உலகம் மாறலாம் இறைவார்த்தை என்றும் மாறாது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

27 நவம்பர் 2026
 
திருவெளிப்பாடு 20: 1-4, 11- 21: 2
லூக்கா  21: 29-33 
 
உலகம் மாறலாம்; இறைவார்த்தை என்றும் மாறாது!

முதல் வாசகம்.

இவ்வாசகத்தில்  தீமையின் அதிகாரம் முடிவுக்கு வந்து, இறைவனின் நீதி வெற்றி பெறுவதைப் புனித யோவான் காட்சியாகக் காண்கிறார். அக்காட்சியில் அவர்,   கடவுளின்  அழிவைக் கொண்டுவரும் வானதூர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவருவதையும், படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன. அலகை என்றும் சாத்தான்   என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்து, அது வெளிவராதபடி படுகிழியில் தள்ளினார் என்றும் யோவான் குறிப்பிடுகிறார். 

தொடர்ந்து, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன் என்று குறிப்பிடுகிறா். அப்போது அங்கு வாழ்வின் நூல் திறக்கப்பட்டதையும் யோவான் கண்டதாகக் குறிப்பிடுகிறார். அதிலும், முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று என்று சித்தரிக்கிறார்.
 
நற்செய்தி.

இந்த நற்செய்தியில், இயேசு அத்திமரத்தையும் மற்ற மரங்களையும் உவமையாகக் கூறுகிறார். மரங்களில் தளிர்கள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கிவிட்டது என்பதை நாம் அறிந்துகொள்வதுபோல, உலகில் நிகழும் அடையாளங்களைக் காணும்போது இறையாட்சி நெருங்கிவிட்டதை அறிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு கற்பிக்கிறார்.

மேலும், வானமும் பூமியும் ஒழிந்துபோகலாம்; ஆனால் இயேசுவின் வார்த்தைகள் ஒருபோதும் ஒழியாது என்று உறுதியாகக் கூறுகிறார்.

சிந்தனைக்கு

இன்றைய  நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தால்,  இயேசு தமது இறுதி உரையை நிறைவு செய்யும் வேளையில், அன்றாட வாழ்வின் எளிமையையும் நித்திய வாழ்வின் ஆழமான உண்மைகளையும் எடுத்துரைக்கும் ஓர் உவமையை வழங்குகிறார். அவரது உரையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு அது நன்கு புலப்பட்டது. ஏனெனில், அவர் மக்ளுக்கு அறிமுகமான இயற்கை நிகழ்வுகளைக் கொண்டு போதித்தார். ஆம் அத்திமரத்தில் தளிர்கள் தோன்றித் துளிர்விடத் தொடங்கும்போது கோடைக்காலம் நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் அறிந்த ஒன்று.

இயேசு, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் அடையாளங்களைக் கொண்டு பருவகால மாற்றங்களை நாம் அறிந்துகொள்வதைப் போல, இயற்கையாக நிகழும்  பல்வேறு காலங்களையும்,  உலகளாவிய நிகழ்வுகளிலும் நமது சொந்த வாழ்விலும் வெளிப்படும் இறைவனின் செயல்பாடுகளையும் உணர்ந்து அறிய நம்மை அழைக்கிறார்.

மரங்களில் தளிர்கள் தோன்றுவது புதிய பருவகாலத்தின் வருகையை அறிவிப்பதைப் போலவே, “இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். ஆழந்து கவனித்தால், இயேசுவின் இந்த படிப்பினையானது, இறுதிக்காலத்தைப் பற்றிய ஓர் அறிவிப்பு மட்டுமல்ல; வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும், குறிப்பாக நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், இறைவன் அமைதியாகவும் தொடர்ந்து நம்மோடு நெருக்கமாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் ஓர் ஆழமான உண்மையாகும் உள்ளது.  இறைவனுக்கு உறங்கம் என்பதொன்று இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த உலகம் நிலையற்றது; ஆனால் இறைவனின் வார்த்தையும் அவருடைய வாக்குறுதியும் என்றும் நிலையானவை என்பதும் நமக்கான இன்றைய படிப்பினையாகும்.  திருவெளிப்பாட்டு நூலில், பழைய விண்ணகமும் மண்ணுலகமும் மறைந்து, புதிய விண்ணகமும் புதிய மண்ணுலகமும் தோன்றுவதைப் புனித யோவான் காண்கிறார். இது வெறும் உலகத்தின் முடிவைப் பற்றிய காட்சி அல்ல. தீமை, துன்பம், அநீதி, மரணம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் உருவாக்கப்போகும் புதிய வாழ்வின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறதும் செய்தியாக உள்ளது.

ஆம நற்செய்தியில், புதிய விண்ணகமும் புதிய மண்ணுலகமும் என்பது, பாவம், அநீதி, துன்பம், மரணம், கண்ணீர், வேதனை ஆகியவற்றால் நிறைந்த பழைய உலக ஒழுங்கு முடிவுக்கு வருவதைக் குறிக்கிறது. இது வெறும் பூமியின் அழிவைப் பற்றியது மட்டுமல்ல; தீமையின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதையும் குறிப்ப்தாக நாம் பொருள்கொள்ளலாம்.

நிறைவாக, புதிய விண்ணகம் என்பது நாம் இறந்த பிறகு செல்லும் ஓர் இடத்தை மட்டும் குறிக்கவில்லை; இறைவனின் அன்பும் நீதியும் அமைதியும் நிறைந்த புதிய வாழ்வை நோக்கி நாம் இன்றே பயணிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது என்பதை நினைவில் நிறுத்துவோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, என் வாழ்வில் நீர் உடனிருப்பதற்கான அடையாளங்களை உணர்ந்து அறியவும், உமது வார்த்தையை நம்பிக்கையோடும் அன்போடும் என்றும் பற்றிக்கொண்டிருக்கவும் எனக்கு உதவுவீராக. ஆமென். 


ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image