காவல் தூதர்கள், நமக்கான கடவுளின் கொடை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
02 அக்டோபர் 2026
தூய காவல் தூதர்கள்- நினைவு
யோபு 38: 1, 12-21; 40: 3-4
மத்தேயு 18: 1-5, 10
காவல் தூதர்கள், நமக்கான கடவுளின் கொடை!
முதல் வாசகம்.
யோபு நூலில் இருந்து தொடரும் இன்றை வாசகம், கடவுள் யோபுவிடம் தம்முடைய மாட்சியையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறார். கடவுள் புயலிலிருந்து யோபுவிடம் பேசுகிறார். உலகத்தைப் படைத்த கடவுளின் ஞானத்தையும் அதிகாரத்தையும் மனிதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை அவர் நினைவூட்டுகிறார்.
விடியலைக் கட்டளையிடுவது, பூமியின் எல்லைகளை அறிந்திருப்பது, இருளையும் வெளிச்சத்தையும் ஆளுவது போன்றவற்றைப் பற்றி கடவுள் சில கேள்விகளை யோபுவின் முன் வைக்கிறார். யோபுவின் (மனிதனின்) அறிவு வரையறுக்கப்பட்டது; மாறாக, கடவுளின் அறிவும் அதிகாரமும் அளவற்றது என்பதை யோபுவை உணரச் செய்கிறார்.
கடவுளின் அறிவுப் புகட்டலைக் கேட்ட யோபு தன் வரம்பை உணர்ந்து அவரது சிறுமையை ஒப்புக்கொள்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இறையரசில் பெரியவர் யார்? என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள். அதற்கு இயேசு ஒரு சிறு குழந்தையை அவர்களிடையே நிறுத்தி, குழந்தையைப் போல தாழ்மையுடன் மாறாவிட்டால் இறையரசில் நுழைய முடியாது என்று போதிக்கிறார்.
இறையரசில் உண்மையான பெருமை என்பது அதிகாரத்தில் அல்ல; தாழ்மையில் உள்ளது. குழந்தையைப் போல தாழ்மையுடன் இருப்பவரே இறையரசில் பெரியவர் என்று எடுத்துரைக்கிறார் இயேசு. இயேசுவின் பெயரில் ஒரு குழந்தையை ஏற்றுக்கொள்வது, இயேசுவையே ஏற்றுக்கொள்வது போன்றது. சிறியவர்களையும் பலவீனமானவர்களையும் அலட்சியப்படுத்தக்கூடாது; அவர்கள் கடவுளின் பார்வையில் மதிப்புமிக்கவர்கள் என்றும், அவர்களுடைய தூதர்கள் விண்ணகத்தில் கடவுளுடைய உடனிருப்பில் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என்று முன்னறிவிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்று திருஅவை தூய காவல் தூதர்களின் நினைவைக் கொண்டாட அழைக்கிறது. இந்த நினைவு நாளானது, ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து சிந்திக்கும்போது, முதலில் யார் இந்த தூய காவல் தூதர்கள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இயேசுவின் சீடர்கள் எழுப்பிய, உலகியல் சார்ந்த ஒரு கேள்வியுடன் நற்செய்தி வாசகம் தொடங்குகிறது: விண்ணரசில் யார் பெரியவர்?" இது அக்காலத்திலும் இக்காலத்திலும் மனிதர்களின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு விடயமாகவே உள்ளது என்றால் மிகையாகாது.
ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு வானதூதரை கடவுள் பாதுகாவலராக நியமித்துள்ளார். இது நம் ஒவ்வொருவருக்கும் உள்ளார்ந்த மதிப்பும் புனிதமான கண்ணியமும் இருப்பதை வெளிப்படுத்துகிறது. இவர்களின் துணையால் நாம் கடவுளின் திருவுளப்படி வாழ வேண்டியவர்கள். ஏனெனில், நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் கடவுள் நம்மை ஒருபோதும் தனியாக விட்டுவிடுவதில்லை என்பதையே இன்றைய நினைவு கொண்டாட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.
இன்று, உலகம் மனிதர்களை பல விதங்களில் மதிப்பிடுகிறது. ஒருவரின் பணம், பதவி, கல்வி, அதிகாரம், புகழ் ஆகியவற்றின் அடிப்படையில் அவருடைய மதிப்பை நிர்ணயிக்கிறது என்பது வெளிடைமலை. ஆனால் இறைவனின் பார்வையோ வேறுபட்டது. ஒருவர் அரசராக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி; புகழ்பெற்றவராக இருந்தாலும் சரி, யாருக்கும் அறிமுகமாகாதவராக இருந்தாலும் சரி—ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் மதிப்புமிக்கவர் என்று ஏற்று வாழ்வதே நமக்கான அழைப்பு.
நமக்கென ஒரு காவல் தூதரை இறைவன் கொடுத்திருக்கிறார் என்ற நம்பிக்கை, நாம் முக்கியமானவர், நம் வாழ்க்கை இறைவனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. எனவே, நாம் ஒருபோதும் நம்மையும் பிறரையும் ஒருபோதும் தாழ்வாக எண்ணக்கூடாது.
மேலும், “காவல் தூதர்” என்ற வார்த்தை நமக்கு ஒரு அழகான உண்மையை நினைவூட்டுகிறது. ஆம், இறைவனுடைய பாதுகாப்பு நம்மோடு இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். நம் வாழ்க்கையில் பல ஆபத்துகளையும் சோதனைகளையும் நாம் சந்திக்கிறோம். சில நேரங்களில் நாம் தனிமையாக உணரலாம். “என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை; என்னைக் கவனிப்பதில்லை” என்று நினைக்கலாம். இச்சூழலில் நமக்கான காவல் தூதர் நம் அருகில், நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம் நம்மில் ஒளிர வேண்டும்.
நிறைவாக, காவல் தூதர்கள் இறைவனுடைய பாதுகாப்பையும் பராமரிப்பையும் நமக்கு நினைவூட்டுகிறார்கள். ஆனால் காவல் தூதர் நம்முடைய விருப்பப்படி செயல்படுபவர் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாறாக, நம்மை இறைவனிடத்தில் வழிநடத்தும் இறைவனுடைய அன்பின் அடையாளமாக அவர்களை ஏற்க வேண்டும். காவல் தூதர் நம்முடன் இருப்பது, இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதன் அடையாளமாகும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, எனக்காக நிமிக்கப்பட்டுள்ள காவல் தூதரின் காவலில் நான் என் வாழ்க்கைப் பயணத்தை நீதியிலும் நேர்மையிலும் கடந்துச்செல்ல அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6012 228 5452
