாக இருக்கிறாய்?” என்று சிந்திக்கத் தூண்டுகிறார். இந்த தூண்டுதலுக்காக  ஆண்டவர் இந்த ‘நல்ல சமாரியன்’ உவமை விவரிக்கிறார். இது மிகவும் ஆழமான கேள்வி.


 சில நேரங்களில் நாம், “அது என் பிரச்சினை இல்லை”, எனக்கு ஏன் ஊர் வம்பு, ‘என் கார் புத்தம் புதியது, இதில் எப்படி விபத்தில் அடிபட்டு இரத்தம் சிந்துபவரை ஏற்றி மருத்துமனகைக்கு  கொண்டு செல்வது என்று கடந்து செல்கிறோம். ஆனால் நல்ல சமாரியன் அப்படிச் செய்யவில்லை. அவன் மற்றவருடைய துன்பத்தைத் தன்னுடைய பொறுப்பாக எடுத்துக்கொண்டான்.

கிறிஸ்தவர்களிலும், ஏன் நம் மத்தியிலும்,  ஒருவருக்கொருவர் அருகில் வாழ்ந்தாலும், உள்ளத்தில் தூரமாக இருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. இக்காலம் கட்டத்தில் நமக்கு அடுத்த வீட்டில் இருப்பவரின் பெயர் தெரியாமல் இருக்கலாம். குடும்பத்தில் ஒருவரின் மனவேதனை மற்றவருக்குத் தெரியாமல் இருக்கலாம். முக நூலில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கலாம். ஆனால் நம்மில் எத்தனை பேர் நமக்கு அடுத்திருப்பவரோடும்  சிறிது நரம்  மனம் விட்டு பேச விரும்புகிறார்?


நற்செய்தியில் நமக்கு  நெருக்கமானவர் மட்டுமல்ல; தேவைப்படும் ஒவ்வொருவரிடமும் இரக்கமும் அன்பும் காட்டுவதன் மூலம் நாமே அவர்களுக்கு அயலானாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களின் தேவையில் உதவுவதே உண்மையான அன்பு. நமக்கு பிடித்தவர்களுக்கே அல்லாமல், உதவி தேவைப்படும் ஒவ்வொருவரையும் நமது அயலானாகக் கருதி அன்பு செய்ய வேண்டும்.


நிறைவாக, இந்த உவமை, மற்றவர்களிடம் ஒரு தெளிவற்ற அல்லது பொதுவான அன்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் சொல்லப்படவில்லை. மாறாக, நடைமுறையிலும் செயல் வடிவிலும் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நமக்கு சவால் விடுக்கிறது.


கொள்ளையர்களால் தாக்கப்பட்ட அந்த மனிதன், நம்மைச் சுற்றிலும் ஏதோ ஒரு தேவையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், நம்மால் உதவி செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறார். உதாரணமாக: நம்முடைய வருகைக்காகவும் அன்பான வார்த்தைக்காகவும் காத்திருக்கும் தனிமையில் வாழும் வயதான அயலவராக சிலர் உளர். அயாத உழைப்பினால் சோர்ந்துபோன பெற்றோர். மற்றும் தனது மனக்கவலைகளை யாரிடமும் சொல்லாமல் அமைதியாகப் போராடிக்கொண்டிருக்கும் பணியிட சக ஊழியர் இப்படியாக எண்ணற்றோர் நம்மைச் சுற்றி  இருப்பர்


இவர்கள் அனைவரும் நம்முடைய அன்பையும், அக்கறையையும், உதவியையும் எதிர்பார்க்கும் “அடுத்திருப்பவர்கள் ” ஆக இருக்கலாம். உண்மையான கிறிஸ்தவ அன்பு வெறும் வார்த்தைகளில் அல்ல; பிறரின் தேவையை உணர்ந்து, அவர்களுக்கு நடைமுறையில் உதவுவதில் வெளிப்படுகிறது என்பதை இயேசு இன்று உணர்த்துகிறார்.


இறைவேண்டல்.


ஆண்டவரே, “நீயும் போய் அப்படியே செய்” என்ற உமது அழைப்பை ஏற்று, இன்று என் செயல்கள் வழியாக உமது அன்பை பிறருக்குக் காட்ட என்னை வழிநடத்துவீராக.  ஆமென்.

இயேசுவின் அழைப்பு:
“நீயும் போய் அப்படியே செய்.” (லூக்கா 10:37)


ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image